11/13/2010

ஈ.பி.டி.பி உயர் மட்டக் குழு ஜனாதிபதியுடன் சந்தித்து பேச்சு நாவற்குழி குடியேற்ற விடயம்; சமகால அரசியல் நிலைபற்றி ஆராய்வு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான உயர்மட்டக் குழு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும், சம காலத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு வாழ்வாதார விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது பிரதான விடயமாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான யாழ். நாவற்குழி நிலத்தில் தென்னிலங்கை மக்கள் சட்ட விரோதமான முறையில் குடியேறியிருக்கும் விடயம் குறித்து ஈ.பி.டி.பி. தரப்பினரால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
எந்த மக்கள் சமூகமாக இருப்பினும் அவர்கள் விரும்பிய பிரதேசங்களில் வாழ்வதற்குரிய ஜனநாயக உரிமைக்கு தாம் மாறானவர்கள் இல்லை என்றும் ஆனாலும் இனங்களுக்கிடையிலான மனக் கசப்புகளை உருவாக்கும் வகையிலான சட்டவிரோத குடியேற்றங்கள் இன ஐக்கியத்திற்கு விரோதமான ஒரு நடவடிக்கையாகும் என்றும் ஈ.பி.டி.பி தரப்பினரால் ஜனாதிபதியிடம் எடுத்து கூறப்பட்டதாக ஈ.பி.டி.பி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
நாவற்குழியில் குடியேறியிருக்கும் தென்னிலங்கை மக்களை ஏற்கனவே சந்தித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்கு தனக்கு 3 மாத கால அவகாசம் தேவை என ஏற்கனவே தெரிவித்திருந்ததை ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்தியிருந்ததோடு அந்த மக்கள் ஏற்கனவே யாழ். குடாநாட்டில் சொந்த இருப்பிடங்களில் வாழ்ந்தமைக்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும், அவர்களில் சிலர் வாடகை வீடுகளில் மட்டுமே யாழ். குடாநாட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள் என்றும் ஈ.பி.டி.பி தரப்பில் எடுத்து விளக்கப்பட்டதோடு யாழ். மாவட்டத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களில் நிலமற்ற மக்கள் தொகையினர் அதிகமாக உள்ளனர் என்றும், அவர்களுக்கான நிலப்பங்கீடு என்பது இதுவரை வழங்கப்படாத ஒரு சூழலில் தென்னிலங்கையில் இருந்து வந்திருந்த மக்கள் சட்ட விரோதமாக நாவற்குழி நிலத்தில் குடியேறியிருப்பது யாழ். மாவட்ட நிலமற்ற மக்கள் மத்தியில் கசப்புணர்வுகளையே உருவாக்கும் என்றும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி; அரசாங்கத்திற்கு சங்கடத்தை உருவாக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களை சிலர் திட்டமிட்டு தூண்டி விட்டிருக்கலாம் என்று தெரிவித்திருந்ததோடு ஈ.பி.டி.பி. தரப்பில் இருந்து எடுத்து விளக்கப்பட்ட நியாயங்களை தான் புரிந்துகொள்வதோடு இது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்தும், தமிழ் மக்கள் முகங்கொடுத்து வரும் சமகால பிரச்சினைகளில் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதார வசதிகளை மேலும் உருவாக்கி கொடுப்பதோடு எஞ்சியுள்ள சிறுதொகை மக்களும் மீள்குடியேறுவதற்கான தடைகளை விரைவாக அகற்றி அவர்களுக்கான அர்த்தமுள்ள மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான இச்சந்திப்பின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தரப்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவரும், யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகச் செயலாளர் கே. தயானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 commentaires :

Post a comment