Election 2018

6/17/2012

| |

பர்மாவின் துன்பங்களை உலகம் மறக்கவில்லை' - ஆங் சான் சூ சி

991 இல் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை, பர்மாவின் துன்பங்கள் உலகத்தால் மறக்கப்படவில்லை என்ற நம்பிக்கையை தனக்கு கொடுத்ததாக பர்மாவின் ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூ சி கூறியுள்ளார்.
அப்போது அந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது அதனை வந்து பெறமுடியாத நிலையில் இருந்த ஆங்சான் சூசி அவர்கள், தற்போது நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோ சென்று அங்கு உரையாற்றியுள்ளார்.

அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

''நோபல் பரிசுக் குழு சமாதானத்துக்கான பரிசை எனக்கு வழங்கியதன் மூலம், அடக்குமுறைக்கு உள்ளான, தனிமைப்படுத்தப்பட்ட பர்மாவும் உலகின் ஒரு பகுதி என்பதை அதன் மூலம் அங்கீகரித்திருக்கிறார்கள். எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என்ற கொள்கையை அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். ஆகவே என்னைப்பொறுத்தவரை, ஒரு நோபல் பரிசை பெறுவது என்பது, ஜனநாயகத்த்தின் மீதான மற்றும் மனித உரிமைகள் மீதான எனது கரிசனைகளை நாடுகளின் எல்லைகளைக் கடந்து விஸ்தரிப்பது என்று பொருளாகும். எனது இதயத்தில் இந்த நோபல் பரிசு ஒரு வாசலைத் திறந்திருக்கிறது'' என்றார் ஆங்சான் சூ சி.
1988 ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படாத ஆங் சான் சூச் சி ஆர்கள், தற்போதுதான் தனது வெளிநாட்டுப் பயணங்களை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பில், ஜெனிவாவில் ஆரம்பித்த அவரது ஐரோப்பிய விஜயத்தின் ஒரு பகுதியாகத்தான அவரது இந்த நோர்வே விஜயமும் அமைந்திருந்தது.
ஒஸ்லோவில் இது குறித்து நடந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நோபல் பரிசுக்குழுவின் தலைவரான தோர்ப்ஜோர்ண் ஜாக்லாண்ட் அவர்கள், ஆங் சான் சூ சி உலகுக்கு கிடைத்த மிகவும் அற்புதமான பரிசு என்று வர்ணித்தார்.
''அன்புக்குரிய ஆங் சான் சூ சி, மிகவும் நீண்ட காலமாக நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம். எப்படியிருந்த போதிலும் எங்களுக்கு ஒரு விசயம் நன்றாகத் தெரியும், அதாவது உங்களுடைய காத்திருப்பு என்பது ஒரு முடிவில்லாத சோதனையாக உங்களை தொடர்ந்தது என்பதை நாங்கள் அறிவோம். உங்களுடைய காத்திருப்பு என்பது எங்களுடையதில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மை வாய்ந்தது என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால், உங்களின் தனிமைப்படுத்தலின் மூலம் முழு உலகின் தார்மீக குரலாக நீங்கள் உருவெடுத்திருக்கிறீர்கள்'' என்றார் நோபல் பரிசுக் குழுவின் தலைவர்.
அங்கு மேலும் உரையாற்றிய ஆங் சான் சூ சி அவர்கள், பர்மாவில் அண்மையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களை வரவேற்ற போதிலும், அதன் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்க முடியாது என்று எச்சரித்தார்.
அதேவேளை தேசிய நல்லிணக்கத்துக்கு தானும் தனது அமைப்பும் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் அவர் கூறினார்.
மனச்சாட்சிப்படி நடந்ததற்காக ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டால் கூட, அது மோசமான நிலைமைதான் என்று கூறிய அவர், அனைத்து அரசியல் கைதிகளும், நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கோரினார்.
பர்மாவின் இனப்பிரச்சினை குறித்தும் தனது உரையில் குறிப்பிட்ட ஆங் சான் சூ சி அவர்கள், நோபல் பரிசானது, சமாதானத்துக்காக உழைக்கும் தனது நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
சர்வதேச சமூகம் பர்மாவில் சுமூக நிலைமை ஏற்பட கடுமையாக உழைப்பதாக கூறிய அவர், பர்மா இது தொடர்பில் உரிய பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
பர்மிய சுதந்திரப் போராட்ட வீரரான ஆங் சானின் மகள்தான் ஆங் சான் சூ சி. அவரது தந்தை 1947 இல் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.