11/12/2010

பாராளுமன்ற கட்டடத்தொகுதி வெள்ளக்காடு; நீர்நிரம்பிய நிலையிலும் 7 நிமிடம் அமர்வு தியவன்னா ஓயா பெருக்கெடுப்பு; எம்.பிக்கள், அமைச்சர்கள் படகுகள், கவச வாகனங்கள் மூலம் பயணம்

தியவன்னாஓயா பெருக்கெடுத்து பாராளுமன்ற கட்டத்தினுள் புகுந்து வீதிகள் அனைத்தும் நீரினால் நிரம்பி வழிந்த நிலையிலும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சபை அமர்வுகள் (ரிசீலீrgலீnணீy light) அவசர மின் விளக்குகளின் துணையுடன் சபை அமர்வுகள் சுமார் 7 நிமிட நேரம் நடைபெற்றது. சபை மண்டபத்தினுள் மின்சார விளக்குகள் எதுவும் இயங்கவில்லை. ஒளிப்பதிவு கருவிகளும் இயங்கவில்லை.
ஒலிவாங்கி கருவிகளும் இயங்கவில்லை. எனினும் ஹன்சாட் பதிவுக்கென எதிர்க் கட்சி மற்றும் ஆளும் கட்சி முன் ஆசனப் பகுதிகளில் ஒலிப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. நேற்று பகல் ஒரு மணி 03 நிமிடமளவில் பாராளு மன்றம் கூடியது. நேற்றைய தினசரி யின்படி மிக முக்கியமான 6 சட்டமூலங்கள் விவாதத்துக்கு எடுத் துக்கொள்வதென பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.
எனினும், பாராளுமன்ற கட்டடத்தை சூழவுள்ள தியவன்னாஓயா பெருக்கெடுத்தது மட்டுமல்ல, பாராளுமன்ற கட்டட தொகுதியினுள் புகுந்து நீரில் மூழ்கிய சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறிப்பிட்ட சட்டமூலங்களில் 6 சட்டமூலங்களை விவாதம் இன்றி சபையில் நிறைவேற்றுவதற்கு நேற்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஐ.தே.கவும் பூரண ஆதரவை வழங்கியது. இதற்கென ஐ.தே.க வை சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா பாராட்டினார்.
ஆறாவது சட்டமூலம் பிரிதொரு நாளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
இந்தவாரம், இன்று வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தபோதும் கடும் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக சபை முதல்வர் சபையில் அறிவித்தார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, பந்துல குணவர்தன, சரத் அமுனு கம, ரோஹன திஸாநாயக்கா, ஏ.எச். எம். அஸ்வர், மற்றும் தயாசிறி ஜயசேக்கர எம்.பி. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க உட்பட பல இளம் எம்.பிக் களும் சபைக்கு வருகை தந்திருந் தனர்.
ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, கமலா ரணதுங்க எம்.பி. போன்றோர் இராணுவத்தினரால் செலுத்தப்பட்ட பஜரோ வாகனங்களில் சென்றனர்.
இராணுவத்தினர் களமுனையில் உபயோகிக்கும் யுனிகோன் கவச வாகனம் மற்றும் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய குளிரூட்டப்பட்ட கவச வாகனங்களும் பாராளுமன்ற ஊடகவியலாளர்கள், எம். பிக்களை அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. பாராளுமன்றத்திற்குச் செல்லும் பிரதான பாதையின் இரு மருங்கிலும் காணப்படும் தியவன்னாஓயா பெருக்கெடுத்து பாராளுமன்ற விளையாட்டுத் திடல் வரை சென்றிருந்தது.
பாராளுமன்ற பிரதான வீதி சுமார் 4 அடி நீரில் மூழ்கிக் கிடந்தது. எது தியவன்னாஓயா, எது வீதி என்பதை கண்டறிய முடியாதவாறு எங்கும் வெள்ளநீர் நிறைந்து காணப்பட்டது.
நேற்றுக்காலை சுமார் 6.00 மணிக்கே பாராளுமன்ற ஊழியர்கள் ஓரிருவர் கடமைக்கு வந்துள்ளனர். கடும் மழை, வெள்ளம் காரணமாக கட்டடத்துள் நீர் புகலாம் என்ற சந்தேகத்தில் சில முன்னேற்பாடுகளை செய்யும் நோக்கில் வந்த இவர்கள், பாராளுமன்ற பொலிஸாரின் உதவியுடன் பாராளுமன்ற கீழ்த்தளத்திலுள்ள அறைகளில் பெறுமதிவாய்ந்த கணனிகள், புத்தகங்கள் போன்ற பொருட்களை பாதுகாப்பாக மேல் மாடிகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். முன்னேற்பாடாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.
கவச வாகனத்தில் சென்ற ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலினூடாக அழைத்துச் செல்லப்பட்டனர். சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருக்கும் நிலையில் 4 மாடிகளையும் படிவரிசைகளில் ஏறியே கடக்க வேண்டி இருந்தது. கும்மியிருட்டுக்கு மத்தியில் தட்டுத்தடுமாறி படிகளில் ஏறிக்கொண்டிருந்த எமக்கு ஒவ்வொரு மாடியின் அருகிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ரீசார்ஜ் டோர்ச் விளக்குகளை வைத்து வழிகாட்டினர். ஊடகவியலாளர்கள் அனைவரும் தனது கையடக்க தொலைபேசியின் ஒளியையும் ஒளிரச் செய்தவாறு முன்னேறினர்.
சபை அமர்வுகள் சில நிமிடங் களே நடக்கவுள்ளதால் கையடக்க தொலைபேசியினுடனேயே பத்திரி கையின் கலரிக்கு செல்லவும் அனும திக்கப்பட்டனர். ஆனால் கையடக்க தொலைபேசிகளை செயலிழக்கச் செய்தே அனுப்பினர். பாராளு மன்றத்துக்கு முன்பாக கட்டடத்தை அழகுபடுத்துவதற்காக கட்டப்பட் டுள்ள நீர்தடாகமும், தியவன்னா ஓயாவுடன் சங்கமமாகி இருந்தது. பாதை எது என அறியாமல் சாரதி ஒருவர் பஜரோ வண்டியை நீர்த் தடாகத்துள் செலுத்தியதால் வாக னம் நீரில் மூழ்கி குடைசாய்ந்து கிடந்தது.
அதன் பின்னர் வாகனங்கள் ஒழுங்கான பாதையைக் கண்டுகொள்வதற்கு ஏதுவாக இராணுவத்தினரும், பொலிஸாரும் உதவி செய்தனர்.
பாராளுமன்றத்தின் கீழ்த்தளம் நீரில் மூழ்கியதால் குழு அறைகள் முழுவதும் நீரினால் நிரம்பி காணப்பட்டன.
எதிர்வரும் 16ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும் என சபாநாயகர் அறிவித்தார். அதற்கு முன் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கும் ஊழியர்கள் கடுமையாக உழைக்க நேரிடும்.

0 commentaires :

Post a comment