உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/25/2012

| |

மட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்

கடந்த காலத்தில் யுத்த சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பிரயாணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து விமானசேவைகள் பொறியியல்துறை இந்த விமான நிலையப் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
மட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புக்கென 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 03ஆம் திகதி ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
இது தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று மட்டக்களப்பு விமானத் தளத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் விமானசேவைகள் நிலையப் பிரதிப்பணிப்பாளர் கமல் ரத்வத்தை, சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபேரூ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.சார்ள்ஸ் உட்பட நகர அபிவிருத்தி அதிகாரசபை,  விமானசேவைகள் பொறியியல்துறை, மட்டக்களப்பு விமானப்படைத்தள இணைப்பாளர், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது விமானப்படைத்தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டதுடன் அமைச்சர்களும் பார்வையிட்டனர்.
இந்தப் புனரமைப்புப் பணிகள் நிறைவுபெறும் பட்சத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நேரடியாக மட்டக்களப்புக்கு வரக்கூடிய வசதிகள் ஏற்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இதனால் மட்டக்களப்பு மாவட்டம் சுற்றுலாத்துறையில் மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் பாரிய வெற்றியடையவுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிந்தனையில் உருவான இந்தத் திட்டம் மூலம் தமிழ் மக்கள் சிறந்த பயனை அடையமுடியும் என்பதுடன் அவருக்கு அனைவரும் நன்றிக்கடன் உள்ள மக்களாக இருக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்