11/24/2010

தன்னலம் பாராது சேவையாற்றிய பெருந்தகை கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அன்னாரின் ஞாபகார்த்த தினம் இன்று

யாழ்ப்பாணத்தில் ஒரு மேல் மத்தியதர முஸ்லிம் குடும்பத்தில் 1911 இல் பிறந்தார். 62 ஆண்டுகளின் பின்பு கொழும்பில் இறையடி சேர்ந்த அன்னாரின் வாழ்க்கையில், அவர் ஒரு சிறந்த கல்வியாளனாக, திறமை மிகு நிர்வாகியாகக் கல்வியியற் பேராசானாகத் திகழ்ந்து உருவாக்கி நிலைநிறுத்தி வெற்றித்தடம் பதித்த சாதனைகள் பலவாகும்.
கலாநிதி அசீஸ் அவர்கள் சிறுவனாக இருந்த போது இஸ்லாமியச் சூழலில் வளர்ந்தார். பின்னர் அவரின் வாலிபப் பருவம், சிறு வயதில் பெற்றிருந்த சன்மார்க்க வழிமுறைகள் மூலமாக மேலும் வலுவுற்றிருந்தது.
இஸ்லாம் மார்க்கம் போதிக்கும் சிறப்பான கட்டொழுக்கம், தயாள மனோபாவம், சமூக சேவை உணர்வு ஆகிய நன்னெறிகளில் பெரிதும் நம்பிக்கைகொண்டு, மரியாதையுடன் அவற்றைப் பேணி வளர்த்ததுடன், தன்னுடைய குடும்ப வாழ்விலும் அன்னார் ஒரு சீரிய குணாளக் குடும்பத் தலைவராகவும் உதாரண சீலத் தந்தையாராகவும் திகழ்ந்தார்.
அன்றைய காலம், இலங்கையில் பாரசீக நாட்டின் உதவித்தூதராகப் பணியாற்றிய சமாதான நீதவான் எம். ஐ. முகம்மது அலி என்பவரின் பேத்தியான உம்மு குலுதூம் அவர்களை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்றார். இந்த உதாரணத் தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் முறையே மரீனா, அலி மற்றும் இக்பால் ஆவர்.
யாழ்நகரில் கற்றோரும் மற்றோரும் போற்றிய வைத்தீஸ்வரா வித்தியாலயம் மற்றும் யாழ். இந்துக் கல்லூரி ஆகியவற்றில் முறையே ஆரம்பக் கல்வியையும், இரண்டாம் நிலைக் கல்வியையும் கற்றார். இவர் தமிழ் இலக்கியம், மற்றும் கலாசாரம் ஆகிய பாடங்களில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். அன்றைய சூழலில் பிரசித்தமான கல்லூரிகளில் ஒரு முஸ்லிம் மாணவன், தன்னுடைய கற்கைகளில் ஒளிபாய்ச்சிப் பிரகாசித்தமை, ஒரு வியக்கத்தகு விடயமாகும்.
1933 ஆம் ஆண்டில் கலாநிதி அசீஸ் அவர்கள், லண்டன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைச் சிறப்புப் பட்டதாரியாகச் சித்தியடைந்ததுடன், இங்கிலாந்தில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பைத் தொடர்வதற்கு அரச புலமைப் பரிசிலை வென்றெடுத்தார். இருப்பினும், அன்றைய கால கட்டத்தில் ஈடு இணையில்லையெனக் கருதப்பட்ட அரச சேவையின் அதி உச்சி உத்தியோகமான சிவில் சேவையில் இணைந்து கொண்டார்.
இந்நிகழ்வில் 1935 இல் இலங்கை பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்த போது இடம்பெற்றதொன்றாகும். இந்த அதி உயர்ந்த பதவியில் இணைந்த முதலாவது முஸ்லிம் என்ற சாதனையும் கலாநிதி அசீஸ் அவர்களையே சார்ந்ததுடன் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மனோ திடத்தையும் உயர்த்த உதவியது. அவருடைய சிவில் சேவைக்காலத்தில் அவர் இரண்டு முக்கிய செயற்றிட்டங்களை மேற்கொண்டார்.
அன்று, கண்டி மாவட்டத்தை வாட்டிவதைத்து பாரிய அளவில் வியாப்பித்திருந்த மலேரியாத் தொற்று நோயைப் பொறுப்புணர்வுடன், வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர். அன்றைய சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளராக அரும்பெரும் சே¨யாற்றிய அசீஸ் அவர்களே பற்றிப் படர்ந்திருந்த, பயங்கர நோயைக் கட்டுப்படுத்திய திறமைசாலி அசீஸ் என்று பலராலும் புகழாரம் போடப்பட்டார்.
1940 ஆம் ஆண்டு காலப் பகுதியில், அவர் கிழக்கு மாகாணக் கல்முனையில், உதவி அரச அதிபராகக் கடமை புரிந்த காலத்தில் பெரியதொரு சவாலை எதிர்கொண்டார். இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அது. இதன் காரணமாக, இலங்கையில் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அச்சம் தலைதூக்கியது.
கலாநிதி அசீஸ் அவர்களின் அயராத அர்ப்பணிப்புடனான உழைப்பின் பிரதி பலனாக இரண்டே இரண்டு வருடங்களில் அந்தப் பிரதேசம் உணவு உற்பத்தியில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. போற்றிப் புகழத்தகும் வண்ணம், அப்பிரதேசத்தை கிழக்கின் உணவுக் களஞ்சியமாகத் திகழச் செய்தவர் அரச அதிபர் அசீஸ் அவர்களே நாடு முழுவதற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவை இது என அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இவ்வனைத்துப் பணிகளிலும் ஒப்பாரும் மிக்காரும் அற்றவராகத் திகழ்ந்த கலாநிதி அசீஸ் அவர்களுக்குத், தன்னுடைய இனத்தைச் சேர்ந்த, கிழக்கு மாகாணத்து முஸ்லிம் மக்களின் சமூக நிலைப் பின்னடைவு கவலையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இவர்கள் வறுமையில் வாடியவர்களாகவும் கல்வியில் பின்தங்கியவர்களாகவும் ஓரங்கட்டப்பட்ட ஒரு சமூகமாக இருந்தமை கண்டு வருந்தினார்.
கல்முனையில் பணியாற்றிய காலப் பகுதியில், கலாநிதி அசீஸ் அவர்களுக்கு மனவலுவுடைய புத்திஜீவிகள் இருவரின் நட்புக் கிடைத்தது. சுவாமி விபுலானந்தர் அவர்களும், அப்துல் காதர் லெவ்வை அவர்களும் இவ்விருவருமாவார். சுவாமி விபுலானந்தர் அவர்கள் ஒரு பேராசானாகவும் கல்விமானுமாக விளங்கியவர். அப்துல் காதர் லெப்பை அவர்கள், ஒரு இலக்கியப் படைப்பாளியாகவும் கவிஞருமாகத் திகழ்ந்தவர். இவ்விருவரும் சிறந்த வலுமிகு சிந்தனையாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் விளங்கினார்கள்.
சிறந்த கல்வியைப் புகட்டுதல் மூலமாக மட்டுமே, நாட்டிற்கு அவசியமாகத் தேவைப்பட்ட, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் திடமாக நம்பினார்கள். கருமத்திலும் வாழும் தருமத்திலும் கண்ணும் கருத்துமாக விளங்கிய கலாநிதி அசீஸ் அவர்களின் உள்ளுணர்வில், அவ்விருவரும் கொண்டிருந்த கருத்துக்கள் ஆழமாய்ப் பதிந்தன.
நாட்டின் சுயேச்சையானதும் நியாயமானதுமான ஜனநாயகச் சமூகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் அதன் மூலமாகப் பின்னடைவு கண்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த வேண்டுமெனத் தன்னிடம் குடிகொண்டிருந்த முதன்மைத் தூரநோக்கிற்கு இவ்விருவரினதும் கருத்துக்கள் உந்து சக்தியை வழங்கின.
1948இல் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியைக் கையேற்பதற்காகக் கலாநிதி அசீஸ் அவர்கள், உரிய காலத்திற்கு முன்னதாகச் சிவில் சேவை உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அப்போது அக்கல்லூரியின் அதிபராக இருந்த கலாநிதி ரி. பி. ஜாயா அவர்கள், சுதந்திர இலங்கையின் முதலாவது அமைச்சரவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். முஸ்லிம் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டுமெனத் தான் கண்டுகொண்டிருந்த கனவை நனவாக்கும் ஓர் அரிய சந்தர்ப்பமாக அன்னாருக்கு இது அமைந்தது.
பேரும் புகழும் தருவதும் மக்களின் மதிப்பைப் பெற்றதும் பின்னொருநாள், உயர் பதவி வகிக்க வழி வகுக்கக் கூடியதுமான மாண்புமிகு சிவில் சேவையைத் தன்னுடைய சமூக நலனுக்காகத் துறந்த கலாநிதி அசீஸ் அவர்களின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர் எடுத்த இந்தத் தியாகச் செயல் பலருக்கு முன்னுதாரணமாக இருந்தது. தன்னுடைய கனவை நனவாக்க வேண்டுமென்ற உத் வேகத்துடனும் பாரிய உற்சாகத் துடனும் ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியைக் கையேற்றார்.
கலாநிதி அசீஸ் அவர்கள், ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக 1948 லிருந்து 1961 வரையும் சேவையாற்றினார்கள். இந்தப் பதின்மூன்று ஆண்டுகாலப் பகுதி, ஸாஹிராக் கல்லூரியின் பொற்காலமென வர்ணிக்கப்படுகிறது. தேசிய மட்டத்தில், கல்வி, விளையாட்டு மற்றும் கலாசார நடவடிக்கைகளில், உயர் சிகரக் கலைக்கூடமாக ஸாஹிராக் கல்லூரி திகழ்ந்தது.
சிந்தனைத் தெளிவும் நாவண்ணமும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த அதிபர் அசீஸ் அவர்கள் செந்தமிழிலும் அழகு ஆங்கிலத்திலும் சொற் பொழிவாற்றக் கூடிய வல்லவராகத் துலங்கினார்.
அன்னார் பெருமுயற்சிகள் மேற்கொண்ட போதிலும், ஸாஹிராக் கல்லூரியை ஒரு முஸ்லிம் பல்கலைக்கழக நிலைக்கு உயர்த்த வேண்டுமென்று கொண்டிருந்த பணிக்கூற்று துரதிர்ஷ்ட வசமாகச் சாத்தியப்படாது போயிற்று. இருப்பினும், ஸாஹிராவிலிருந்து ஓய்வுபெற்றுப் பன்னிரெண்டு வருடங்களின் பின்பு, அவருடைய நீண்ட நாள் கனவு நனவாகும் நல்ல நாள் உதித்தது.
1973ஆம் ஆண்டில் பேருவளையில், ஜாமியா நZமிய்யாக் கலாபீடம் உருவாகுவதில் பெரும் பங்கு கொண்ட கலாநிதி அசீஸ் அவர்களின் அழியாத ஆசை, இக்கலாபீடம் உருவாகியதன் மூலமாக ஓரளவு நிறைவேறியது. அவர் ஏற்கனவே தோன்றுவித்திருந்த இரண்டு அமைப்புக்கள், இலங்கை வாழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்குத் தொடர்ந்தும் பெரும் பணியாற்றி வருகின்றன.
1945 இல் அன்னார் உருவாக்கிய ‘இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியம்’ தத்தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு வசதி வாய்ப்புக்கள் அற்று, அல்லலுற்ற இளைஞர் யுவதிகளுக்கு நிதி உதவி வழங்கி வந்துள்ளதுடன், தொடர்ந்தும் இப்பணி செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 1950 ஆம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கத்தை ஆரம்பித்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை இலங்கையில் பல கிளைகளை உருவாக்கி, இளைஞர்களுக்குச் சமூகப் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றது.
1951இல் அன்னார் எம். பி. ஈ. பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டார். அன்னாரை ஒரு தேசிய வீரனாகக் கணித்துள்ள அரசு, அவரைத் தேசிய மட்டத்தில் கெளரவிக்குமுகமாக, 1986இல் அவருக்கு நினைவு முத்திரையை வெளியிட்டு மரியாதை செலுத்தியது.
1980ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவின் போது, அவர் இறந்த பின்னான, இலக்கியக் கலைக் கலாநிதிப்பட்டம் வழங்கிக் கெளரவித்தது. இந்தியத் தலைநகரமான புது டில்லியில் அமைந்துள்ள ‘இலக்கு கற்கைகளுக்கான நிறுவனம்’ ‘20ஆம் நூற்றாண்டின் 100 மாபெரும் முஸ்லிம் தலைவர்’களில் ஒருவராகக் கலாநிதி அசீஸ் அவர்களைத் தெரிவு செய்து உலகளாவிய புகழை அவருக்கு ஈட்டிக்கொடுத்தது.
கலாநிதி அசீஸ் அவர்கள் ஏற்படுத்திய சாதனைகள் தற்செயலாக நிகழ்ந்தவைகள் அல்ல. கண்ணும் கருத்துமாக வாழ்ந்ததினாலும், அயராக முயற்சியாலும் கடின உழைப்பாலும், இவை அவரை வந்தடைந்தன. அவர் வாழ்ந்த நல்லொழுக்கத்துடன் கூடிய சாதாரண வாழ்க்கை, அவர் பற்றிய நம்பகத்தன்மையை மக்களிடையே வளர்த்தது.
அவருடைய வாழ்நாட்கள் சமூக நல சேவைகளுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டன. அவருடைய பார்வை தூர நோக்குடையதாகவே இருந்தது. 1973ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆந் திகதி நிகழ்வுற்ற அன்னாரின் மறைவு 20ஆம் நூற்றாண்டின் வரலாற்று ஏட்டில் ஒரு முற்றுப்பெற்ற அத்தியாயம் ஆகும். ஆனால், அவர் தனக்கென வாழாமல் பிறர் நலன் பேணியவர் என என்றும் நினைவில் இருக் கின்றார்.

0 commentaires :

Post a comment