6/14/2009

கிழக்கு மாகாணத்தின் திருமலை மாவட்டத்தில் இதுவரை காலமும் இருந்த மீன்பிடித்தடை நீக்கம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசினால் பயங்கரவாதம் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் வாழ்கின்ற பல்லின மக்களும் தமது ஜீவனோபாயத் தொழில்களை எந்தவொரு தங்கு தடைகளுமின்றி மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை அரசு மேற்கொண்டு வருகின்றது. இதில் விசேடமாக கிழக்கு மாகாணத்தின் பிரதான தொழிலில் 2வது இடத்தில் இருக்கும் மீன்பிடித் தொழிலுக்கு இதுவரை காலமும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் வேண்டுகோளின்படி முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் இருந்த மீன்பிடித்தடை நாளை(15.06.2009) முதல் நீக்கப்படும் என இன்று (14.06.2009) மூதூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ மற்றும் கிழக்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பான கடற்படைத் தளபதி ஆகியோர் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தார்கள்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், எமது மாகாணமானது மீன்பிடி மூலம் அதிக வருமானத்தை ஈட்டுகின்ற ஒரு மாகாணமாகும். எமது கிழக்கு பிராந்தியக் கடலிலே அதிகளவான மீன்கள் காணப்படுகின்றன. நீங்கள் இனிமேல் எதுவித தங்கு தடைகளுமின்றி உங்களது மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு ஒவ்வொருவரும் தனிநபர் வருமானங்களைக் அதிகரித்துக் கொண்டு நாட்டின் தேசிய உற்பத்தியிலும் தாங்கள் அதிகளவு செல்வாக்கு செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசுகையில் இன்று கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக திருமலையில் மீன்பிடித்தடை அகற்றப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இத்தடையினை நீக்குவது தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் பேசிவருகின்றேன். வெகு விரைவில் அம்மாவட்டங்களுக்கான மீன்பிடித் தடையும் நீக்கப்படும்.
இதுவரை காலம் கடலில் மிகக் குறுகிய எல்லைக்குள் உமது மீன்பிடி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நாளை (15.06.2009) முதல் அவ் எல்லை முதற்கட்டமாக அதிகரிக்கப்பட்டு இதுவரை காலமும் பயன்படுத்தப்படாமல் இருந்த 25 குதிரை வலு எஞ்சின்கள் கொண்ட இயந்திரப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளலாம். அத்தோடு அதிகாலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரை நீங்கள் கடலில் சென்று மீன்பிடிக்கலாம். திருமலை துறைமுகத்துக்குட்பட்ட கடல் எல்லைப்பரப்பில் குறித்த ஒருசிலர் மாத்திரம் முதற்கட்டமாக மீன்பிடிக்க முடியும், எதிர்காலத்திலும் இதுவும் தளர்த்தப்பட்டு முழுமையான சுதந்திரத்தோடு மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதியுடன் மற்றும் மீன்பிடி அமைச்சுடனும் பேசி தீர்வு காணமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு மீன்பிடி அமைச்சின் ஊடாக பல மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா, சுசந்த புஞ்சி நிலமே, நஜீப் ஏ மஜீத்,கிழக்கு மாகாண விவசாய மீன்பிடித்துறை அமைச்சர் து.நவரெத்தினராஜா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கடற்படைத்தளபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.0 commentaires :

Post a comment