1/10/2011

கடும் மழை; பெருவெள்ளம் 8 இலட்சம் பேர் பாதிப்பு

வடகீழ் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண் சரிவினால் நாட்டில் சுமார் எட்டு லட்சம் பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.
உயிரிழந்திருப்பவர்களில் மூவர் மண் சரிவு காரணமாகவும் ஒருவர் வெள்ளத் தினாலும் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இம்மழை வீழ்ச்சியினால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ள நிலைகளினால் சுமார் இரண்டு லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஏழு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை, மட்டக்களப்பு இணைப்பாளர்கள் கூறினர்.
இவ்வெள்ள நிலையினால் இருப்பிடங் களை இழந்து சுமார் 14 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரம் பேர் 131 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இதேவேளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் காரணமாகப் பாதிக் கப்பட்டிருப்பவர்களுக்கு உடனுக்குடன் நிவாரண நடவடிக்கைகளை மேற் கொள்ளுவதன் அவசியம் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்ச ருமான ரவூப் ஹக்கீம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமர வீரவுடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.
வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் உள்ளிட்ட அவசர நிவாரண நடவடிக்கை களை உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் அமரவீரவுடன் கலந்துரையாடியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர்களுடனும் கலந்துரை யாடியதாக நீதி அமைச்சின் அதிகாரி யொருவர் கூறினார்.
இதேவேளை வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான அவசர பயணத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று ஆரம்பித்தார்.
வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டப் பிரதேசங்களுக்கு இன்று (10ம் திகதி) விஜயம் செய்யும் அமைச்சர், நாளை (11ம் திகதி) மட்டு மாவட்டப் பிரதேசங்களுக்குச் செல்லவிருக்கின்றார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் அவசர நிவாரண நடவடிக்கை முன்னெடுக்குமாறு பாதிக்கப் பட்டுள்ள மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத் தல் வழங்கப் பட்டிருப்பதாக அமைச்சர் அமரவீர தினகரனுக் குக் கூறினார். இலங்கைக்கு அருகிலான வளிமண்டலத்தில் திடீரென ஏற்பட்டிருக்கும் அமுக்க நிலை காரணமாகவே மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடும் மழை பெய்ததாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்தவிதாரண கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிபதிவுப் படி மட்டக்களப்பில் ஆகக் கூடிய மழை 312 மில்லி மீட்டர்கள் பெய்துள்ளது. அதேநேரம் அரலகங்விலவில் 220.9 மி. மீ., பொலன்னறுவையில் 162.4 மி. மீ., பதுளையில் 104 மி. மீ., திருமலையில் 130 மி. மீ., நுவரெலியாவில் 94 மி. மீ. என்றபடி ஆகக் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது எனவும் அவர் கூறினார்.
இம்மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளம், மண் சரிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளது. வழமையான வாகன போக்குவரத்து சேவையும் செயலிழந்துள்ளது. குளங்களின் அணைகள் உடைப்பெடுப்பதைத் தவிர்ப்பதற்காக

படம்: ஹாலி எல தினகரன் நிருபர்

பல குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. பல வீதிகள் வெள்ள நீரில் மூடுண்டுள்ளன. வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ள மக்களுக்குக் கடற்படையினர் படகுகள் மூலம் அவசர நிவாரண நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வெள்ள நிலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் 97 முகாம்களில் தங்கியுள்ளனர், என்று அனர்த்த முகாமைத் துவ நிலையத்தின் மட்டு இணைப்பாளர் ஏ. எம். எம். ஹkர் கூறினார்.
இதேநேரம் ‘அம்பாறை மாவட்டத்தில் 80 ஆயிரத்து 410 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 6998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6508 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 300 பேர் 34 முகாம்களின் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ. எஸ். எம். சியாத் கூறினார். நுவரெலியா நகரிலுள்ள குதிரைப் பந்தயத் திடலில் ஏற்பட்ட வெள்ள நிலை காரணமாக அப்பகுதியில் வாழ்ந்து வந்த 42 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். சினி சிட்டா மண்டபத்தில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் சமைத்த உணவு நிவாரணமும் வழங்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன கூறினார்.

மட்டு. மாவட்டம்: 1959க்கு பின்னர் வரலாறு காணாத மழை; வெள்ளம்

(மகேஸ்வரன் பிரசாத்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 1959 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடும் மழை பெய்து பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 312 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
கடும் காற்றுடன் பெய்த கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டிருப்ப தாக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.
வெள்ளத்தால் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடியாக சமைத்த உணவு களை வழங்க நடவடிக்கை எடுத்திருப்ப துடன், உலருணவுப் பொருட் களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்ப்பாசனக் குளங்களும் நிரம்பி வழிவதால் வெள்ள நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

படம்: அட்டாளைச்சேனை தினகரன் நிருபர் றமீஸ்

மட்டக்களப்பு - கல்முனை வீதி வெள்ளத்தால் சேதமடைந்து பின்னர் தற்காலிகமாகத் திருத்தியமைக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ள போதும், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில கிராமங்களுடனான வெளித் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.
வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்களிலுள்ள மக்களுக்கு படகுச் சேவை நடத்தப்பட்டுள்ளதுடன், கடுமையான காற்று வீசியதால் ஹெலிகொப்டரை மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியாது இருப்பதாக விமலநாதன் கூறினார்.
மட்டு. மாவட்டத்தில் பல வீடுகளின் கூரைகள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மட்டு. நகர் உட்பட அனைத்துப் பகுதிகளிலுமுள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. காத்தான்குடி, வவுணதீவு, வாகரை, வெல்லாவெளி, செங்கலடி, ஓட்டமாவடி, கிரான், வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி உட்பட 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஆயிரக்கண க்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

படுவான்கரை துண்டிப்பு;

படகுகள் மூலம் மீட்புப்பணி

(பெரியபோரதீவு குறூப் நிருபர்)

படம்: பள்ளிக்குடியிருப்பு தினகரன் நிருபர்

இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ள பிரதேசங்களில் அகப்பட்டுக் கொண்டுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் நேற்று இயந்திரப் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாவிக்கு மேற்கேயுள்ள படுவான்கரை பிரதேசம் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளது. பட்டிருப்பு மற்றும் வவுணதீவு பாலங்கள் வழியாக போக்குவரத்து செய்ய முடியாதபடி கடும் வெள்ளம் பாய்கிறது. இதேசமயம் படுவான்கரை பிரதேசத்திலுள்ள திவுலான, பாலையடிவட்டை, வேற்றுச்சேனை, ஆனைகட்டியவெளி, காக்காச்சிவட்டை, நாதனவெளி போன்ற மேலும் பல கிராமங்களுடனான போக்குவரத்து நேற்று முற்றாகத் துண்டிக்கப்பட்டது.
அங்குள்ளோரை மீட்கும் பணியில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களும் இராணுவத்தினரும் நேற்று இயந்திரப் படகுகள் சகிதம் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 12,960 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 46,000 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்தது.
கடும் காற்று காரணமாக எங்கும் மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. எங்கு நோக்கினாலும் கடல் போல வெள்ளம் காணப்படுகிறது. வெள்ளத்தினால் சூழப்பட்ட பிரதேசங்களில் உள்ளோரை மீட்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய சுற்றுமதில், மட்டக்களப்பு வாவி, பெருக்கெடுத்தமையினால் இடிந்து விழுந்துள்ளது. இக் கிராமத்திலுள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய கூரை காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது.
(வாழைச்சேனை தினகரன் நிருபர்)
வாழைச்சேனை - ஹைராத் வீதியில் கலந்தர்லெவ்வை நூர்முகமட் (வயது 85) என்பவர் வெள்ள நிலை காரணமாக ஏற்பட்டுள்ள குளிரில் அகப்பட்டு நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்பட்ட நிலைக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதே காரணமாகும்.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் குளங்களை அண்மித்த கிராமங்களில் வசிப்போரையும், வாவிகளின் ஓரங்களில் வாழும் பொது மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் மோகனதாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சை மற்றும் நவகிரி, றூகாமம், வாகனேரி குளங்களை அண்டி வாழும் கிராமங்களிலுள்ள மக்களையும், மட்டக்களப்பிலுள்ள வாவிகளின் ஓரங்களிலுள்ள மக்களை இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சை குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டு 11 அடியில் நீர் திறந்து விடப்பட்டன.
இதேபோன்று அனைத்து குளங்களின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள துடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பவற்றில் தங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மாவட்டத்தின் 80 க்கும் மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்ணாங்குடா, ஆயித்தியமலை மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்களுக்கான தொடர்பு, போக்குவரத்து என்பன துண்டிக்கப்பட்டுள்ளன. வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேத்துச்சேனை கிராமம் முற்றாக நீரில் மூழ்கி அக்கிராமத்துக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து அக்கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு படகின் மூலம் கொண்டுவரும் நடவடிக்கை இடம்பெற்றது. இங்கு வீசிய பெருங்காற்றி னால் வீதிகளில் மரங்கள் விழுந்து காணப்பட்டன. இவற்றை பொது மக்களும், படையினரும் இணைந்து வெட்டி அப்புறப்படுத்தினர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈரளக்குளம், முறுத்தான போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கோரளைப்பற்று

(கல்குடா தினகரன் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, ஏறாவூர்நகர், ஏறாவூர்பற்று, செங்கலடி, சித்தாண்டி, வவுணதீவு, உண்ணிச்சை, படுவான்கரை, வெள்ளாவெளி, வேற்றுச்சேனை மற்றும் வாகரை போன்ற பிரதேசங்களில் கடமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கோறளைப்பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருபத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 8103 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உறவினர் நண்பர்களது வீடுகளில் தங்கியுள்ளதுடன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 7258 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உறவினர் நண்பர்களது வீட்டில் தங்கியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 80 ஆயிரத்து 410 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 6 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டுப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்து வப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான வர்கள் பொது இடங்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கவை க்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்க ளுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
(அம்பாறை சுழற்சி நிருபர்)
அக்கரைப்பற்றில் பெய்த அடை மழையினால் தாழ்ந்த மற்றும் கரையோரப் பிரதேசங்கள் யாவும் நீரில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அக்கரைப்பற்றிலுள்ள இஸ்மாயில் ஸ்ரோர் வீதி, ஏ. வி. வி. வீதி, உடையார் வீதி, அக்கரைப்பற்று - அம்பாறை வீதியின் தபாற் கந்தோர் வரையிலான பகுதி, பட்டினப் பள்ளி வீதியின் பெரும் பகுதி ஊரின் கரையோரப் பிரதேசங்கள் என்பன நீரில் மூழ்கியுள்ளன. அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் பல இடங்களில் வெள்ள நீர் ஊடறுத்துச் செல்வதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மற்றும் வயல் பிரதேசங்களை ஊடறுத்துச்செல்லும் ஆறுகள் பெருக்கெடுத்ததனால் அலியான்ரவட்டை, ஆலின்ரவட்டை, 06ம் கட்டை கிவுன்மடு, இலுக்குச்சேனை வட்டை, நீத்தைவட்டை முதலியவற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நெற்கதிர்கள் நீரில்மூழ்கியுள்ளன. தொடர்ச்சியான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெற் கதிர் அழுகியுள்ளன.
(மருதமுனை தினகரன் நிருபர்)
கடும் மழை காரணமாக கல்முனை பிரதேச செயலக முஸ்லிம் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எம். எம். நெளபல் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலக முஸ்லிம் பிரிவில் 8,000 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவருக்கு நாளொன்றுக்கு 100 ரூபாவும், சிறுவர்களுக்கு 80 ரூபாவும், சமைத்த உணவுக்காக வழங்கப்படும் என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பள்ளிவாசல்களிலும் பாடசாலைகளிலும், பொதுக் கட்டடங்களிலும் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இவர்களுக்கு கூட்டுறவுக்கடைகள் மூலம் உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பிரதேச செயலாளர் நெளபல் தெரிவித்தார்.
(ஒலுவில் விசேட நிருபர்)
அம்பாறை மாவட்டத்தில் சுமார் 350,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன். 70 இற்கு மேற்பட்ட நலன்புரி முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதேச செயலகங்களூடாக சமைத்த உணவுகளும் வழங்கப்படுகின்றன. மருதமுனை, நீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம், ஆலையடிவேம்பு, திருக்கோவில், கோமாரி, பொத்துவில் ஆகிய கரையோரப் பிரதேசங்களில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீதிகளும், மதகுகளும் உடைப்பெடுத்ததனால் பல்வேறு வீதிகள் சேதமாகியுள்ளதுடன் உள்ளூர், வெளியூர் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. கல்முனை-அம்பாறை வீதியில் மாவடிப்பள்ளிக்கருகில் பிரதான வீதியில் 3 அடிக்குமேல் நீர் பரவியதால் போக்குவரத்து தடைப்பட்டதுடன், அக்கரைப்பற்று - பொத்துவில் வீதிகளில் பாலங்களுக்கு மேலாக நீர் பரவியதனால் அங்கும் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சகல பிரதேசங்களிலும் உள்ள வீதிகள் நீர் வடிந்தோடுவதற்காக வெட்டப்பட்டு ள்ளதால் வீதிகள் சேதமடைந்து சகல போக்குவரத்துக்களும் தடுக்கப்பட்டுள்ளன.
வீதிகளில் பெரு மரங்கள் சாய்ந்து வீழ்ந்துள்ளன. இதனால் அம்பாறை மாவட்டம் முழுவதும் சில மணிநேரங்கள் மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், பல்தேவைக் கட்டடங்கள் போன்றவற்றில் தங்கவைக்கப்பட்டனர். சில பிரதேசங்களில் மக்கள் தங்கியிருந்த நலன்புரி நிலையங்களும் நீரில் மூழ்கியதனால் மக்கள் தங்குவதற்கு இடமின்றி மழையில் அலைந்து திரிந்ததைக் காண முடிந்தது.
(பாலமுனை நிருபர்)
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள சகல மக்களுக்கும் உடனடியாக சமைத்த உணவுகள் வழங்குவதற்கும் தேவையான அவசர, அவசிய உதவிகளை வழங்குமாறும் நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்..
கிழக்கில் தொடர்ந்து பெய்து வரும் பெரும் மழையினால் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் 98 வீதமான மக்கள் வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையை அறிந்து கொண்ட நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உடனடியாக இம்மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களைத் தொடர்பு கொண்டு இவ்வேண்டுகோளை விடுத்ததுடன், பிரதேச செயலாளர்களையும் உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன்களை கவனித்து, மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் போன்றோருக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்)
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் மலையடிக் கிராமம், தென்னம்பிள்ளைக் கிராமம், உடங்கா, வீரமுனை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக் கல்முனை, நெயினாகாடு மற்றும் மல்கம்பிட்டி ஆகிய பிரதேசங்களிலுள்ள 4000 பேர் பாடசாலைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள் ஆகியனவற்றில் தஞ்சமடைந்துள்ளனர். மற்றும் 200 பேர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள மையவாடிப் பிரதேசத்திலும், தென்னம் பிள்ளைக் கிராமத்திலும் இரு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ. எம். எம். நெளஷாத் நேரில் சென்று பார்வையிட்ட துடன் பொது இடங்களில் தங்கியுள்ள மக்களையும் பார்வையிட்டதுடன் அவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கும் படி சம்மாந்துறை செயலாளர் களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன் செயலாளர், கிராம உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.
(ஆலையடிவேம்பு விசேட நிருபர்)
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, மருதமுனை போன்ற ஏனைய பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ்நில பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொது இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மழை தொடர்ந்து பெய்து வருவதனாலும், கடும் காற்று வீசுவதனாலும் சில இடங்களில் மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள், போக்குவரத்துக்கள் என்பன பாதிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளன.
(காரைதீவு குறூப் நிருபர்)
காரைதீவு பிரதேச செயலர் பிரிவில் 4272 குடும்பங்களைச் சேர்ந்த 28,474 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் எம். கலந்தர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களில் பலர் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலை மற்றும் விபுலானந்தா மத்திய கல்லூரி, மாளிகைக்காடு சபீனா வித்தியாலயம் ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்விடங்களில் 943 குடும்பங்களைச் சேர்ந்த 4,676 பேர் தங்கவைக்கப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக பதில் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் மாவடிப்பள்ளி தாம்போதியில் 3 அடி வெள்ளம் பாய்ந்துவருகிறது.

(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)
கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான பிரதேச செயலக பிரிவுகளில் சுமார் ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்ப ட்டுள்ளதாகவும் சில பிரதேசங்களில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதா கவும் அம்பாறை மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கரா தெரிவித்தார். கல்முனை, அக்கரைப்பற்று, அட்டாளைச் சேனை, நிந்தவூர், மருதமுனை போன்ற நகரங்களிலுள்ள பிரதான வீதிகளிலுள்ள கடைகளில் கூட வெள்ளம் புகுந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. ஆறுகள், குளங்கள் யாவும் மழையால் நிரம்பிவழிகின்றன. உள்ளூர் வீதிகளில் வெள்ளத்தால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
(கல்முனை குறூப் நிருபர்)
அடைமழையால் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, வீரமுனை உட்பட இம்மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் மிகுந்த அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். வீடுகளுக்குள் நீர் நிரம்பியுள்ளதாலும் பாடசாலைகளுக்குள்ளும் நீர் நிரம்பியுள்ளதாலும் எங்கும் அடைக்கலம் தேடிக்கொள்ள முடியாதளவுக்கு மக்கள் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். சகல வீதிகளிலும் நீர் தேங்கிக் கிடப்பதால் பிரதான வீதிகள், உள்ளூர் வீதிகளில் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருமலை மாவட்டத்திலும்

இயல்பு நிலை பாதிப்பு

(தம்பலகாமம், குச்சவெளி தினகரன் நிருபர்கள்)
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக திருகோணம லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் கோவிலடி, சிப்பித்திடல், முள்ளியடி, கள்ளிமேடு, பத்தினிபுரம், பாலம்போட்டாறு, முள்ளிப்பொத்தானை, 96 வது மைல் கல், கல்மெடியாவ போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. சில இடங்களில் 2 அடிக்கு மேலாக வெள்ளம் பாய்கின்றது.
தம்பலகாமம் கிண்ணியா வீதி, கிண்ணியா வான் அல வீதி என்பன போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தில் 116,000 கன அடி நீர் சேர்ந்துள்ளதால் 10 வான்கதவுகளும் நேற்றுக் காலை 10 மணிக்குத் திறக்கப்பட் டன. இதன் காரணத்தால் இப் பகுதிகள் மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. இங்கு 3000 க்கும் அதிகமான ஏக்கர் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாலம்போட்டாறு பத்தினி அம்மன் ஆலயம் வெள்ளத்தால் அரைப்பகுதி மூழ்கியுள்ளது. கந்தளாய், தம்பலகாமம், வான்அல, முள்ளிப்பொத் தானை பகுதி மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 25 குடும்பங்களும், வெருகலில் 18 குடும்பங்களும், மூதூரில் 450 குடும்பங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ளன.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலர் பிரிவில் பள்ளத்தோட்டப் பிரதேசத்தில் 40 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், ஜமாலியா லவ் லேன் 75 வீட்டுத் திட்டத்தில் 25 வீடுகளுக்குள் மூன்றடி வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளிலுள்ள மக்கள் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனைவிட நிலாவெளி, கோபாலபுரம், இறக்ககண்டி, புல்மோட்டை, பகுதிகளில் வெள்ளம் தோன்றியுள்ளது. புல்மோட்டை ஜின்னாபுரம் வீதி பாதிக்கப்பட்டுள்ளதால் அப் பகுதி மக்கள் அவசர தேவைகளுக்காக படகுகள் மூலமாக இடமாற்றப்பட்டனர்.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதேச செயலாளர் திருமதி ஜலதீபனும், இராணுவ சிவில் படை அதிகாரி கப்டன் கொகனவும் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு பணிப்புரை வழங்கியிருந்தனர்.
இடம்பெயர்ந்து பாடசாலையொன்றில் தங்கியிருந்த நிலையில், இயற்கை மரணமடைந்த பெண் ஒருவரின் பூதவுடலை நல்லடக்கம் செய்வதற்கு 10 மைல் தொலைவிலுள்ள மேட்டு நிலமொன்றுக்கு எடுத்துச் சென்றதாக குச்சவெளி பிரதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

0 commentaires :

Post a comment