1/15/2011

புலம் பெயர்ந்து வாழ்கின்ற எம் உறவுகளே இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுகின்றோம்.

கடந்த சில நாட்களாக இலங்கையில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கிழக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்கை முற்றாக  பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து பாடசாலை மற்றும் பொது இடங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின்  502 நிவாரண முகாம்களில் 181000 க்கு மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளனர் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் எம் மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் பலத்த சிரமங்களை எதிர் நோக்க வேண்டி உள்ளது. இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள  மக்களுக்கு தேவையான உலர் உணவுகளும் சுகாதார வசதிகளும் கிழக்கு மாகாண முதலமைச்சரினாலும் அரசாங்க உதவிகளுடாகவும், நன்கொடையாளர்கள் மூலமும் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் பாதிக்கப்பட்டுள்ள பெருந் தொகையான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. மட்டக்களப்பு மாத்திரம் அன்றி திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 2000 க்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதப்பட்டுள்ளதுடன் 5000 க்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஏழு வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை 400000 த்தை அண்மித்துள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் பாதிப்புக்கள் இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்பட்டுள்ளது.
எனவே வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மக்களுக்கு உடனடித் தேவையான உலர் உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பால்மா வகைகள் மருந்து பொருட்கள் சுத்தமான குடிநீர் துணி வகைகள் போன்றவற்றை வழங்க முடியுமாக இருந்தால் அது மிகப் பெரும் உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை,
புலம் பெயர்ந்து வாழ்கின்ற எம் உறவுகளே இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுகின்றோம்.

0 commentaires :

Post a comment