1/19/2011

கலவரம் நடந்த துனிசியாவில் எதிர்க் கட்சியுடன் இணைந்து புதிய அரசு


ஆபிரிக்க நாடான துனிசியாவில்ஷின் அல்-அபிடின் பென் அலி கடந்த 23 ஆண்டுகளாக ஜனாதிபதியாக பதவி வகித்தார். அவரது ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை அதிகரித்தது. எனவே அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து ஜனாதிபதி பென்அலி பதவி விலகினார். தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதைத் தொடர்ந்து நாட்டில் கலவரம் தொடர்ந்தது. உடனடியாக தேர்தல் நடத்தி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
இதனால் மீண்டும் வன்முறை வெடித்தது. துனிஷ் நகரில் லட்சக் கணக்கான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க பொலிசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. எனவே, நிலைமை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து புதிய அரசு அமைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அரசு பிரதமர் மொகமத் சனோசி தலைமையில் இயங்கும். மேலும் இதில் முன்னாள் ஜனாதிபதி பென்அலி அரசில் இடம்பெற்ற வெளியுறவு துறை மற்றும் உள்துறை மந்திரிகள் இருவர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர எதிர்க் கட்சி தலைவர்கள் அகமது இப்ராகிம், முஸ்தபாபென் ஜாபர் ஆகியோர் இந்த அரசில் மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடங்கிய அரசு விரைவில் புதிய ஜனாதிபதி தேர்தலை நடத்தும். அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக பிரதமர் சனோசி அறிவித்துள்ளார்.
துனிசியாவில் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. அவை மீண்டும் வழங்கப்பட்டது. மேலும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த அறிவிப்புகள் உடனடியாக வெளியிடப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டன. மொத்தத்தில் துனிசியாவில் ஒட்டுமொத்த சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த கலவரத்தில் 78 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  

0 commentaires :

Post a comment