3/28/2009

தமிழ் மக்களின் தீர்வு பற்றியல்ல தலைவரின் உயிர் பற்றியே எனது அக்கறை - சம்பந்தன் சூளுரை.


- கு.சாமித்தம்பி -பலரும் எதிர்பார்த்தது போல் சம்பந்தன் முரண்டு பிடித்துவிட்டார். தமிழில் ஒரு அழகான பழமொழி உண்டு. “ஒன்று தட்டில் ஏறவேண்டும், இல்லாவிடில் சுழகில் ஏறவேண்டும்.” தட்டிலும் ஏற மாட்டேன் சுழகிலும் ஏறமாட்டேன் என்ற அடம் பிடிப்பவர்கர்களை நாம் என்ன செய்யமுடியும். புலிகள் தமது முழுப்பலத்தையும் பாவித்து மாற்று வேட்பாளர்களை கொன்று குவித்து போதாக்குறைக்கு கள்ள வோட்டும் போட்டு பாராளுமன்றுக்கு அனுப்பியதற்கு சம்பந்தன் நன்றியுடையவராய் இருக்கிறார். நாட்டின் இன்றைய நிலைபற்றிப் பேச்சுக்களை நடாத்த ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார். ஏற்கனவே நடந்துவருகின்ற சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றாது ரி.என்.ஏ எம்பிக்கள் சர்வதேசம் எங்கும் பறந்து பறந்து இறுதி யுத்தப்பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போதிலும் ஜனாதிபதி கீழ் இறங்கி வந்து இந்த கூட்டமைப்பினரை மக்களின் பிரதிநிதிகள் என மதித்து பேச அழைத்திருந்தார். ஆனால் த.தே.கூ. இந்த அழைப்பை நிராகரித்திருக்கின்றது. கடந்த கால ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் பலனற்றப் போனதற்கு சிறிலங்கா அரசு மட்டும் பொறுப்பல்ல. தமிழ் தரப்பினரின் குத்துக்கரணங்களும் பின்கதவு ஒப்பந்தங்களும் குதியாட்டங்களுமே காரணம். இந்த சுய நலன்களுக்கான கணக்கு வளக்குகளுடன் வழமைபோன்றே தமிழரசுக் கட்சி பாரம்பரியத்தை சம்பந்தன் காப்பாற்றியிருக்கின்றார். “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று தினாவெட்டு பேசிய புலிகள் இன்று தின்னச் சோறின்றி வணங்கா மண்ணுக்காக காத்துக்கிடக்கிறார்கள். மக்களைக் கைவிட்டு புறமுதுகு காட்டி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமையானது யுத்தவெற்றி என்கின்ற இறுமாப்பை சிறிலங்கா பேரினவாத சக்திகளுக்கு தந்திருக்கின்றது. யாருடனும் பேசத்தேவையில்லை என்கின்ற நிலைமையை சிறிலங்கா அரசுக்கு இராணுவ வெற்றிகள் ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விட்டிருந்தார். இது இறுதித் சந்தர்ப்பங்களில் ஒன்று. புலிகளால் குற்றுயிராக்கப்பட்டு சிறிலங்கா இராணுவத்தின் முகாம்களுக்குள் தஞ்சம் அடைந்து அங்கிருந்துதான் தமிழரின் அதிகமான ஜனநாயகப் பக்கம் முளைத்தது. மாற்றுக்கட்சிகள் என்ற சொல்லப்படுகின்ற பெரும்பாலான கட்சிகள் மக்கள் பலத்தைக் காட்டி மக்கள் உரிமைகளை பேரம் பேசமுடியாத துர்ப்பாக்கிய நிலைமை இன்றுவரை நீடிக்கின்றது. இந்த நிலையில் இலங்கைத் தமிழரின் எதிர்காலம் என்பதோ, அதிகாரப் பரவரலாக்கம் என்பதோ இன்ற இருக்கின்ற மாகாணசபை முறைமையை காப்பாற்றுவதில் மட்டுமே தங்கியுள்ளது. எப்படியும் பேசித்தான் ஆகவேண்டியநிலை. ஆனால் கூட்டமைப்பினரின் இறுமாப்பு தேடிவந்த சீதேவியை புறம்காலால் எட்டி உதைக்கும் அக்கிரமக்காறனுக்கு ஒப்பானது. சம்பந்தனின் தலைமையில் எடுக்கப்பட்டிருக்கின்ற இந்த முடிவு தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய ஒரு பொறுப்பற்ற செயலாகும். அரசின் மீது மட்டுமே எப்போதும் குறைகூறும் கூட்டமைபினர் புலிகள் ஏறக்குறைய ஒடுக்கப்பட்டுள்ள இந்த நிலையில், யுத்தம் 21 சதுர கிலோ மீற்றருக்குள் குறுக்கப்பட்டுள்ள இந்த நிலையில் இலங்கைத் தமிழரின் எதிர்காலம் குறித்து அரசு என்ன தீர்வை வைத்திருக்கின்றது? என்ற கேள்வியை எழுப்ப இந்த சந்தர்ப்பத்தை ஏன் பயன்படுத்தியிருக்க முடியாது. கிழக்கை வடக்கோடு இணைக்க ஓயாது கோரிவரும் சம்பந்தன் கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்து மாகாணசபை ஆட்சி முறைமை ஏற்படுத்தபட்டு ஒருவருடமும் கடந்து விட்ட இந்த நிலையில் அங்கே என்ன அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? ஏன் அங்கே 13 வது திருத்தச் சட்டம் அமூலாக்கப்படவில்லை. ஏன் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை? என்கின்ற கேள்விகளுடன் ஜனாதிபதியை சந்தித்திருந்தால் அது அரசாங்கத்தின் பொறுப்பையும் முன்மாதிரியையும் நிரூபிக்குமாறு கேட்கின்ற சவாலை விடுவதாய் இருந்திருக்கும். ஆனால் கூட்டமைப்பினருக்கு மக்கள் உரிமை பற்றி எந்தக்கவலையும் கிடையாது. அவர்களின் கவலை எல்லாம் தலைவரின் உயிரைக் காப்பற்றுவதில் மட்டுமே தங்கியுள்ளது. யுத்தத்தை நிறுத்தினால் மட்டுமே பேசத் தயார் என்ற நிபந்தனை விதித்துள்ள கூட்டமைப்பினர் புலிகளை ஆயுதங்களை கீழே வையுங்கள் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு போகிறோம். என்று அறிக்கை விடத்தயாரா? அல்லது குறைந்த பட்சம் மக்களின் அழிவைத் தடுக்கவே யுத்தத்தை நிறுத்தக் கோருகிறோம் என்பது உண்மையானால் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடுவிக்கச் சொல்லி ஏன் இவர்கள் இன்னும் அறிக்கை விடவில்லை. மக்களைப்பற்றி அல்ல இவர்களின் கவலை பிரபாகரனின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரலாம் என்பதே இவர்களைப் பீடித்துள்ள இன்றைய கவலையாகும். அக்கிரமக் காரர்கள் அழிந்து போகக் கூடாது என்பதே கூட்டமைப்பினரின் கவலை. இதுதான் தமிழரசுக் கட்சியின் பழக்கதோசம், பாரம்பரியம். இப்படித்தான் மிதவாத அரசியலில் முகத்தைக் காட்டிக்கொண்டு வன்முறைகளை ஆதரிப்பது அவர்களது வழக்கம். எதிர்ப்பது ஒன்றின் ஊடாகவே தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதுதான் தமிழ்த் தலைவர்களின் பாரம்பரியம். ஏனென்றால் இன்று நேற்றல்ல என்றுமே தாம் என்ன கொள்கையில் இயங்குகின்றோம், எதைக் கோருகின்றோம் என்பதில் தெளிவான பார்வை எப்போதுமே இருந்ததில்லை. தமிழரசுக்கட்சி என்ற தமிழிலும் பெடரல் பாட்டி என்று பெயர் வைத்துக்கொண்டு இயங்கி பச்சோந்தி பரம்பரையில் வந்தவர் சம்பந்தன். தமிழீழப் பிரகடனம் செய்துவிட்டு பாராளுமன்றத்து கதிரைகளை அலங்கரித்தவர்கள் அவர்கள். இளைஞர்களை உருவேற்றி ஆயுதப்போராட்டத்தை வழிநடாத்தி இன்று இத்தனை அவலங்களுக்கும் காரணமானவர்கள் இந்த தமிழருசுக் கட்சியினர். இறுதியாகக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் நழுவவிட்டு விட்டு என்ன செய்யப்போகிறார்கள். பாவம் மக்களும் தலைவர் உள்ளே விட்டடிப்பார், உள்ளே விட்டடிப்பார் என்று காத்துக்கிடந்து ஏமாந்து போனார்கள். இன்னுமொருமுறை தலைவர் விட்டாலும் சம்பந்தன் விடமாட்டார் பாருங்கோவன் என்று காத்துக்கிடக்கட்டும்.


0 commentaires :

Post a comment