உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/21/2014

| |

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு கொழும்பு,கோட்டை நீதவான் திலின கமகே, கொம்பனிவீதி பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் மாதம் 1ஆம் திகதிக்கு முன்னதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜாதிக பல சேனாவின் முக்கியஸ்தரான வட்டரக்க விஜித்த தேரர் தாக்கல் செய்திருந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரத்னவை தூசித்தமை தொடர்பில் முறையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
»»  (மேலும்)

| |

வாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வு

மகிந்த சிந்தனைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வாழ்வின் எழுச்சி தேசிய வேலைத்திட்டத்தின் ஆறாவது கட்டம் இன்று திங்கட்கிழமை நாடெங்கிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
நாடெங்கிலும் உள்ள 14022 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டங்கள் இன்று காலை 10.07மணியளவில் ஆரம்பத்துவைக்கப்பட்டன.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 346கிராம சேவையாளா பிரிவுகளிலும் இந்த நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்தின் புச்சாக்கேணியில் நடைபெற்றது.வாகரை பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்                 
முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான சி.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

»»  (மேலும்)

10/18/2014

| |

வடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழிவுபடுத்தும் உரையும்

வடமாகாண சபையால் நடாத்தப்படும்நடமாடும் சேவை வவுனியா வடக்குபுளியங்குளம்  இந்துக் கல்லூரியில்17.10.2014, 18.10.2014 ஆகிய தினங்களில்காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில்இடம்பெறுகிறது.   பலநாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய இந்த நடமாடும் சேவை வடமாகாண சபையின் நிர்வாக குழப்பம் காரணமாக இப்போதுதான் இடம்பெற்றுள்ளது.எனினும்கூட இந்த சேவையை திறம்பட நடத்த முதலமைச்சரால் முடியவில்லை.அதாவது முதலமைச்சருக்கும் பிரதம செயலாளருக்கும் இடையில் இழுபறியாக தொடரும்        அதிகார போட்டி இந்த சேவையில் உச்சத்தைதொட்டிருக்கிறது.நடமாடும் சேவைக்கு பிரதம செயலாளர்,மற்றும் பல அலுவலகர்கள் சமூகமளிக்காது பகிஷ்கரித்துள்ளனர்.இந்நிலை தொடர்ந்தால் முதலமைச்சரால்  வடமாகாண சபையை எப்படி கொண்டு நடாத்த முடியும் என அங்குவந்த மக்கள் கூரிக்கொண்டு திரும்பிசென்றிருக்கின்றனர்.


 நாட்டின் ஒரு பகுதியை கட்டியாளும் ஆளுமையுடன் செயல்பட வேண்டிய முதலமைச்சரோ அங்கு வந்து தனது செயலாளரை பற்றி குறை கூறி மக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு நடத்தியுள்ளார்.


முதலமைச்சர் உரை 

"இன்று இங்கு சில அலுவலர்கள் வராமைக்குக் காரணம் அரசியலே. இதைத்தான் நாங்கள் ஊரறிய உலகறியக் கூறிக்கொண்டு வருகின்றோம். அரசியல் எமது நிர்வாகத்தைச் சீரழிக்கின்றது. இவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது என்றால் கணவனைப் புறக்கணித்து அடுத்த வீட்டுக்காரனின் அரவணைப்பினுள் செயற்படும் மனைவி போல் இருக்கின்றது. அடுத்த வீட்டுக்காரன் அதிக அதிகாரங் கொண்ட அலுவலன் என்பதால் அவனை அண்டி வாழவும் கணவனைப் புறக்கணிக்கவும் எத்தனிக்கும் மனைவிமார் காலக்கிரமத்தில் தமது கடமையையும், கடப்பாட்டினையும் புரிந்து குடும்ப நன்மையை முன்வைத்து வாழ வேண்டி முற்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்குண்டு. அடுத்த வீட்டுக்காரன் சலுகைகள் தருவது தன் நன்மைக்கே என்பது மனைவிக்கு காலஞ்செல்லச் செல்லப் புலனாகும். அவன் தன் காரியம் முடிந்ததும் இவளை நட்றாற்றில் விட்டு விட்டுப் போய்விடுவான் என்பதும் புரியவரும்.

கணவனாகிய நாங்கள் இப்பேர்ப்பட்ட மனைவிமார்களின் தப்பான தரங்கெட்ட நடத்தையைப் பொறுமையுடன் கவனித்து வருவோம். எமக்கு எமது குழந்தைகளே முக்கியம். அவர்களுக்காக இந்தத் தரங்கெட்ட நடவடிக்கைகளையும் கண்காணித்து ஆனால் கவனிப்போடு செயலாற்றி வருவொம். நாட்கள் மாறும்; சூழல்கள் மாறும். மனைவிமார் எம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்டு ஒழுங்காகக் குடும்பம் நடத்துங் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று கூறி இன்றைய இந்த நடமாடுஞ் சேவையைச் செவ்வையாக நடாத்த எல்லோர் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றேன்". 
இந்த உரை முதலில் பெண்களை இழிவுபடுத்தும் கயமைத்தனமான உரையாகும் அரசியல் தலைவர்களே இப்படி எடுத்ததற்கெல்லாம் பெண்களை கேவலப்படுத்தும் வகையில் உதாரணங்களையும்   ஒப்பீடுகளையும் வைத்து உரையாற்றினால் பெண்கள் எப்படி சமுகத்தில் மதிக்கப்படுவர்? பெண்கள் வாழ்வு எப்படி மேம்படும்.முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் ஆன்மீககுரு  பிரேமானந்தவுக்கே வெளிச்சம். 
»»  (மேலும்)

| |

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை வெற்றி

1720அணு ஆயுதங்களை சுமந்து சென்று சுமார் 1000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் பெற்ற அதிநவீன நிர்பய் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்திய ராணுவத்துக்கு தேவையான பல்வேறு வகையான ஆயுதங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. அப்படி தயாரிக்கும் ஆயுதங்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பு பலகட்டங்களாக சோதிக்கப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு வகையான ஏவுகணைகளை உருவாக்கி ராணுவத்துக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தற்போது நிர்பய் என்ற அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ளது.
இந்த ஏவுகணை சப்–சோனிக் குரூயிஸ் ரக ஏவுகணையாகும். நிர்பய் ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. 800 முதல் 1000 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்க வல்ல இந்த ஏவுகணை இன்று காலை ஒரிசா மாநிலம், பலாசோர் அருகே உள்ள சந்திப்பூர் ஏவுகணை பரிசோதனை மையத்தில் சோதிக்கப்பட்டது. இது நிர்பய் ஏவுகணையின் 2 வது பரிசோதனையாகும். கடந்த 2013 ம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி முதல் முறையாக ஏவி சோதனை செய்யப்பட்டது.
ஆனால் ஏவுகணை பறந்து சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சிறிய தொழில் நுட்ப கோளாறு காரணமாக அந்த சோதனை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த ஏவுகணை முற்றிலும் பெங்களூரிலேயே தயாரிக்கப்பட்டது. வழக்கமாக இந்திய ஏவுகணைகள் ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தயாரிக்கபடுவது வழக்கம். ஆனால் ஒரு மாறுதலாக நிர்பய் பெங்களூரில் வடிவடைக்கப்பட்டது. இந்திய- பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஒரு பிரிவான பெங்களூர் ஏரோனாட்டிகல் வளர்ச்சி கழகத்தில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது.
ஏற்கனபே லக்சயா, நிஷாந்த், ரஸ்தம் ஆகிய ஏவுகணை தயாரிப்பில் பெங்களூர் மையம் முக்கிய பங்கு வகித்ததால் நிர்பய் ஏவுகணையை முழுவதுமாக அங்கேயே தயாரிக்க டிஆர்டிஒ அனுமதி வழங்கியது.
நிலத்தில் இருந்து அணு ஆயுதம் தாங்கி, குறிப்பிட்ட இலக்கை தாக்கும்  ‘நிர்பய்’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இன்று காலை 10.03  மணிக்கு ஒரிசா மாநிலம் பாலாசோர் கடற்கரையில் இந்த ஏவுகணை ஏவப்பட்டது. எதிர்பார்த்தபடி  குறிப்பிட்ட இலக்கை தாக்கியது. இரண்டாவது முறையாக இந்த ரக ஏவுகணை  பரிசோதிக்கப்படுகிறது. ஏற்கனவே பரிசோதிக்கப்பட்ட ‘யூமோஸ்’ ஏவுகணை 290 கிலோ  மீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டது.
அடுத்து விமானம், கப்பல்  மற்றும் கடலுக்கு அடியில் இருந்து தாக்கக்கூடிய ஏவுகணைகள் தயாராகி  வருகின்றன. இவற்றின் சோதனையும் விரைவில் நடைபெற உள்ளது. விமானத்தில்  இருந்து ஏவக்கூடிய ‘நிர்பய்’ ஏவுகணை சுகோய் 30 ரக போர் விமானத்தில் இருந்து  ஏவி பரிசோதிக்கப்பட இருக்கிறது. நிலத்தில் இருந்து தாக்கக் கூடிய ஏவுகணையை  விட, விமானத்தில் இருந்து தாக்கக்கூடிய ஏவுகணை சிறிதாக இருக்கும்.
இந்த தகவலை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன இயக்குனர் அவிநாஷ் சர்தர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

வட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா?

                                                                            தினக்குரல்---அ.நிக்ஸன்--
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. உள்ளக முரண்பாடுகள், வட மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல முடியாத சம்பந்தன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தாம் நினைத்ததையே செயற்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. கட்சி அரசியலை நடத்த முடியாத அல்லது நடத்த தெரியாத ஒரு நிலையா? அல்லது தமிழர்களிடையே யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் இருந்த மேட்டுக்குடித்தனமா என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.
வெளிப்படைத் தன்மையில்லை
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை அரசு முன்வைக்கவில்லை என்பது வேறு, அது 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பிரச்சினை. தற்போது வடக்கு – கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட நிலையில் வட மாகாண சபையின் அதிகாரங்களை உரிய முறையில் செயற்படுத்த அரசு அனுமதிக்கவில்லை என்பதும் இருக்கின்ற அதிகாரங்களை பிடிங்கி எடுக்கின்றார்கள் என்பதும் சர்வதேச ரீதியாக தெரிந்த விடயங்கள். இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுகள், மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணையும், அதன் மூலமான நிரந்த அரசியல் தீர்வுக்கும் பல தரப்பகளும் அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான காலகட்டத்தில் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தளவுக்கு பொறுப்புடன் செயற்படுகின்றது என்பது கேள்வியாகும்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 38 உள்ளூராட்சி சபைகளில் 90 வீதமான சபைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது ஆட்சியில் வைத்திருக்கின்றது. கிழக்கு மாகாண சபையில் 14 உறுப்பினர்கள், வட மாகாண சபையில் 30 உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் 14 உறுப்பினர்கள். ஆகவே, குறைந்தபட்சம் இத்தனை உறுப்பினர்களையும் வட மாகாணத்தின் ஆட்சி ஒன்றையும் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றதா? நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் ஆகிய கூட்டங்களைக்கூட தலைமை உரிய நேரத்தில் கூட்டுகின்றதா? அல்லது இவர்களுடன் ஆலோசித்து ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்களா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
கூட்டுப்பொறுப்பு இல்லை
யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளை விட ஒரு தேசிய இயக்கம் போன்ற செயற்பாடு ஒன்றுக்காகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மக்கள் தொடர்ந்தும் ஆதரித்து வந்தனர். ஆனால், இங்கு சாதாரண கட்சி அரசியல் செயற்பாட்டு முறைகள் கூட இல்லாத நிலையில் சில குறிப்பிட்ட நபர்களுடைய விருப்பு வெறுப்புகளுடன் கூட்டமைப்பு செயற்படுவதாக விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மூன்று விடயங்களை அவர்கள் முன்வைக்கின்றனர். ஒன்று – சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் என்ற மூன்று நபர்களுடைய செயற்பாடுகள். அதுவும் சம்பந்தன், சுமந்திரன் கூறுவதையே விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் செயற்படுத்துகிறார் என்பது முக்கியமானது. இரண்டாவது – கூட்டமைப்புக்குள் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் இல்லை, தனிநபர் அல்லது மேற்படி மூன்று நபர்களுடைய முடிவுகள். மூன்றாவது – தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் வட மாகாண சபைக்கும் கிடைக்கின்ற நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லை.
இந்த மூன்று குற்றச்சாட்டுகளிலும் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய ஜனநாயகமற்ற செயற்பாடுகள் என்பது முன்னாள் போராளிகளாக இருந்து தற்போது அரசியல் கட்சிகளாக செயற்படும் இயக்கங்களை வெளியேற்றும் சர்வாதிகார போக்காக காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கட்சிகளை விமர்சித்திருக்கின்றார். அப்போது கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட வராலாற்றை மற்றைய கட்சித் தலைவர் ஒருவர் எடுத்துக்கூறியுள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக வருவதானால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் சேர்ந்து அழைப்பு விடுக்க வேண்டும் என விக்னேஸ்வரன் அப்போது கூறியதையும், தான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சேராதவன் என்று குறிப்பிட்டதையும் அவர் ஞாபகப்படுத்தினார்.
சம்பந்தன் – சுமந்திரன் மௌனம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன்தான் சோந்து இயங்கவேண்டும். ஏனைய கட்சிகளுடன் சோந்து செயற்பட முடியாது என விக்னேஸ்வரன் கூறியதும், அதற்கு ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் பதிலளித்தபோதும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் எதுவுமே பேச முடியாத நிலையில் மௌனமாக இருந்தனர். அதாவது, தமது நிலைப்பாட்டை விக்னேஸ்வரன் வெளிப்படையாகவே கூறிவிட்டார் என்ற வெட்கத்தல் அவர்கள் இருவரும் அமைதியாக இருந்தார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாண சபையில் கூட்டமைப்புக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நான்கு பேர் அமைச்சர்கள், ஒருவர் தவிசாளர், ஒருவர் முதலமைச்சர் இந்த ஆறு பேரையும் தவிர ஏனைய 24 உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாடுவதில்லை என்றும், இந்த ஆறு பேருமே சகல முடிவுகளையும் எடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. நான்கு அமைச்சுகளும், முதலமைச்சரின் கீழ் 16 திணைக்களங்களும் உள்ளன. இந்த 24 உறுப்பினர்களுக்கும் இவற்றை பகிந்தளித்து நிர்வாகத்தை இலகுவாக்கலாம். ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அவ்வாறான திட்டங்கள் இருந்ததாக கடந்த ஒரு வருட ஆட்சியில் காண முடியவில்லை.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி கேட்கப்பட்டபோது பதிலளித்த விக்னேஸ்வரன், 24 பேரில் சயந்தன், ஆனோலட் என்ற இரு உறுப்பினர்களையும் தவிர ஏனையவர்களில் எந்த பயன்பாடும் இல்லை எனக் கூறியுள்ளார் என அறியமுடிகிறது. இதனால், வட மாகாண சபையின் நிர்வாகச் செயற்பாடுகள் மேலும் முடங்கக்கூடிய ஆபத்து உண்டு. அரசு அரசியல் அதிகாரங்களை வழங்கவில்லை என்பது ஒரு புறம். மறுபுறத்தில் இருக்கின்ற அதிகாரங்களை சரியாக தமக்குள்ளே பரவாலாக்கம் செய்து செயற்படுத்த முடியாத நிலையில் விக்னேஸ்வரன் உள்ளார். ஏனைய 24 உறுப்பினர்களும் வெறுமனே கூட்டங்களுக்கு மட்டும் வந்து செல்பவர்களாக காணப்படுகின்றனர். சரியான தலைமைத்துவம் இருந்தால் இந்த நிலை வந்திருக்காது என உறுப்பினர் ஒருவர் கூட்டத்தில் கூறியபோது சம்பந்தன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் என உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, நீர் ஈ.பி.ஆர்.எல்.எப்தானே என்று அமைச்சர் ஐங்கரநேசனை பார்த்து விக்னேஸ்வரன் இரகசியமாக கேட்டார் என்றும், ஆகவே இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற உணர்வுடன்தான் அவர் செயற்படுகின்றார் என்றும் அமைச்சர் ஐங்கரநேசன் தனது நெருக்கமான ஒரு ஊடகவியலாளரிடம் கூறியுள்ளார். இதேவேளை, அமைச்சுப் பொறுப்புகள் அல்லாத ஏனைய 24 உப்பினர்களும் இராஜினாமா செய்யும் மன நிலையில் இருப்பதாகவும் உள்ளகத் தகவல் தெரிவிக்கின்றன. ஆகவே, 1920களில் தேசிய இயக்கத்தின் பிளவுடன் ஆரம்பித்த இன முரண்பாடு, அதன் பின்னரான 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டம், 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தினால் சர்வதேசத்தை பேச வைத்தது. ஆனால் இன்று?


»»  (மேலும்)

10/17/2014

| |

ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்; தண்டனை நிறுத்திவைப்பு

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
»»  (மேலும்)

| |

ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி, ஸ்பெயின், நியூஸிலாந்து கடும் போட்டி

UN Defence Councilஐக்கிய நாடுகளின் பலம்மிக்க பாதுகாப்பு சபைக்கு இன்று ஐந்து புதிய அங்கத்துவ நாடுகள் தேர்வுசெய்யப்படவுள்ளன. இதில் வெனிசுவேலா அங்கத்துவம்பெறவுள்ளது பெரும் அவதானத்தை ஏற்படுத்தியிருப்பதோடு துருக்கி, ஸ்பெயின் மற்றும் நியூஸிலாந்துக்கு இடையில் போட்டி நிலவுகிறது.

193 அங்கத்துவ நாடுகள் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் பாதுகாப்புச் சபைக்கான புதிய அங்கத்துவ நாடுகளை தேர்வுசெய்யும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதில் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் தனித்து போட்டியிடுவதால் வெனிசுவெலாவின் சோசலிச அரசு பாதுகாப்புச் சபையில் இடம்பெறுவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.
அதேபோன்று ஆபிரிக்க பிராந்தியத்தில் தனித்து போட்டியிடும் அங்கோலா மற்றும் ஆசியா சார்பில் தனித்து போட்டியிடும் மலேசியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதில் கடந்த 2006 ஆம் ஆண்டு காலஞ்சென்ற சாவெஸ் ஜனாதிபதியாக இருந்தபோது வெனிசுவேலா பாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் பெறும் முயற்சி அமெரிக்காவால் தடுக்கப்பட்ட நிலையிலேயே அது இம்முறை போட்டியிடுகிறது. எனினும் இம்முறை வெனிசுவேலா போட்டியிடுவதற்கு அமெரிக்கா வெளிப்படையாக எதிர்ப்பை வெளியிடவில்லை.
இம்முறை பாதுகாப்பு சபைக்கான போட்டியில் மேற்கத்தேய பிராந்தியத்திற்கான இரண்டு ஆசனங்களுக்கு போட்டியிடும் நியூஸிலாந்து, ஸ்பெயின் மற்றும் துருக்கியின் மீதே அனைவரும் அவதானம் செலுத்தியுள்ளனர். பாதுகாப்புச் சபை அங்கத்துவத்தை பெறுவதற்கு இந்த மூன்று நாடுகளும் கடந்த ஓர் ஆண்டாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
“இது கடும் போட்டியாக இருக்கும்” என்று குறிப்பிட்ட துருக்கியின் ஐ.நா. தூதுவர் “நாம் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார். ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மனுவல் மார்கலோ குறிப்பிடும்போது, “அனைத்து போட்டியாளர்களும் வலுவானவர்கள். ஆனால் எனது நாடு சர்வதேச சமூகத்திற்கும் சேவைகள் செய்திருப்பதோடு அமைதிச் செயற்பாடுகளிலும் சம்பிரதாயமாக ஈடுபட்டு வருகிறது” என்றார்.
இதில் பிராந்தியத்தில் பதற்ற சூழல் அதிகரித்துள்ள நிலையிலேயே துருக்கி பாதுகாப்புச் சபை ஆசனத்திற்கு போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 15 அங்கத்துவ நாடுகள் கொண்ட பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர அங்கத்துவ நாடுகளும். எஞ்சிய 10 நாடுகளும் இரண்டு ஆண்டு தவணைக்கு பிராந்திய அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகின்றன.
பாதுகாப்பு சபை அங்கத்துவத்திற்கான பொதுச்சபை வாக்கெடுப்பில் ஒவ்வொரு நாடும் மூன்றில் இரண்டு வாக்குகளை அல்லது 193 உறுப்பு நாடுகளில் குறைந்தபட்சம் 129 நாடுகளின் ஆதரவை பெற வேண்டும். கடந்த 2007 ஆம் அண்டு லத்தீன் அமெரிக்க பிராந்தியத்திற்காக போட்டியிட்ட பனாமா மற்றும் வெனிசுவேலா இரு நாடுகளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாமல் 47 தடவைகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டுவர ஒரு உடன்பாட்டுக்கு அமைய லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் இருந்து பனாமாவுக்கு அங்கத்துவம் கொடுக்கப்பட்டது.
பாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் பெற்றிருந்த ஆர்ஜன்டீனா, அவுஸ்திரேலியா, லக்சன்பேர்க், தென் கொரியா மற்றும் ருவண்டா நாடுகளுக்கு பதிலாகவே புதிய ஐந்து நாடுகள் தேர்வுசெய்யப்படவுள்ளன. தேர்வாகும் நாடு எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் 2016 முடிவுவரை அங்கத்துவத்தை பெற்றிருக்கும்.
»»  (மேலும்)

| |

யாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் யாழ்ப்பாண பிள்ளைகள்'

யுத்த தாங்கிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப் பட்டதுதான் யாழ்தேவி ரயில் என்ற மனநிலையிலேயே யாழ். நகரில் பிள்ளைகள் அன்று இருந்தனர் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
திருக்கோணமலைக்கு விஜயம் செய்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும அங்கு நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதும் யாழ். ரயில் தொடர்பாக தனக்கு கிடைத்த அனுபவம் பற்றிய கதையொன்றையும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் சுமார் 8 வயது பிள்ளையொன்று வரைந்த ரயிலின் சித்திரம் ஒன்று என்னிடம் இருந்தது. யுத்த தாங்கிகள் சிலவற்றை ஒன்றோடு ஒன்றாக வரிசையாக இணைத்தே அந்த சித்திரம் வரையப்பட்டிருந்தது. இந்த சித்திரம் தொடர்பாக அதனை வரைந்தவரின் பின்னணி பற்றி விசாரித்தறியுமாறு
நான் எனது ஊடக பிரிவுக்கு பணித்தேன். சித்திரத்தை வரைவதற்காக அந்த பிள்ளை தனது தந்தையிடமும், தாயிடமும், மாமியிடமும் ரயில் என்றால் என்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த இவர்கள் “உனக்கேன் ரயில், ரயில் இங்கே வரப்போவதில்லை, உன் வேலையைப் பார்த்துக்கொண்டிரு” என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டனர்.
எனினும் ரயில் என்றால் என்ன? என்பதை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் பிள்ளையிடமிருந்து போகவில்லை.  அந்தப்பிள்ளை தனது மாமாவிடம் கேட்டது அவரும் யாழ். நகரில் அன்று ஓடித்திருந்த யுத்த தாங்கிகளை காண்பித்து இந்த யுத்த தாங்கிகள் போன்று சிலவற்றை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக இணைத்து ஒரு என்ஜின் இழுத்துக் கொண்டு வரும் அது போன்றே ரயில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தனது மாமா கூறிய விடயத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் அந்த பிள்ளை தனது கற்பனையில் உதித்த யாழ்தேவி ரயிலை சித்திரமாக வரைந்துள்ளார். இந்த விடயத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் புறப்படும் போது நான் அந்த சித்திரத்தை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தேன். யாழ். புகையிரத நிலையத்தில் இந்த சித்திரத்தை பார்வைக்கு வைக்குமாறும் கூறினேன் என்றும் அமைச்சர் டலஸ் கூறினார்.
»»  (மேலும்)

| |

மட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சையில் வெற்றிமட்டக்களப்பு மகளிர் உயர்தரப்பாடசாலையான வின்சன்ட் உயர்தரப் பாடசாலை மாணவிகளுக்கும் மட்/புனித சிசிலியா பெண்கள் பாடசாலைக்கும் இடையேயான மகளிருக்கான கிரிக்கட் போட்டி எதிர்வரும் 25.10.2014ம் திகதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னோடி தகுதிகாண் பயிற்சி போட்டி மட்/மாநகரசபை பாட்டாளிபுரம் மைதானத்தில் மட் /வின்சன்ட் பாடசாலை மாணவிகளுக்கும்,ஆசிரியர்களுக்குமான போட்டி இடம்பெற்றுது. இப்போட்டியில் மாணவிகள் வெற்றி பெற்று தமது பலத்தினை உறுதி செய்து கொண்டுள்ளனர் என பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.  
»»  (மேலும்)

10/16/2014

| |

“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஅத் கொள்கை”விசேட கருத்தரங்கு

Abdul Rauf Moulaviகிழக்கிலங்கையில், காத்தான்குடி மண்ணில் சுமார் முப்பத்தைந்து வருடங்களாக “எல்லாம் அல்லாஹ்” எனும் வழி கொள்கை அப்துர் ரஊப் மெளலவி என்பவரால் பிரச்சாரம் செய்யப்பட்டுவரும் இஸ்லாத்தின் மற்றுமொரு பிரிவினரின்  இந்த  பிரசாரம் நடைபெறவுள்ளது.

அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனியின் ஆலோசனையின் பேரில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் 18.10.2014 சனிக்கிழமை (அதாவதுநாளை) இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
உள்ளுர் மற்றும் வெளியூர் தலைசிறந்த உலமாக்களைக் கொண்டு இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் பங்கெடுத்து அஹ்லுஸ்ஸ_ன்னாவல் ஜமாஅத் கொள்கை பற்றி சரியான தெளிவினை பெற்றுக் கொள்ளுமாறும் அழைப்புவிடுக்கப்படுகின்றது.
»»  (மேலும்)

| |

எல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோசனை

ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைகளின் பதவிக்காலம் 5வருடங்களாக மட்டுப்படுத்துவதற்கும் அந்த மூன்று தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கு வழி சமைக்கும் வகையில், தேர்தல் சட்டங்களில் திருத்தத்தை கொண்டுவரவேண்டும் என்று தேர்தல்கள் கண்காணிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஃவ்ரல் கோரியுள்ளது.


பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கையொப்பமிட்டு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்பது தொடர்பில் நீங்கள் கவனம் செலுத்தியிருப்பதையிட்டு நாங்கள் நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

பஃவ்ரல்; அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இதுவரையிலும் ஜனாதிபதி தேர்தல்கள் 5, நாடாளுமன்ற தேர்தல்கள் 6, மாகாண சபைத்தேர்தல்கள் 16 மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் 14 என்ற அடிப்படையில் 41தேர்தல்களை கண்காணித்துள்ளது.
எங்களுடைய கண்காணிப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாக இருந்தாலும் 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் இன்றுவரையிலும் இரண்டு தருணங்களில் ஐந்து வருடங்களுக்கு 5 வருடங்கள் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

மீண்டும் ஒரு முறை 5வருடங்கள் நிறைவடையும் நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையான நான்கு வருட நாடாளுமன்ற காலத்துக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பதவிக்காலத்தின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. தேர்தல் வரலாற்றை பார்க்கையில் ஒவ்வொரு வருடமும் இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கீழ்கண்ட காரணங்கள் தொடர்பில் உங்களுடைய கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்.

1.    ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைகளின் பதவிக்காலம் என்பவற்றை 5வருடங்களாக மட்டுப்படுத்துவதற்கு தேவையான சட்டத்தை தயாரிக்க முயற்சித்தல்.

2.    இந்த மூன்று நிறுவனங்களுக்கான தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கு தேவையான சட்டத்தை இயற்றவேண்டும்.

3.    தேர்தலை நேரத்துக்கு நேரம் பகுதி பகுதியாக நடத்துவதை தவிர்க்கும் வகையில் சட்டத்தை இயற்றவேண்டும்.

4.    நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் வரவு- செலவுத்திட்டம் ஆகிய இரண்டும் தவிர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் அட்டவணையின் பிரகாரம்  நடப்பதற்கு தேவையான சட்டத்தை இயற்றுதல் ஆகிய யோசனைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த யோசனைகளுக் அப்பால் கீழ்கண்ட கோரிக்கைகளையும் பஃவ்ரல்; அமைப்பு முன்வைத்துள்ளது.

1.    தேசிய தேர்தலுக்கு அண்ணளவாக 2,500- 3,000 மில்லியன் ரூபாய் செலவாகும் என்பதுடன் தேசிய தேர்தல்கள் மூன்றையும் ஒன்றாக நடத்தினால் ஆகக் குறைந்தது  5,000 -6,000 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு மிச்சப்படும்.

2.    ஓவ்வொரு வருடமும் குறைந்தது இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலொன்றை நடத்துவதற்கு ஆகக்குறைந்தது 2 மாதங்கள் செலவானது என்று நினைத்துகொண்டோமாயின், வருடத்துக்கு நான்கு மாதங்கள் செலவாகியுள்ளன. அதனால் நாட்டின் அபிவிருத்திக்கான செலவிடப்பட்ட காலம் இல்லாமல் போயுள்ளது.

பகுதி பகுதியாக தேர்தல் நடத்துவதன் ஊடாக, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் மனித வளங்களையும் ஏனைய வளங்களையும் ஒரே பிரதேசத்தில் கேந்திரப்படுத்துவதன் ஊடாக, வாக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுக்க முடியும். என்றாலும் ஒரே நாளில் தேர்தலை நடத்தினால் வெளி அழுத்தங்கள் இன்றி ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தலாம்.

பகுதி பகுதியாக தேர்தலை நடத்துவதன் ஊடாக போட்டி கூடுவதுடன் தேர்தல் சட்டங்கள் மீறுதல், வன்முறைகள் மற்றும் மனித படுகொலைகள் அதிகரிப்பதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.

ஒரே நாளில் தேர்தலை நடத்துவதனால், அரசாங்க பலம் மற்றும் வளங்களை முறையற்ற ரீதில் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் குறையும்.

தேர்தலின் போது சுற்றாடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு மற்றும் பொலித்தீன் பாவனையை குறைத்துகொள்ளமுடியும்.
வாக்கை பயன்படுத்தும் 14 மில்லியன் மக்கள் தங்களுடைய தினத்தை ஒதுக்குவதால் வேலை நாளில் கிடைக்கும் 28 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

10/15/2014

| |

மாமேதை அம்பேத்கார் காட்டிய வழி

உலகமே  வியந்து நோக்கு மளவிற்கு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் (14-10-1956) அன்று நான்பூர் நகரில் அய்ந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களோடு பாபாசாகேப் அம்பேட்கர் அவர்கள் பவுத்தம் தழுவிய போது எடுத்துக் கொண்ட 22 உறுதி மொழிகள்:
22 உறுதி மொழிகள்   மாமேதை அம்பேத்கார் காட்டிய வழி 
1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி நான் வணங்கமாட்டேன்.
2. இராமன், கிருஷ்ணன் இரண்டும் அவதாரமென எண்ணி நான் வணங்கமாட்டேன்.
3. கணபதி, லட்சுமி மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று நான் வணங்கமாட்டேன்.
4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்து வந்ததாகவோ நான் நம்பமாட்டேன்.
5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்த்து நான் முறியடிப்பேன்.
6. பிறப்பு, இறப்பு நிகழ்ச்சிகளில் இந்து மதச் சடங்குகளை நான் செய்ய மாட்டேன்.
7. மகாபுத்தரின் போதனைகளையும், நெறிகளையும் மீறி நான் நடக்க மாட்டேன்.
8. பார்ப்பனர்கள் செய்யும் எந்த ஒரு ஆச்சாரச் செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன்.
9. மானுட சமத்துவத்தில் நான் மிகுந்த நம்பிக்கை வைப்பேன்.
10. சமத்துவத்தை நிலை நிறுத்த நான் முழு மூச்சாய் பாடுபடுவேன்.
11. மகாபுத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு நான் பின்பற்றுவேன்.
12. மகாபுத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று நான் செயல்படுவேன்.
13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி அவைகளை பாதுகாத்து நான் வாழ வைப்பேன்.
14. நான் பொய் பேச மாட்டேன்.
15. நான் களவு செய்ய மாட்டேன்.
16. நான் காமவெறி கொள்ள மாட்டேன்.
17. நான் மது அருந்த மாட்டேன்.
18. மகாபுத்தர் போதித்த அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறி களின் அடிப்படையில் என் வாழ்க் கையை நான் உருவாக்க முயற்சி செய்வேன்.
19. மானுட நேயத்திற்கு முரணான தும், சமத்துவம் இல்லாததுமான இந்து மதத்தை விட்டொழித்து இன்று முதல் மேன்மைமிகு பவுத்தத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கமென நான் உறுதியாக ஏற்கிறேன்.
21. இன்று பௌத்தனானதால் மறுவாழ்வு பெற்றதாய் நான் மனதார நம்புகிறேன்.
22. மகாபுத்தரின் கொள்கைக் கோட்பாட்டிற்கேற்ப புத்த தம்மத்திற் கிணங்க இன்று முதல் செயல்படு வேன்.
பிறவி இழிவினைத் தரும் இந்து மதத்திலிருந்து  மக்களோடு நாக்பூரில் (14.-10.-1956) புத்த மார்க்கம் தழுவியபோது அண்ணல் அம்பேத் கரும் 5 லட்சம் மக்களும் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகள்தான் இவை.
»»  (மேலும்)