12/21/2009

ஜனாதிபதியை வெற்றிபெற செய்ய ரீ.எம்.வி.பி. கடுமையாக உழைக்கும்


img_8962ஜனாதிபதித் தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளால் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதற்காக கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடுமையாக உழைக்கும் என கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது என தனது கட்சியின் உயர் பீடம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. அத்துடன் ஜனாதிபதியையும் சந்தித்து எமது ஆதரவையும் வெளிப்படுத்தியிருக்கிறோம். இருப்பினும், சில ஊடகங்கள் எமது கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. முதலமைச்சர் முடிவு எடுக்க முடியாமல் தளம்பல் நிலையில் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். எமக்கு எவ்வித தளம்பல் நிலையும் கிடையாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது என்று எடுத்த தீர்மானத்தில் எதுவித மாற்றமும் இல்லை.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் போன்ற அபிவிருத்திப் பணிகளுக்கு பொறுப்பானவருமான பசில் ராஜபக்ஷ எம்.பியுடனும் பலமுறை சந்தித்து பேசியிருக்கிறோம்.

வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்றும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்துடனும் வருகை தந்தது மட்டுமல்ல ஜனாதிபதியை சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளேன்.

கிழக்கு மாகாணம் இன்று என்றுமில்லாதவாறு பாரிய அபிவிருத்தியை கண்டு கொண்டிருக்கிறது. இவற்றுக்கு மிக முக்கியமா இருப்பவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

கிழக்கு மாகாணம் குறித்து எமது நிலைப்பாடும் ஜனாதிபதியின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்கிறது. கிழக்கு மாகாணம் சுமுகமாக இருந்தாலேயே மாகாண சபை நிர்வாகமும் பலம்பெறும் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்0 commentaires :

Post a comment