Election 2018

8/19/2012

| |

கிழக்கின் பெருந்தலைவர் நல்லையா!

கிழக்கின் பெருந்தலைவர் நல்லையா!                       
                                                                                                                           
 *எம்.ஆர்.ஸ்டாலின் 


1815ம் ஆண்டு கண்டி இராச்சியத்தை ஆங்கிலேயர் கைப்பற்றியதோடு முழு இலங்கையும் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டது.  அன்றிலிருந்து சுமார் 100 வருட காலம் இலங்கையர்கள் தமது சொந்த அரசியல் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் வாய்ப்பை இழந்திருந்தார்கள்.இந்த நிலையில் முதன் முதலாக மாற்றம் ஏற்படுவதற்கு காரணமாய் அமைந்தது 1910ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குறு மக்கலம் சீர்திருத்த முயற்சி ஆகும். அதன் ஊடாக இலங்கையில் முதன் முதலாக இலங்கை பிரதிநிதிகளை உள்ளடக்கிய சட்டசபை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பை படித்த இலங்கையர்களின் பிரதிநிதி எனும் வகையில் பொன் இராமநாதன் தனதாக்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து 1921ல் மனிங் சீர்திருத்தம் ஏற்படுத்திய சட்டசபை விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் பல தமிழர்கள் சட்டசபையில் இடம் பிடித்தனர். இந்த சட்டசபை நுழைவில் இருந்து பல அரசியல் தலைவர்கள் தமிழர்கள் மத்தியில் இருந்து உருவாகத் தொடங்கினர்.ஆனால் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு தமிழருக்கேனும் இந்த சட்டசபை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் 1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பு ஏற்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் அரசாங்கசபை உருவாக்கப்பட்டது. இந்த அரசாங்க சபைக்கு பிரதேச ரீதியாகவும் சில ஒதுக்கீடுகள் நடந்தன. அதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலிருந்து 02 அரசியல் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். அதில் ஒருவராக மட்டக்களப்புத் தெற்கு தொகுதியில் இருந்து வி.நல்லையா அவர்கள் தெரிவானார்.

விபுலானந்தரின்; நெருங்கிய நண்பராக இருந்த வி.நல்லையா சிறந்த கல்வி மானாகவும், சமூகசேவையாளராகவும் செயற்பட்டார். சட்டசபையின்                                                                                                                                                                      விவாதங்களின் போதெல்லாம் கிழக்கு மாகாண மக்களின் நலன் சார்ந்து அவரது குரல் எப்போதும் தனித்துவமாகவே ஒலிக்கும். ஒரு பட்டதாரியாக கல்லூரி அதிபராக இருந்து சட்டசபைக்குள் நுழைந்த நல்லையா மாஸ்டரின் திறமையை சிங்கள அரசியல் தலைவர்கள் பெருமதிப்புடன் அணுகினார். அதன் காரணமாக சட்டசபை கல்வியமைச்சுக் குழுவிலும் இடம்பெற வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது.

1947ம் ஆண்டு இடம் பெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறை அறிமுகமானபோது நல்லையா மாஸ்டர் அவர்கள் கல்குடா தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

இந்த வேளையில் தான் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் டி.எஸ்.சேனநாயக்கா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். வடக்கின் பெருந்தலைவராக உருவாகியிருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்திற்கு நிகராக கிழக்கு மாகாணத்தின் தனித்துவங்களை பறை சாற்றும் வல்லமை கொண்ட தலைவராக நல்லையா மிளிர்ந்தார்.

நல்லையா உள்ளவரை வடகிழக்கு தமிழர்களின் பெருந் தலைவர் என்ற அந்தஸ்தினை ஜீ.ஜீ.ஆல் கைப்பற்ற முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் கால் பதிக்கவென ஜீ.ஜீ எடுத்த பகீரதப் பிரயானத்தனங்கள் படு தோல்வியிலேயே முடிவுற்றன.

இலங்கை சுதந்திரமடைந்த போது வடக்கில் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையும் பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலையும் நிறுவப்பட்டது. அவ் வேளை கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாணத்திலும் ஒரு தொழிற்சாலை நிறுவ வேண்டுமென நல்லையாவின் குரல் ஓங்கி ஒலித்தது. இதற்காக மேற்கொண்ட அயராத முயற்சி காரணமாகவே வாழைச்சேனை காகித ஆலை நிறுவப்பட்டது.

அதே போன்று இலங்கையில் அவ்வேளைகளில் காணப்பட்ட உதவி நன்கொடை வெறும் பாடசாலைகளே தரம் உயர்ந்தனவாக இருந்தன. அவற்றிற்கு நிகராக மூன்று மத்திய பாடசாலைகளை உருவாக்க அரசாங்கம் முயன்ற போது அதில் ஒன்று தமிழ்ப் பிரதேசங்களை மையப் படுத்தி நிறுவப்பட வேண்டுமென குரல் கொடுத்தவர் நல்லையா மாஸ்டர் ஆவார். அதனடிப்படையில் அந்த மத்திய மகா வித்தியாலயத்தை கற்குடா தொகுதியிலுள்ள வந்தாறுமூலையில் அரசு நிறுவியது. தமிழ்  பிரதேசத்திற்கென ஒதுக்கப்பட்ட அந்த மத்திய மகா வித்தியாலயத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவ வேண்டுமென யாழ்ப்பாணத்து அரசியல் வாதிகள் குரலெழுப்பிய போது பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் ஏற்ப்பட்டன.

வடமாகாணத்தின் கல்வி நிலை, கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை, இருக்கின்ற வளங்கள், பாடசாலைகள் போன்றவற்றினை ஒப்பிட்டு பாராளுமன்றில் நல்லையா மாஸ்டர் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அவரது அயராத முயற்சியின் காரணமாகவே இன்று கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு அத்திவாரமாய் அமைந்த வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் உருவாக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேசத்திலிருக்கின்ற இயற்கை வளங்களை தோரமாகக் கொண்டு வாழைச்சேனை பெரு நகரத் திட்டமொன்றினை அமைக்க நல்லையா அவர்கள் எண்ணங் கொண்டிருந்தார். காகிதஆலை, மத்திய மகாவித்தியாலயம் போன்றவற்றோடு இணைத்து பாசிக்குடா சுற்றுலாமையம், கற்குடா துறைமுகம் என்பவற்றை அபிவிருத்தி செய்வதனூடாக வாழைச்சேனையை கல்வி,சமூக,பொருளாதார ரீதியில் கிழக்கு மாகாணத்தின் பெருமையாக உருவாக்க அவர் கனவு கண்டார்.

அது மட்டுமன்றி மட்;டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை, கோட்டமுனை மகாவித்தியாலயம் போன்ற வற்றினை அமைத்ததனூடாக மட்டக்களப்பின் கல்வியியல் வரலாற்றில் பெருந் திருப்ப மொன்றினை அவர் நிகழ்த்தினார்.

கல்விசார் துறை மட்டுமன்றி கிழக்கு மாகாண மக்களின் சமூக,பொருளாதார,பத்திரிகை துறையென்று சகல துறைகளையும் முன்னேற்ற அவர் பாடுபட்டார். இரா.பத்மநாதன், ளு.P.சிவநாயகம் போன்ற எழுத்தாளர்களையும் இலங்கையின் பத்திரிக்கைத் துறையில் பெரும் ஆளுமைகளாக வளர்த்தெடுத்ததில் அவரது பங்கு அளப்பரியதாக இருந்தது.

தமிழ் கலை கலாச்சார பாரம்பரிய அடையாளங்களை பாதுகாக்கும் முயற்சியில் பிராமணிய அடையாளங்களை தமிழர்களிடையே திணித்து வந்த ஆறுமுக நாவலரின் செயற்பாடுகளை அம்பலப் படுத்துவதில் வாழைச்சேனை பிரதேசத்தில் மையங் கொண்டிருந்த நாவலர் எதிர்ப்பியக்கம் உருவாவதற்கு நல்லையா மாஸ்டர் அவர்களின் செயற்பாடுகளும் ஆதாரமாய் அமைந்தன.

உதவி அமைச்சராகவும் சிறிது காலம் அமைச்சராகவும் பதவி வகித்த நல்லையா அவர்களை தாழ்ப்புணர்ச்சி காரணமாக டட்லியின் அமைச்சரiவிலிருந்து ஒதுக்கி விடுவதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் வெற்றி பெற்றமையானது கிழக்கு மாகாண மக்களுக்குச் செய்யப்பட்ட மிகப் பெரிய துரோகமாகும்.

செனட் சபையிலும் 1947ம், 1952ஆம் ஆண்டுத் தேர்தல்களில் வெற்றியீட்டி பணியாற்றிய நல்லையா மாஸ்டர் அவர்கள் தனது இறுதிக் காலங்களில் உருவாக்கிய “கிழக்கு மக்களின் முன்னணி” என்ற அமைப்பினை வெற்றி கரமாக வளர்த்தெடுக்க முடியவில்லை 1956ம் ஆண்டு தேர்தலிலே தனிச் சிங்களச் சட்டமென்பது முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மொழி உணர்வுகள் மக்களை ஆட்கொண்டது. தமிழ் மொழி உணர்வுகளைக் கிளறி தமிழரசுக் கட்சியினர் எழுப்பிய இனவாதக் கோசங்கள் கிழக்கு மாகாண மக்களின் தனிப் பெருந் தலைவனாய் நிமிர்ந்து நின்ற நல்லையா மாஸ்டர் அவர்களை தோல்வி காணச் செய்தது.   
தமிழரசுக் கட்சியினரால் பரப்பப்பட்ட நல்லையா மாஸ்டருக்கு எதிரான அரசாங்கத்தின் கைக்கூலி பிரச்;சாரம் கிழக்கு மாகாண மக்களை ஆட்கொண்டது

ஆனாலும் கிழக்கு மாகாண மக்களுக்கும் மண்ணுக்கும் நல்லையா மாஸ்டர் அவர்கள் ஆற்றிய பணியினை வரலாற்
றுப் பக்கங்களிலிருந்து யாரும் மறைத்துவிட முடியாது.