1/15/2011

சபரிமலை நெரிசலில் அறுபது பேருக்கு மேல் உயிரிழப்பு

கேரளமாநிலத்தில் இருக்கும் சபரிமலைக்கு அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்த சாலைவிபத்தால் ஏற்பட்ட ஜனநெரிசலில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மகரவிளக்கு தரிசன நிகழ்ச்சி முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் கட்டுப்பாடிழந்த வாகனம் ஒன்று புகுந்ததாகவும், அதைத்தொடர்ந்து பக்தர்கள் பலரும் சிதறி ஓடியபோது ஏற்பட்ட ஜெனநெரிசலில் பலர் பலியானதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலைக்கு அருகில் புல்லுமேடு என்கிற இடத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், எழுபத்தி ஐந்துபேர் வரை காயமடைந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், 86 பேர் கொல்லப்பட்டதாகவும் 90 பேர் வரை காயமடைந்ததாகவும் சபரிமலையின் சார்பில் பேசவல்லவர் ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நூறுபேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் செய்தித்தொலைக்காட்சிகள் சில செய்தி வெளியிட்டுவருகின்றன.
விபத்தும் ஜனநெரிசலும் நடந்த இடம் எளிதில் அணுகமுடியாத காட்டுப்பகுதி என்பதாலும், அங்கு போதுமான வெளிச்சம் இல்லாமையாலும், தொலைத்தொடர்புத்துறையின் தகவல் தொழில்நுட்பம் எட்டாத இடமாக அது இருப்பதாலும் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான சரியான தகவல்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருப்பதாக கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள அரசாங்கம் அங்கு பாரிய மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.
 

0 commentaires :

Post a comment