12/27/2010

ஐவரிகோஸ்ட் நிலைமைகள் மோசமடைவதால் வெளிநாட்டுப் படைகள் அனுப்பப்படும் சாத்தியம் 14 ஆயிரம் பேர் தப்பியோட்டம்

ஐவரிகோஸ்டில் நிலைமைகள் நாளாந்தம் மோசமடைந்து செல்கின்றன. ஐவரிகோஸ்டின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து இதுவரைக்கும் 14 ஆயிரம் பேர் ஸைபீரியாவுக்குத் தப்பி யோடியுள்ளனர்.
அரசியல் வன்முறைகளால் இதுவரைக்கும் இருநூறுக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆபிரிக்க நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
ஜனாதிபதி கபகோ பதவி விலக வேண்டுமென ஐ. நா. செயலாளர் மற்றும் அமெரிக்க வெளிநாட்டமைச்சர்கள் விடுத்த வேண்டுகோளையும் கபகோ நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் மூன்று ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் ஐவரிகோஸ்ட் புறப்பட்டுள்ளனர். நவம்பர் 28ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கபகோவும் எதிர்க்கட்சி வேட்பாளர் குவற்றாவும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இருவரும் வெற்றிக்கு உரிமைகோரினர்.
அரசாங்கத்தின் இராணுவம், ஊடகம் உட்பட இன்னும் முக்கியமானவற்றை இரண்டுவேட்பாளர்களும் கட்டுப்படுத்த முனைந்தனர்.
இதனால் அங்கு பெரும் அரசியல் பிளவுகள் ஏற்பட்டு வன்முறைகள் தலையெடுத்துள்ளன. இத்தனைக்கும் எதிர்க்கட்சி வேட்பாளரின் வெற்றியை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது. கபகோ பதவி விலக வேண்டுமென மேற்குலக நாடுகள் கோரியுள்ளன. நாட்டின் மத்திய வங்கியை குவற்றாவுக்கு ஆதரவு வழங்குமாறு ஐ.நா. கோரியுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகைகள் களையிழந்தன.
மக்கள் அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறவில்லை. நாங்கள் தாக்கப்படாதிருக்க வேண்டுமானால் எங்கள் தலைகளை உயர்த்த வேண்டும். எங்கள் மீது அநியாயமான போர் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதென்று கபகோவின் மனைவி தெரிவித்தார்.
இவ்வாறுள்ள நிலையில் குவற்றாவின் ஆதரவாளர்கள் வீடுகளில் இறங்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். நிலைமைகளை சமாளிக்க வெளிநாட்டுப் படைகள் அனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

0 commentaires :

Post a comment