1/16/2011

அவதியுறும் மக்களுக்கு அள்ளி உதவுங்கள்

 கிழக்கில் தொடர்ந்து பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக் காரணமாக சுமார் பத்து இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவுவது நமது தலையாய கடமையாகும். அரசாங்கம் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கிவருகின்ற போதிலும் இந்நாட்டின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் நமது ஒரு சிறு துளி பங்களிப்பையாவது அவர்களுக்காக வழங்க வேண்டும்.
தினகரன் பத்திரிகையை வெளியிடும் லேக்ஹவுஸ் நிறுவனம் அதற்காகப் பல வழிகளிலும் முயற்சிகளை எடுத்து வருகின்றது. எமது நிறுவனத்தின் ஆசிரியப் பீடப் பணிப்பாளர் சீலரட்ண செனரத் தெரிவித்தது போன்று முழு நாட்டிற்கும் இன, மத, மொழி பேதமற்ற ஒரு சேவையாற்றும் அடையாளச் சின்னமாக லேக்ஹவுஸ் நிறுவனம் விளங்குகின்றது.
சுனாமியின் போதும் ஹம்பாந்தோட்டை வரட்சியின் போதும் வன்னியில் மக்கள் திடீர் இடம்பெயர்வின் போதும் லேக்ஹவுஸ் நிறுவனம் பல உதவிகளை வழங்கியுள்ளது. இப்போது கிழக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும் நாம் எம்மாலான உதவிகளைச் செய்கின்றோம். எம்முடன் இணைந்து பல கொடை வள்ளல்களும், பரோபகாரிகளும் இந்நற்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் எமது நன்றிகள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. நேற்றுப் பிறந்த தை இனி நாட்டுக்கும், மக்களுக்கும் சுபீட்சம்தான். சகல வழிகளிலும் நாடும், மக்களும் முன்னேற்றம் காண எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களுக்குச் சென்று வெள்ள அனர்த்த நிலைமைகளை நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டதோடு நிவாரணங்களையும் வழங்கினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை உழவு இயந்திரத்தில் சென்று அவர் பார்வையிட்ட போது எடுத்த படம். நாமல் எம். பியுடன், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் உடன் பயணம் செய்கின்றனர்.

0 commentaires :

Post a comment