11/07/2010

இம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக விசேட செயலகமொன்று அமைக்கப்படவுள்ளது

வட மாகாண முஸ்லிம்கள் பற்றி நீண்ட காலத்துக்குப் பின் ஒரு நல்ல செய்தி. ஆறு மாத காலத்துகுள் அவர்களைச் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக விசேட செயலகமொன்று அமைக்கப்படவுள்ளது என்பதே அச்செய்தி.
வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இருபது வருடங்கள் கழிந்துவிட்டன. இவ்வளவு காலத்துக்குப் பின் இப்போதுதான் இம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக உருப்படியான ஒரு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனக் கூறுவது தவறாகாது.
புலிகளுக்கு எதிரான இறுதி இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் இவர்களையும் மீள் குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். என்ன காரணத்தினாலோ அது நடக்காதது கவலைக்குரியது.
போனது போகட்டும். இன்று புத்தளத்திலும் வேறு இடங்களிலும் தற்காலிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களுக்கு வட மாகாணமே வரலாற்று ரீதியான வாழ்புலம். தமது சொந்த மண்ணில் வாழும் போது கிடைக்கும் நிம்மதி வேறெங்கும் கிடைக்காது. வட மாகாண முஸ்லிம்கள் தங்கள் சொந்த மண்ணில் வாழும் காலம் மீண்டும் நெருங்கி வருகின்றது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.
வட மாகாணத்தில் முஸ்லிம்களும் தமிழ் மக்களும் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்தவர்கள். ஒருவரின் சுகதுக்கங்களில் மற்றவர் உணர்வுபூர்வமாகப் பங்கேற்றவர்கள். அப்படியான உறவைப் பிரித்து முஸ்லிம்களைப் புலிகள் வெளியேற்றிய போது, தமிழ் மக்கள் எதிர்க்குரல் எழுப்பியிருக்க வேண்டியதுதான் நியாயமானது. அதற்கு எதிராகப் பேசியிருக்க வேண்டும். ஆனால் பேசவில்லை. எதிர்த்துப் பேசினால் உலகத்திலிருந்தே வெளியேற்றப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு இருந்தது. இதுதான் புலிகளின் ‘தர்மராஜ்ய’ நிர்வாகம். முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டார்கள். தமிழர்கள் ‘சிறைவைக்கப்’பட்டார்கள்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் உரையாற்றிய போது, முஸ்லிம்களை வெளியேற்றியதற்காகத் தமிழ் மக்களின் சார்பில் மன்னிப்புக் கேட்பதாகக் காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கூறினார். தமிழ் மக்களின் சார்பில் மன்னிப்புக் கேட்டிருக்கக் கூடாது. தமிழ் மக்கள் முஸ்லிம்களை வெளியேற்றவில்லை. என்றாலும் அந்த வெளியேற்றம் மிகவும் கொடுமையான செயல் என்பதை மன்னிப்புக் கேட்டதன் மூலம் அவர் ஒத்துக்கொண்டிருக்கின்றார்.
புலிகள் மீதுள்ள அச்சம் காரணமாக அப்போது பேசாது விட்டாலும் இப்போது பேசலாமே. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீள்குடியேற்றம் பற்றி அதிகம் பேசுகின்றார்கள். ஒருவராவது முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிப் பேசுவதாக இல்லை. வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் அக்கறை செலுத்த வேண்டிய தார்மீகக் கடப்பாடு வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. தமிழ் மக்களுக்கும் உண்டு. மெளனத்தைக் கலையுங்கள்.

0 commentaires :

Post a comment