1/31/2011

எகிப்திய ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சி ஆட்டம் காண்கிறது

அரபு நாடுகளின் கல்வித் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், முன்னணியில் இருந்து வரும் பண்டைய நாகரீகத்தின் சின்னமாக விளங்கிவரும் எகிப்தில் அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் விஸ்வரூபம் எடுத்திருப்பதனால் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசாங்கம் இப்போது தடுமாற்றமடைந்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஐந்து நாட்களாக மக்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினாலும், வன்முறைகளினாலும், எகிப்தின் தலைநகரம் கெய்ரோவில் பல கட்டடங்களும் நூற்றுக் கணக்கான வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
எகிப்திலுள்ள 80 மில்லியன் மக்கள் வறுமையில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசாங்கம் அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்து வருகின்ற போக்கை கண்டித்தே மக்கள் இன்று அங்கு அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளார்கள். மக்களின் கிளர்ச்சியை பொலிஸ் அதிரடிப்படை மூலம் தடுத்து விடுவதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்திய போதும் மக்கள் பொலிசாரின் தாக்குதலை முறியடித்து கெய்ரோ நகரை ஒரு யுத்தகளமாக மாற்றியுள்ளார்கள்.
82 வயதான ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு செவிமடுத்து அந்நாட்டின் புலனாய்வுப் பிரிவின் அதிபர் ஒமர் சுலைமானை தனது உப ஜனாதிபதியாக நியமித்து மக்களை சாந்தப்படுத்த முயற்சி செய்த போதிலும் அம்முயற்சியை நிராகரித்த மக்கள் ஹொஸ்னி முபாரக் இராஜிநாமா செய்தால்தான் எகிப்து மக்களுக்கு சுதந்திரமும் பொருளாதார சுபீட்சமும் ஏற்படும் என்று தெரிவித்து தங்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேலும் அதிகரித்துள்ளனர்.
ஹொஸ்னி முபாரக்கின் மகன் கமால் முபாரக் தமது தந்தைக்குப் பின்னர் தான் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியுமென்று கனவு கொண்டிருந்த போதிலும் அவரது இந்த இலட்சியக் கனவும் மக்கள் ஆர்ப்பாட்டத்தினால் சின்னாபின்னாமாகியுள்ளது.
எகிப்தின் பதினைந்து மில்லியன் பலம்வாய்ந்த பொலிஸ் படையும் அங்கு ஜனாதிபதியை ஆதரிப்பதற்கு தயக்கம் காட்டும் பலவீன நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதனால் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் விரைவில் பதவியை இராஜினாமா செய்வார் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.
இது போன்றே இரண்டு வாரங்களுக்கு முன்னர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து டியூனீசியாவின் தலைவரை இராஜிநாமா செய்ய வைத்தனர். இன்று வட அமெரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பு வலுப்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் இளைஞர்களின் வேலையற்றோர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருப்பதே அங்கு முபாரக்கின் அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்கள் வலுவடைவதற்கு பிரதான காரணமாகும்.
ஊரடங்கு சட்டம் எகிப்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அதனை உதாசீனம் செய்து தொடர்ந்தும் கடைகளை கொள்ளையிட்டும், வர்த்தக நிலையங்களை சேதப்படுத்தியும் வருகிறார்கள். இந்த கலவரங்களை அடக்குமாறு அரசாங்கம் இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பித்த போதிலும் இராணுவத்தினர் இது விடயத்தில் அதிக ஆர்வம் காண்பிக்காமல் இருந்து வருவதாகவும் அங்குள்ள அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.

0 commentaires :

Post a comment