1/12/2011

மட்டு. அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம்; நிர்க்கதி

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடராகப் பெய்துவரும் அடை மழை காரணமாக அனர்த்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை தொடர்வதால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களினதும் இடம்பெயர்பவர்களினதும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட ங்கள் நீரினால் சூழப்பட்டிருப்பதால் அவசர நிவாரணப் பொருட்களை தரை வழியாக எடுத்துச் செல்லுவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சீரற்ற காலநிலையால் தொடராக மழை பெய்து வருவதன் காரணமாக நாட்டில் 2 இலட்சத்து 28 ஆயிரத்து 78 (228078) குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 63 ஆயிரத்து 773 பேர் பாதிக்க ப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.
வெள்ள நிலையி னால் பாதிக்கப்பட் டிருப்பவர்களில் 33 ஆயிரத்து 330 குடும்ப ங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 598 பேர் 359 முகாம்களில் தங்க வைக் கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர் பாக அவர் மேலும் கூறுகை யில் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 882 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட் சத்து 82 ஆயிரத்து 323 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 15 ஆயிரத்து 368 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 524 பேர் 146 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் 88 ஆயிரத்து 376 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 38 ஆயிரத்து 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7813 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 744 பேர் 49 முகாம்களில் தங்கியுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 2415 குடும்பங்களைச் சேர்ந்த 11011 பேர் 59 முகாம்களில் தங்கியுள்ளனர். திருமலை மாவட்டத்தில் 7559 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7323 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 478 பேர் 73 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதேநேரம் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வெள்ள நீரினால் பெரும்பாலான பிரதேசங்களுக்குரிய தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகள் மூன்று நான்கு அடிகள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ள நீரினால் சூழப்பட்டிருக்கும் பிரதேசங்களிலிருந்து விமானப் படையினரும், கடற்படையினரும் ஹெலிகள் மற்றும் படகுகளின் உதவியுடன் மீட்புப் பணியிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான அரச கட்டடங்கள், வீடுகள், தனியார் நிறுவனங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதேவேளை, ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பலவற்றினுள்ளும் வெள்ள நீர் புகுந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுக்கடங்காத வெள்ள நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக குடிநீர் வழங்கல் பிரிவினர் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் பெரும் அனர்த்தம்; 49 முகாம்களில் மக்கள் தஞ்சம்
(அம்பாறை மத்திய குறூப், அம்பாறை சுழற்சி நிருபர்கள்)
நேற்று (செவ்வாய்) பிற்பகல் 3.00 மணி வரை அம்பாறை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் 49 அகதி முகாம்களில் தங்கியிருப்பதாக அம்பாறை அரச அதிபர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.
முகாம்களிலுள்ள சகலருக்கும் சமைத்த உணவை வழங்க, அவ்வப் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று நண்பகல் (செவ்வாய்) தொடக்கம் இச் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 25 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அரச அதிபர் தெரிவித்தார்.
அது மட்டுமன்றி, அம்பாறை மாவட்டத்தில், கல்முனை, அக்கரைப்பற்று, நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களிலே, மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மேலதிக அரச அதிபர் அசங்க அபே குணவர்தன தெரிவித்தார். நேற்று இம்மாவட்டத்தில், மகா ஓயாவில் இருவர், உகணயில் இருவர், நாவிதன்வெளியில் ஒருவரும் வெள்ளத்தினால் மரணமடைந்திருப்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.
(சம்மாந்துறை மேற்கு தினகரன் நிருபர்)
அடைமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரண உதவிகளை வழங்குமாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறும், நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்கியிருப்போருக்கு உலருணவு நிவாரணங்களை வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர
கிழக்கு மாகாண சபை உறுப்பிளர் எம். எல். ஏ. அமீரின் அழைப்பை ஏற்று சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள நெய்னாகாடு அல் அக்ஷா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருப்போரைச் சந்திப்பதற்காக வருகை தந்த போது இதனைத் தெரிவித்திருந்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான எச். எம். எம். ஹரீஸ், பைசால் காசீம், சிரியானி, மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எம். எம். நெளஷாட், பிரதேச செயலாளர் ஏ. மன்சூர், உதவிப் பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கணக்காளர் ஏ. எல். மஹ்றூப், ஜனாதிபதி இணைப்பாளர்களான எம். எம். ஏ. காதர், எம். எல். ஏ.மஜீட் ஏ. எல். எம். றசீன், எம். ரீ ஏ. கரீம், எம் ஐ. எம். நபீஸ், சமூகசேவை உத்தியோகத்தர் ஏ. எம். இத்ரீஸ் படை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான நீரைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார ரீதியான பிரச்சினைகள் ஏற்படாது கவனிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
(பெரிய நிலாவணை தினகரன் நிருபர்)
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள அம்பாறை மாவட்ட மக்களுக்கான நடமாடும் வைத்திய முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்துள்ளார்.
விஷேட பணிப்புரைக்கமைவான வைத்தியர்களைக் கொண்ட இந்நடமாடும் சேவை மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை நடைபெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை, மகிளுர் பிரதேசத்தில் அடை மழை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுகளை மாகாண அமைச்சர் வழங்கி வைத்தார்.
நெசவுத் தொழிலை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. கால் நடைகளும் வெள்ள அனர்த்தத்தினால் பெருமளவில் பாதிப்படைந்துள்ள மையினால் அது சார்ந்த தொழில் செய்வோருக்கான நிவாரண உதவிகளும் வழங்கப்படவுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சேதவிபரங்களைப் பிரதேச செயலாளர்களினூடாக வழங்கி இந்நிவாரண உதவிகளைப் பெற முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(ஒலுவில் விசேட நிருபர்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்ட வருவதுடன், நீரேந்து பகுதிகளிலிருந்து நீரை அகற்றும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மிகரைவில் உலருணவு நிவாரணப் பொருட்கள், வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எம். எம். நkர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை, பாலமுனை, மீலாத் நகர், அஷ்ரப் நகர், ஒலுவில், சின்னப்பாலமுனை, திராய்க்கேணி ஆகிய கிராமங்களில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கிராம சேவைகர்களூடாக கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் உதவியுடன் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நீர்த்தேங்கி நிற்கக்கூடிய மக்களின் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து நீரை அகற்றும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் இதன்முலம் பெருமளவு நீர், வடிச்சல் மூலம் அகற்றப்பட்டு வருவதாகவும் பிரதேச செயலாளர் நkர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை பிரசேத்திலுள்ள, பகுதிகளையும், நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தோரின் நிலைமைகளையும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெவ்வை, பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், உதவிப் பிரதேச செயலாளர் ஏ. எம். அப்துல் லத்தீப், முன்னாள் பிரதேசசபைத் தவிசாளர் எம் ஏ. அன்சில் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இப்பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழைபெய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(நற்பிட்டிமுனை விசேட நிருபர்)
கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடை மழையினால் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 17162 குடும்பங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், உயிரிழப்புக்கள் இரண்டு இடம் பெற்றுள்ளதாகவும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் கல்முனை பொலிஸ் நிலைய தகவல்கள் கூறுகின்றன.
அடை மழையினால் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட 10100 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 4500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் எம். எம். நெளபல் தெரிவித்தார்.
இவர்களில் 70 வீதமானோர் உறவினர் வீடுகளிலும், 30 வீதமானோர் தங்கல் நிலையங்களிலும் தங்கியிருப்பதாகவும், இவர்களுக்கான சமைத்த உணவு கிராம சேவகர் ஊடாக வழங்கப்படுவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
பிரதேச செயலாளரின் அறிக்கை பிரகாரம் மருதமுனை அக்பர் கிராம பல்தேவை கட்டிடத்தில் 340 குடும்பங்களும், சம்ஷ் மத்திய கல்லூரியில் 225 குடும்பங்களும், புலவர் மணி சரிபுத்தீன் வித்தியாலயத்தில் 200 குடும்பங்களும், கல்முனை குடி அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 450 குடும்பங்களும் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.
அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரவின் பணிப்புக்கமைய இடம்பெயர்ந்தவர்களுக்கான உலர் உணவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் 7062 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2509 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் இடம்பெயர்ந்து தங்கியிருப்பதாக தமிழ் பிரிவு பிரதேச செயலவாளர் கே. லவநாதன் தெரிவித்தார்.
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளரின் அறிக்கை பிரகாரம் சேனைக்குடியிருப்பு கணேஷ் மகா வித்தியாலயத்தில் 922 குடும்பங்களும், பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயத்தில் 62 குடும்பங்களும், பாண்டிருப்பு விஷ்ணு வித்தியாலயத்தில் 211 குடும்பங்களும் பெரியநீலாவணை விஷ்ணு வித்தியாலயத்தில் 714 குடும்பங்களுக்கும், நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தில் 194 குடும்பங்களும், விவேகானந்தா வித்தியாலயத்தில் 524 குடும்பங்களும் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.
அதேவேளை, தமிழ் பிரிவுக்குட்பட்ட துரவந்தியமேடு கிராமத்தில் உள்ள அனைவரும் படகுகளில் வேறு பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக கல்முனை பொலிஸ் பிரிவில் வெள்ளத்தால் மூழ்கி இருவர் பலியாகியுள்ளதுடன், இதில் மூழ்கிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த 53 வயதுடைய சிந்தாத்துறை கனக சுந்தரம், பெரிய நீலாவணையைச் சேர்ந்த முருகுப்பிள்ளை நடராஜா (47) ஆகியோரே நீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தார்.
நீரில் மூழ்கிய பெரிய நீலாவணையைச் சேர்ந்த செல்வன் பாபு, கே. எதிஸ்டர் ஆகியோர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.
மட்டு. மாவட்டத்தில் 85 வீத மக்கள் பாதிப்பு
(ஏறாவூர் குறூப் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் 85 சதவீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க உதவி அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.
14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 185 நலன்புரி முகாம் இயங்குகின்றன. 28376 குடும்பங்களைச் சேர்ந்த 105, 747 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் 28 முகாம்கள் உள்ளன.
20189 குடும்பங்களைச் சேர்ந்த 59193 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
வாகரை பிரதேசத்தில் 4272 குடும்பங்களைச் சேர்ந்த 14687 பேர் இடம்பெயர்ந்து 9 முகாம்களில் தங்கியுள்ளனர்.
பனிச்சங்கேணி பாலம் பாதிக்கப்பட்டுள்ளதனால் கதிரவெளி, புளிச்சாக்கேணி, பாற்சேனை, அம்பந்தனாவெளி, ஊரியன்கட்டு, கட்டுமுறிவு, தோணிதாட்ட மடு, மருதன்கேணிக் குளம், ஓமடியாமடு, வாகரை வடக்கு மற்றும் மத்தி ஆகிய பிரதேசங்களுக்கான தரைவழிப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.
அங்கு 4055 குடும்பங்களைச் சேர்ந்த 14520 பேர் நிர்க்கதியாகியுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ராகுல நாயகி தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை நிலவுவதனால் ஹெலிகொப்டர் மூலமான உணவு விநியோகம் தாமதமடைகிறது.
உழவு இயந்திரங்கள் மூலம் மக்கள் வெளியேற்றம்
(ஏறாவூர் தினகரன் நிருபர்)
ஏறாவூர் பிரதேசத்தில் மிக மோச மாகப் பாதிக்கப்பட்ட மக்களை ஏறாவூரில் உள்ள பொது அமைப்பு க்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் முன்வந்து உழவு இயந்திரங்க ளின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாடசாலைகளிலிருக்கும் மக்களுக்குத் தேவையான உணவு வகைகளை ஏறாவூரில் உள்ள பொது அமைப்புக்கள் வழங்கி வருகின்றன.
வெற்றிலைத் தோட்டங்கள் நாசம்
(துறைநீலாவணை நிருபர்)
களுதாவளை, தேத்தாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், களுவாஞ்சிகுடி, எருவில் ஆகிய கிராமங்களில் வெற்றிலைச் செய்கையில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கான குடும்பங்கள் தமது தொழிலை இழந்துள்ளன.
சந்தையில் வெற்றிலைக்கான தட்டுப்பாடு நிலவுவதுடன், வெற்றிலையின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அரிசி ஆலைகள் வெள்ளத்தில்
(வாழைச்சேனை நிருபர்)
கல்குடா தொகுதியில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை, மாஞ்சோலை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, காவத்தமுனை, தியாவட்டவான், மைலங்கரச்சை, கிண்ணையடி கறுவாக்கேணி, சுங்கான்கேணி, கிரான், புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வீதிகள் மற்றும் குடிமனைகளனைத்தும் வெள்ளக் காடாக மாறியுள்ளன.
ஓட்டமாவடிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அமீர்அலி விளையாட்டரங்கு - மைதானம் என்பனவும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். இராணுவத்தினர் பொலிஸார் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை நல்கினர்.
தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து
(ஏறாவூர் தினகரன் விசேட நிருபர்)
மக்கள் மத்தியில் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள் ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நீரின் மூலமாகவே தொற்று நோய்கள் பரவக்கூடிய சூழ்நிலை அதிகம் காணப்படுவதால் மக்கள் கொதித்தாறிய நீர் மற்றும் போத் தலில் அடைக்கப்பட்ட குடிநீர் என்பவற்றைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நலன்புரி நிலையங்களில் மிக நெருக்கமாக தங்கவைக்கப் பட்டுள்ளதால் நோய்கள் பரவும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.
1957ம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட பெருவெள்ளம்
(பட்டிப்பளை நிருபர்)
1957ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய வெள்ளம் இதுவென வயோதிபர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திற்கான அனைத்துப் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிராமத்துக்கு கிராமம் போக்குவரத்துக்குள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார, மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் 4 வைத்திய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இக்குழுக்களில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர் கள் அடங்குகின்றனர்.
வான்கதவுகள் திறக்கப்பட்டதால் கிராமங்கள் வெள்ளத்தில்
(திருகோணமலை மாவட்ட விசேட நிருபர்)
திருகோணமலை மாவட்டத்தில் அடைமழையினாலும் மற்றும் கந்தளாய் குளம், ஏனைய சிறு குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வருவதாலும் கிண்ணியா பிரதேசத்தில் பல வீதிகள், மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தாழ்ந்த பகுதிகளிலுள்ள மக்களை வள்ளங்கள் மூலம் பல பொது அமைப்புக்கள் மேட்டு நிலங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வருகின்றன.
கிண்ணியா பிரதேச செலயகப் பிரிவில் சமாவச்சதீவு, பூருவரசந்தீவு, ஈச்சந்தீவு, கிரான், மஜீத் நகர், வட்டமடு, மணியரசங்குளம், குட்டித்தீவு, முனைச்சேனை, காக்காமுனை, நெடுந்தீவு, பட்டியனூர், மகமார், நடுஊற்று, ஆயிலியடி போன்ற பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சமாவச்சதீவு, பூவரசந்தீவு, சூரங்கல், ஆயிலியடி, தம்பலகமம், வான்எல, சல்லிக்களப்பு போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நெல்வயல்கள் அழிவு
(சேருவில தினகரன் நிருபர்)
திருகோணமலை மாவட்டத்தில் பன்னிரெண்டாயிரம் ஹெக்டயர் நெல் வயல்கள் அழிந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பூ. உகநாதன் தெரிவித்தார்.
குடலைப் பருவமான இறுதிக்கட்டத்தில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால் நெற்பயிர்கள் அழிந்துள்ளன.
சேனைப்பயிர்கள், மேட்டு நிலப்பயிர்கள், உப உணவுப்பயிர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவு
(மூதூர் தினகரன் நிருபர்)
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் இருப்பிடங்களை விட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மூன்று தினங்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குமாறு திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் டி. ஆர். சில்வா பணிப்புரை வழங்கியுள்ளார்.
மூதூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்கியுள்ள மக்களை பார்வையிடும் பொருட்டும், தேவையான அத்தியாவசிய விடயங்கள் குறித்தும் மூதூர் பிரதேச செயலகத்தில் நடத்திய முக்கிய கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு பிரதேச செயலாளர் என் செல்வநாயகம், உதவி பிரதேச செயலாளர் எம். எச். முஹம்மட்கனி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அபுல் பைதா ராசீக் பரீட் மற்றும் அதிகாரிகள் பங்குகொண்டனர்.
முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கும் நடவடிக்கையில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராமமுன்னேற்ற சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
முகாம்களில் உள்ளவர்களுக்கு தேவையான டெண்ட் படங்குகள் இருந்தவைகளை வழங்கியுள்ளதாகவும் மேலதிக தேவையானவைகளை அரச, அரசசார்பற்ற நிறுவனங்களிடம் வேண்டியுள்ளதாகவும் பிரதேச செயலாளர் செல்வநாயகம் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் திருமலை வருகை
(குச்சவெளி தினகரன் நிருபர்)
திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடுவதற்காக அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் டுலீப் விஜேசேகர வருகை தந்திருந்தார்.
ஜமாலியா லவ்லேன் பிரசேத்தில் வெள்ளத்தில் முழ்கிய வீடுகளைப் பார்வையிட்டு அங்குள்ள மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற பிரதேச செயலாளர்கள் அரசாங்க அதிபர்கள் மூலமாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
சகல குளங்களின் அணைக்கட்டுகளையும் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களத்தில் நின்று உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a comment