12/11/2009

கோரகல்லிமடு வாழ் பொது மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு அமோக வரவேற்பு.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரானை அடுத்துள்ள கிராமமான கோரகல்லிமடு வாழ் பொது மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு மிகவும் பிரமாண்டமான ஓர் வரவேற்பினை ஏற்படுத்தி இருந்தார்கள். கோரகல்லிமடு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் மேற்படி வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. கோரகல்லிமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்; கலந்து கொண்ட பொதுமக்கள் தமது கிராமத்தினது குறைபாடுகளை எடுத்துக்கூறியதோடு, பாடசாலை, ஆலயம், வீதிகள் என்பன அபிவிருத்தி செய்யப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்கள். இதுவரை காலமும் எந்தவொரு அரசியல்வாதிகளும்; தமது கிராமத்துக்கு வருகைதராத சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வருகை தந்திருப்பது எமது கிராமத்திற்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதம் என்றும், அதற்காக எமது கிராமத்தின் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் அக்கிராம மக்களின் சார்பில் கிராமிய அபிவிரத்தி சங்க தலைவர் எஸ் கிரஸ்ணப்பிள்ளை குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், முதலமைச்சராகிய நான் இன்றுதான் உங்களது கிராமத்திற்கு வருகை தந்திருக்கின்றேன். நான் நேரடியாக இக்கிராமம் பற்றி நன்கு அறிந்தவன் என்ற வகையில், எதிர்வருகின்ற ஆண்டில் குறித்த சில அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள தீர்மானித்திருக்கின்றேன். அதனை கிராம அபிவிருத்திச் சங்கத்தினரிடம் நான் தெரியப்படத்தியும் உள்ளேன்;. ஆனால் எமது இலக்கு அபிவிருத்தி மாத்திரம் அல்ல. கிழக்கு மாகாணத்திலே பலமான ஓர் ஜனநாயக அமைப்பாக எமது கட்சி செயற்படுகின்றது. எனவே அக்கட்சியினை நாம் பலப்படுத்த வேண்டும். எந்த ஒரு சமூகத்திற்கும் அரசியல் என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. தற்போது எதனாலும் சாதிக்க முடியாதவைகளை அரசியல் பலத்தால் சாதித்து காட்டி வருகின்றோம். எனவே கடந்த காலங்களை எண்ணி நாம் கவலைப்படத்தேவையில்லை. கடந்த காலங்களால் ஏற்படுத்தப்படாத அபிவிருத்திகளையும், ஏனைய துறைசார் வளர்ச்சிகளையும் இப்போதே நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு எமக்கு தேவை ஒற்றுமையுடன் கூடிய அரசியல் பலமே. எனவே எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது கிராமிய மட்டங்களிலே இருந்து உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து, அரசியல் உறுதிப்பாட்டின் நிலையினை அவர்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றது. எனவே அனைவரும் ஒற்றுமை உரிமை, தனித்தவம் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கோரகல்லிமடு பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டிலும் முதலமைச்சர் கலந்து கொண்டார்.


0 commentaires :

Post a comment