12/25/2009

சுனாமி: நாளை 5 ஆண்டுகள் பூர்த்தி: வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் 9.25-9.27 வரை மெளன அஞ்சலி

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு நாளையுடன் 5 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இதனையிட்டு மட்டக்களப்பு, அம்பாறை, யாழ். மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளைய தினம் தேசிய பாதுகாப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுனாமியில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் நாளைய தினம் காலை 9.25 மணியிலிருந்து 9.27 வரைக்கும் மெளனாஞ்சலி செலுத்துமாறு அரசாங்கம் கேட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சமய நிகழ்வுகளும், நினைவுப் பேருரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதேச செயலக மட்டத்திலும், கிராம மட்டத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக நாட்டில் ஆகக் கூடுதலான உயிர், உடைமை இழப்புக்களை அம்பாறை மாவட்டமே சந்தித்தது. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுகள் கூடுதலான அழிவுகளை சந்தித்தது.

இம்மாவட்டத்தில் முப்பதுக்கு மேற்பட்ட பாடசாலைகள் அழிடிக்கப்பட்டதுடன் 28,000க்கு மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டும், சேதமாக்கப்பட்டும், 3800 பேரில் உயிர்களும் காவு கொள்ளப்பட்டன.

பொத்துவில், திருக்கோவில், அக்கரைப் பற்று, பாலமுனை, ஒலுவில், அட்டாளைச் சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் கோயில்கள், பள் ளிவாசல்கள், தேவாலயங்கள், விகாரைகள் என்பனவற்றில் சுனாமி அனர்த்தத்தினால் இறந்தவர்களுக்காக நல்லாசி வேண்டி மதவழிபாடுகள், பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிரார்த்தனைகள் என்பன இடம்பெறவுள்ளதோடு நினைவுச் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளன.

சுனாமி அனர்த்தத்தினால் இறந்தவர்களின் நினைவாக பாண்டிருப்பில் நிர்மாணிக்கப்பட் டுள்ள நினைவுத் தூபியில் மலரஞ்சலி செலு த்தப்படவுள்ளதுடன், இதனை முன்னிட்டு அன்னதான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

வவுனியாவில்

வவுனியாவில் பூந்தோட்டத்திலும், வெளிவட்டவீதி, சிந்தாமணி விநாயகர் ஆலயத்திலும் நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறி வித்துள்ளனர்.

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபை நிர்வாகத்தினரால் சிறுவர் பூங்கா மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபி முன்பாக 26ம் திகதி சனிக்கிழமை நாளை காலை 9.30 மணிக்கு நடை பெறும்.


0 commentaires :

Post a Comment