1/30/2011

சிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும் வ உ சிதம்பரம் அனுப்பிய கப்பலும் ! எஸ்.எம்.எம்.பஷீர்


பொய்மை தீர, மெய்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய
வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி) “
சுப்ரமணிய பாரதி
எதிர்வரும் மாசி ( பெப்ருவரி) மாதக் கடைசியில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் மிடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. அதற்கான அறிவித்தல்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன.அதுவும் அந்த பயணிகளுக்கான கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படும் கப்பலின் பெயரும் வ. உ சி சிதம்பரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரபோராட்டத்தில் பிரித்தானியா அந்நிய ஆட்சியாளர்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் ஒன்றாக வ.உ.சி என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த வ. உ . சிதம்பரம்பிள்ளை பிரித்தானியா கப்பல்களுக்கெதிராக நடத்தி காண்பித்த சுதேசிய கப்பல் சேவையை குறிப்பிடலாம்.
பிரித்தானிய ஆட்சியாளர்களுக் கெதிராக கொழும்புக்கும் தூத்துக்குடிக்கு மிடையில் சுதேசிய கப்பல் சேவை நடத்தி காட்டி தமது பிரித்தானிய ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சி. சிதம்பரம்பிள்ளை என்பதுடன் மறுபுறம் இந்திய உப கண்டம் தழுவிய மாபெரும் சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டையும் அங்கு வாழ்ந்த தமிழரையும் கப்பலோட்டிய தமிழன் என்ற சிறப்பினை பெற்று வரலாற்றில் பதிவு செய்தவர். அன்று அவர் கொழும்புக்கு தூத்துக்குடியிலிருந்து கப்பல் விட்டபோது அக்கால கட்டத்தில் நன்கு தமிழகத்தில் அறியப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் ( இலங்கையில் தமிழர் வரிந்து கொண்ட ஆயுதம் தூக்கிய “வீரர்கள்” போலல்ல இந்த சுதந்திர வீரர்கள் ) கலந்து கொண்டு மகாகவி சுப்ரமணிய பாரதி உட்பட அந்நிகழ்வை கொண்டாடினார்கள். அந்நிகழ்வில் தமது தேச பக்தியையும் எதிர்கால சுபீட்சமிகு இந்தியாவையும் பற்றி “பாரத தேசம்” கவிதையை பாரதி பாடினார் அல்லது எழுதினார். பொதுவாகவே பாரதி தனது கவிதைகளை பாடி சொல்லும் வழக்கமுடையவர் என்பதால் அக்கவிதையை பாடியுமிருக்கலாம். இந்த கவிதையில் தான் அவர்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
என்று தொடங்கும் நீண்ட கவிதையில் மேற்குலகுக்கு கப்பல் விடுவோம் என்பதற்கப்பால் தமது நாட்டுக்கு மிக அண்மையாகவுள்ள சின்னஞ சிறிய தீவான இலங்கைக்கு பாலம் அமைக்க கூட கனவு கொண்டார். அதனால் தான் கொழும்புக்கு கப்பல் விட்ட நிகழ்வுடன் பாரதி இலங்கைக்கு பாலம் அமைக்கும் கனவினை ஒரு இந்திய ஆக்கிரமிப்பு கருத்துடன் அல்லாது இரு நாடும் இணையம் (புராண காலத்தில் -ராமாயணத்தில் – இராமன் இலங்கைக்கு கட்டிய பாலம் உட்பட்ட பகுதி சேது என்று அழைக்கப்படுகிறது ) சிதைவுற்ற தொட்டம் தொட்டமான மணற் தொடுகையான சேதுவை மேடுறுத்தி பாலமைக்க கனவு கண்டார்.
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.
ஆனால் பாரதியின் இந்த கவிதை முழுவதும் சுதந்திர இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வ உ.சீ யின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ((Bio-picture)கப்பலோட்டிய தமிழனில் பயன்படுத்தப்படவில்லை. அதிலும் குறிப்பாக சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்ற கவிதைப் பகுதி தவிர்க்கப்பட்டது. அவ்வரிகள் அரசியல் சம்பந்தப்பட்ட அந்த திரைப்படத்தில் அரசியல் காரணங்களுக்காகவே தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்பதனையும் ஊகிக்க கூடியதாகவிருந்தது. ஆனால் அதற்கு பின்னர் தயாரிக்கப்பட்ட சமூக தமிழ் திரைப்படமான கைகொடுத்த தெய்வம் படத்தில் தான் (இரு திரைப்படங்களிலும் சிவாஜி கணேஷன் நடித்திருந்தார்). பாரதியின் பாரத தேச பாடலின் முன்னைய பாடலில் தவிர்க்கப்பட்ட கவிதை பகுதிகள் இடம் பெற்றன. சிந்து நதியின்மிசை நிலவினிலே என்ற பாடலின் பகுதியாக சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்ற கவிதை வரிகளும் அந்த திரைப்பட ( சினிமா ) பாடலின் பாடல் வரிகளாக இடம் பெற்றன.
ஆக மொத்தத்தில் பாரதி கண்ட சேதுவை மேடுறுத்தம் கப்பல் கால்வாய் திட்டம் அவ்வப்போது மேலெழுந்து மீண்டும் மூழ்கி அரசியல் சர்ச்சைக்குள் அவதியுறும் ஒரு திட்டமாக -கனவாக-இருக்கிறது. ஆனால் வ..உ சி கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் கப்பல் ஓட்டி காட்டியது ஒருபுறம்மிருக்க பின்பு இலங்கையில் தலை மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் மிடையே பயணிகள் கப்பல் சேவை நடைபெற்று வந்ததும் அது வடக்கில் ஆயுத பயங்கரவாதம் காலுான்ற தொடங்கியதும் இடை நிறுத்தப்பட்டதும் பின்னர் பல தசாப்தங்களுக்கு பின்னர் மீண்டும் இப்போது இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வட புலத்தில் இந்திய பூர்வீக திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் (திருவேங்கடம் எனும் பெயர் இலங்கை வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களால் சூட்டப்படும் பெயர் அல்ல ) இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டு அழிக்கப்பட்டு போனபின் தென் இந்திய வடபுல இலங்கை கடல் வழி சுதந்திர பயணங்கள் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி யின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு சுதந்திர நடமாட்டத்தின் ஒரு அம்சமாகவே இக்கப்பல் கப்பல் ஒட்டிய தமிழனை நினைவூட்டி புறப்பட போகிறது.
ஆனால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் சில காலத்தின் பின்னர் சிந்து நதியின்மிசை நிலவினிலே என்ற பாடலை ஒலிபரப்புவதை அரசியல் காரணமாக தவிர்த்துக்கொண்டது. இத் தவிர்ப்பும் ஒருவேளை தமிழர் தரப்பில் சிங்கள தீவு என்ற பதத்தை விரும்பாத தமிழ் ஒலி பரப்பு கூட்டுத்தாபன மேல் மட்ட தமிழ் நிர்வாகிகள் தங்களின் பதவி நிலையை பயன்படுத்தி சேதுவை மேடுறுத்தி பாலமைக்க கூறும் பாடல் வரிகளை இந்திய ஆக்கிரமிப்பு சிந்தனையாக இலங்கை அரசிடம் காட்டி சிங்கள தீவு என்று இப்பாடலில் குறிப்பிடுவதை சகிக்க முடியாமல் சாமார்த்தியமாக தவிர்க்க தங்களின் அரசியலை செய்திருக்கிறார்கள் என்பதும் நோக்கற்பாலது.
எனது பல்கலைக்கழக காலத்தில் ஒரு தடவை பேராதனை பொறியியல் பீட மண்டபத்தில் நடைபெற்ற ஒரு கலை விழாவில் சிந்து நதியின்மிசை என்ற பாரதியின் கைகொடுத்த தெய்வம் படப் பாடலை ஒரு பொறியியல் துறை மாணவர் அந்நிகழ்வில் பாடினார். அவர் அப்பாடலை பாடியபோது சிந்து நதியின்மிசை நிலவினிலே என்ற வரிகள் வரும் இடத்தில் தமிழீழத்திற்கோர் பாலம் அமைப்போம் என்று பாடி தமிழ் மாணவர்களின் பலத்த கரகோசத்தை பெற்றார். அதுவே சிங்களத்தீவின் மீதான எதிர்பினை கோடிட்டு காட்டியதுடன் அங்கு அக் காலகட்டத்தில் பல்கலைக் கழக சூழலில் நிலவிய தமிழ் இளைஞர்களின் தமிழர் விடுதலை கூட்டணி ஊட்டி வளர்த்த பிரிவினைவாதமும் ஜே வீ பியின் -ரோகன விஜேவீரவின்- தீவிரவாதமும் சமகாலத்தில் தளம் கொண்ட ஒரு காலகட்டத்தில் தான் அது நடந்தது.
என்னவானாலும் பாரதி மீது தமிழ் தேசிய வாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் சிங்கள தீவு என்று கூறியதில் சொல்லொணா ஆத்திரமுண்டு . ஆனால் என்ன செய்வது பாரதியை அதுவும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் கவிஞனாக புகழப்படும் மகாகவி பாரதியை எப்படி விமர்சிப்பது. ஆகவே சிங்களதீவு என்று பாரதி குறிப்பிட்டதை ஒருபுறம் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர். ஆனாலும் ஒரு புலி ஊடகவியலாளர் சில வருடங்களுக்கு முன்பு இலண்டனில் உள்ள சன் ரைஸ் வானொலியில் பாரதி குறிப்பிட்ட சிங்களத்தீவு யாழ்ப்பாணத்தை -அதாவது குடாநாட்டை- குறிப்பிடவில்லை ஏனெனில் பாரதிக்கு குடாநாடு தமிழ் தேசம் என்று தெரிந்திருந்தது என்று குறிப்பிட்டதுடன் ( கிழக்கையும் மலையக மக்கள் மேலும் சேது சமுத்திரம் தலை மன்னாரைதான் இணைக்கிறது என்பதயும் சவுகரியமாக மறந்து ) ஒரு புதிய விளக்கம் சொல்ல முற்பட்ட பேதமையை கேட்டேன் .
சரி அது போகட்டும் என்றால் பாரதி சுதந்திர இந்தியாவை காணாமல் அகால மரணமடையாமல் வாழ்ந்திருக்கக் கூடாதா என்ற அங்கலாய்ப்பும் தமிழ் தேசியவாதிகளுக்கும் பிரிவினை வாதிகளுக்கும் இருந்திருக்கலாம் அல்லது இருக்கலாம். ஒரு விவாதத்துக்கு அவர் வட்டுக்கோட்டை தீர்மான காலகட்டம் வரையாவது வாழ்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் செல்வநாயகம் அமிர்தலிங்கம் போன்ற பிரகிருதிகள் அவரை ஒரு வழிபண்ணி ஈழத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று வேறு ஒரு கவிதை எழுத வைத்திருப்பார்கள். அல்லது மாறாக பாரதி அவ்வாறான கோரிக்கை விடுக்கப்படு மிடுத்து ஆத்திரமுற்று ‘ பாண்டியா ! என்னை என்னவென்று நினைத்தாய் ” (பாரதி ஆக்ரோஷம் கொள்ளும்போது பாண்டியா என்றுதான் தன்னோடு சம்பாசிப்பவரை அழைப்பாராம் ) என்று கர்சித்திருப்பார்.
அதுதான் போகட்டும் என்று விட்டால் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தமிழ் பாடகர் ஐரோப்பாவிலிருந்து இயங்கும் தமிழ் வானொலியொன்றில் சிந்து நதியின்மிசை பாட்டை அபாரமாக பாடி அப்பாட்டின் சிங்களதீவு எனவருமிடத்தில் சுந்தர தீவினுக்கோர் பாலமமைப்போம் என்று பாடி வைத்தார். சுந்தரத் தீவு என்று பாடினால் ஆகக்குறைந்தது சந்தமாவது பொருத்தமாக அமையும் .பாரதியின் கவிதை வரியினை மாற்ற முனைந்த முனையும் தமிழ் தீவிர அரசியல் நோக்கு ஒருபுறமிருக்க சுந்தரத் தீவு என்று குறிப்படுவது அழகிய தீவு என்று நன்றாக பொருள்படும் என்பதுடன் பரடைஸ் ஐலன்ட் ((Paradise Island)எனும் சொர்க்கத் தீவுக்கு நெருக்கமான சொல்தானே!. பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டதனால் இலங்கை ஒரு சுதந்திர தீவும் தானோ!!!
எப்படியாயினும் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைக்கும் தூத்துக்குடியை சேர்ந்த பாரதியின் கனவும் வெறும் கனவல்ல மெய்ப்படவேண்டிய பிரார்த்தனைக் கனவு. தூத்துக்குடியை சேர்ந்த கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் கப்பல் பயணங்களும் வெறுமனே ஒரு சரித்திர சம்பவமல்ல மாறாக திவாலாகிப்போன அவரின் கப்பல் கொம்பனியை விட அவரின் பெயரிலே உள்ள கப்பலில் பயணங்கள் செய்வதன் மூலம் அவரின் பெயரை சாதாரண மக்களின் வாய்களில் உச்சரிக்கப் பண்ணப்போகும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் இது.
தென்னாசியாவில் இணைவு பெறும் புதிய பொருளாதர பரஸ்பர நலன்கள் மேவிய பயன்கள் இவ்விரு நாடுகளையும் இன்னமும் இறுக்கமாக இணைக்கலாம் சேதுவை மேடுறுக்கலாம் வ உ சியின் கப்பல்கள் தமிழனின் கப்பல் வரலாற்றை நினைவுறுத்தி பயணிகளை இன மத மொழி வேறுபாடின்றி சுமந்தே இணைக்கலாம்.
sbazeer@yahoo.co.uk
            0044- 7939095467      

0 commentaires :

Post a comment