Election 2018

6/25/2009

இலங்கை வங்கியின் கிளை வாகரையில் இன்று(24.06.09) கிழக்கு முதல்வரினால் திறந்து வைப்பு.


கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குறிப்பாக கிராமப்புற மக்கள் தங்களது பொருளாதார திட்டங்களை மேம்படுத்துவதற்காகவும், எதிர்காலத்திற்கான சேமிப்பினை ஊக்குவிப்பதற்குமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பல்வேறு தடவை மத்திய மற்றும் இலங்கை வங்கியின் பொது முகாமையாளர்கள் மற்றும் பிராந்திய முகாரைமயாளர்கள், வங்கித் துறை சார்ந்த உயர்அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடியதற்கு அமைவாக இலங்கை வங்கியானது, தனது 15கிளைகளை கிழக்கு மாகாணத்தில் நிறுவுவது என உறுதியளித்திருந்தது.
அதன் வெளிப்பாடாகவே தற்போது முதற்கட்டமாக மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் முதற்கட்டமாக இலங்கை வங்கிக் கிளைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த 23ம் திகதி கரடியனாறு, கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களிலும் இன்று(24.06.09)வாகரையிலும் 6வது கிளையாக இவ் இலங்கை வங்கிக் கிளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி; சந்திரகாந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர், நாட்டில் எமது ஜனாதிபதி அவர்களின் தலைமையினால் பயங்கரவாதம் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனூடாக கிழக்கில் நல்லதோர் நிலை மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்பட்டு, தாம் ஒவ்வொருவரும் விரும்பிய தொழிலில் ஈடுபடுவதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது.
அண்மையில்தான் ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின்படி மீன்பிடித் தடை முற்றாக நீக்கப்பட்டு, முழு நேரமும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது. எனவே விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், சுயதொழில் என்பவற்றின் மூலம் தாங்கள் ஈட்டுகின்ற வருமானங்களில் செலவு போக எஞ்சிய ஒரு பகுதியினை எதிர்கால சேமிப்புக்காக சேமிப்பிலிட வேண்டும். அத்தோடு நீங்கள் மேற்கொள்கின்ற தொழில்களை முன்னெடுத்துச் செல்வதில் ஏதாவது நிதிப் பிரச்சினைகள் ஏற்படுமாக இருந்தால் வங்கியில் இலகு தவணை முறையில் மிகக் குறைந்த வட்டி வீதத்துடன் கடன்கள் வழங்கப்படும். அதனைப் பெற்று நீங்கள் உங்களது தொழிலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக வேண்டியேதான் மக்களின் காலடிக்கே வந்து சேவை வழங்கப்பகடுகின்றது.
அத்தோடு இவ் வங்கிக் கிளையினை அடகு பிடிக்கும் இடமாக மாத்திரம் கருதாது, அன்றாட பணக் கொடுக்கல் வாங்கல், சேமிப்பு, கடன் வசதிகள் பெறல் போன்ற அனைத்து முயற்சிகளையுமே மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.இந் நிகழவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, வாகரைப்பிரதேச தவிசாளர் சூட்டி,முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா,வாகரை பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி, இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் கே.டி. கருணாரத்ன, சிரேஸ்ட பொது முகாமையாளர் (அபிவிருத்தி)சந்திரசேன, சிரேஸ்ட முகாமையாளர் சபீக், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கீர்த்திசீலன் மற்றும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.


0 commentaires :

Post a Comment