11/28/2010

பாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை; இருதரப்பு பேச்சு இன்று ஆரம்பம்

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி நேற்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.
நேற்று பிற்பகல் 4.30 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். ஜனாதிபதி சர்தாரிக்கு விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள சர்தாரிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
எதிர்வரும் 30ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்தாரி, இலங்கை அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்.
இவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி. மு. ஜயரட்ன, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் 40 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரோமி, பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார், பாக். வர்த்தக சம்மேளனத் தலைவர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகப் பதவிப் பிரமாணம் செய்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் சர்தாரி ஆவார்.
இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீபா வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக ஆராயப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் இலங்கையுடன் மிக நீண்டகாலம் நட்புறவு பேணும் நாடு. பல்வேறு இக்கட்டான காலகட்டங்களில் இலங்கைக்கு கைகொடுத்து உதவிய நாடு.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி 2008ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார். சார்க் அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் அவரது விஜயம் அமைந்திருந்தது.
ஜனாதிபதி பர்வேஷ் முஷரஃப் 2002ம் ஆண்டு பாக். அரச தலைவராக வருகை தந்திருந்தார்

0 commentaires :

Post a comment