11/02/2010

வியட்நாமின் எரிவாயு, அணுஆயுத தேவைகளை நிவர்த்தி செய்ய ரஷ்யா, ஜப்பான் பாரிய பங்களிப்பு இரண்டு தசாப்தங்களில் எட்டு அணு உலைகளை அமைப்பதே நோக்கம் - வியட்நாம் பிரதமர்

வியட்நாம், ஜப்பான் என்பன இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. ஜப்பான் பிரதமர் நஒட்டோ கான் விசேட விஜயம் மேற்கொண்டு அண்மையில் வியட்நாம் வந்தார். வியட்நாம் பிரதமர் நிகுயான்ரான்டாங் ஜப்பான் பிரதமருடன் இருதரப்பு உறவுகள் வியாபார மேம்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். ஜப்பானின் கைத்தொழிற் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கவும் இரும்பு, நிலக்கரி மற்றும் வாகன உதிரிப்பாகங்களை விநியோகம் செய்யவும் வியட்நாம் தயாராகியுள்ளது.
நீண்டகால நட்பைப் பேண வியட்நாம் தயாராகவுள்ளதென்றும் அந்நாட்டின் பிரதமர் ஜப்பானியப் பிரதமரிடம் தெரிவித்தார். இதற்கு முன்னர் சீனாவிடமிருந்தே ஜப்பான் இப்பொருட்களை இறக்குமதி செய்தது. அண்மையில் ஜப்பான், சீனா என்பன செம்மஞ்சள் கடற்பிரதேசம் தொடர்பாக முரண்டுபட்டுக் கொண்டன. சீனாவின் கப்பலை வழிமறித்த ஜப்பான் கடற் படையினர் சீனாவின் கப்பல் தலைவரையும் சிறைப்பிடித்தனர்.
இதையடுத்து ஜப்பானுடனான வர்த்தக உறவுகளை சீனா துண்டித்தது. இதற்கு முன்னர் 95 வீதமான பொருட்களை சீனாவே ஜப்பானுக்கு வழங்கி வந்தது. திடீரென அந்த உறவு முறிந்து போனதால் ஜப்பானின் 31 கம்பனிகள் பொருட்களைப் பெறுவது தடைப்பட்டது. இதையடுத்தே வியட்நாமிடமிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்ய ஜப்பான் முடிவெடுத்தது.
இதுதவிர இந்தியாவிடமிருந்து தேவையான மூலப் பொருட்களைப் பெறவும் ஒப்பந்தமொன்றைச் செய்துள்ளது. வியட்நாமின் வடமேல் மாகாணத்திலுள்ள நிலக்கரிகளை தோண்டி எடுக்கும் உரிமையை வியட்நாம் ஜப்பானிடம் கையளிக்கும் என ஜப்பான் நம்புவதாக பிரதமர் நஒட்டோ கான் தெரிவித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி மெத்விடிவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை வியட்நாம் சென்று 5.6 பில்லியன் டொலர் செலவில் எரிசக்தி நிலையத்தை அமைக்கும் உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டார். இன்னும் இரண்டு தசாப்தங்களில் எட்டு அணு உலைகளை அமைக்க வியட்நாம் எண்ணியுள்ளது. முதற்கட்டமாக நான்காயிரம் மெகாவோல்ற் மின்சாரத்தை இன்னும் பத்து ஆண்டுகளில் உற்பத்தி செய்யவென அவசரமாக நான்கு அணு உலைகளை அமைக்கும் வேலைகள் வியட்நாமில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
ஜப்பானும் ரஷ்யாவும் தங்களது எரிசக்தி, அணு ஆயுத தேவைகளைப் பூர்த்தி செய்யும் தோழமை நாடுகளாக செயற்படுமென வியட்நாம் பிரதமர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a comment