Election 2018

8/22/2012

| |

ஒரு வாக்கினை கூட வீட்டுச் சின்னத்திற்கு வழங்க மாட்டோம் முனைக்காட்டு மக்கள் சபதம்.

முனைக்காட்டு கிராமத்தின் அனைத்து விளையாட்டு கழகங்களும் சமூக நிறுவனங்களும் இணைந்து ஒரு வாக்கினை கூட வீட்டுச் சின்னத்திற்கு வழங்க மாட்டோம் என்று சபதம் எடுத்தனர். கிராம தலைவரும் ஆலய வண்ணக்கரும் ஆகிய மானாப்போடி தலைமையில் பிரச்சார கூட்டம் இடம் பெற்றது அங்கு முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் உரையாற்றுகையில்...
தமிழீழம் பெற்றுத் தருகின்றோம் சர்வதேசத்தின் தீர்வு காத்திருக்கிறது,காலம் கனிந்து விட்டது வாருங்கள்! வாருங்கள்! அணிதிரள்வோம். என்றழைத்து வாக்குகளைக் கபளீகரம் செய்துவிட்டு இருந்த இடத்திற்கும் பதில் சொல்லாமல் ஓடிவிடுவார்கள் இந்தக் கூட்டமைப்பினர். நாயாவது குரைத்துவிட்டுச் செல்லும் நன்றிகெட்டவர்கள் இவர்கள். கிழக்கு மண் மீதும் மக்கள் மீதும் அளப்பரிய பற்றுக் கொண்டவன் நான். எனது மக்களை வைத்து ஏய்த்துப் பிழைக்கும் கயவர்களுக்குச் சரியான பதிலடி கொடுப்போம்.

நம்பி வாக்களித்த மக்களைக் கடைசி வரையும் கைவிடாமல் துன்பங்களை மக்களுக்காய்த் தானேற்று இறக்கும் வரை பயணிப்பவனே நல்ல தலைவன். தான் பெற்ற மக்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டு வாழ்வதென்றால்,அர்ப்பணிப்பு சிறிதேனும் இல்லையென்றால் அரசியல் தலைவர்களாக ஏன் ஐயா! மக்களுக்கு போலி வித்தை காட்டி உலா வருகின்றீர்கள்? ஆடம்பரப் பங்களாவில் நீங்கள் குடியிருக்கவும் அரச சலுகைகளைப் பெற்றுக் கொண்டு சுகபோகமாய் வாழவும் எம் மக்கள் உதவி என்று வந்து கேட்டால் “நாங்கள் கூட்டமைப்பு அரசுக்கு எதிரானவர்கள் எம்மிடம் போதியளவு நிதியில்லை” என்று பஞ்சம் கூறிக் கைவிரிக்கவும் தானா? எம் மக்கள் இவ்வளவு நாளும் நம்பி உங்களுக்கு வாக்களித்தார்கள்? மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லவேண்டும.; இந்தக் கூட்டமைப்பினர் எம் மக்களுக்கு இந்தநீண்டநெடியஅரசியல் வரலாற்றில் ஏதாவது நன்மைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்களா? அடியும் உதையும் பசியும் பட்டினியும் சாவும்தானே இத்தனை வருடகாலமும் எம் மக்களை அரவணைத்து முத்தமிட்டது.இவைகள் தானே எம் மக்களுக்காய் நீங்கள் பெற்றுக் கொடுத்தது.
மண்முனை ஆற்றிற்குக் குறுக்காகப் பாலம் அமைக்கப்படப் போகின்றது. இதற்கு ஜப்பான் அரசு உதவி செய்கின்றது. நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.
இவ்வளவு பெரிய பாலத்தை மண்முனையில் கட்டித்தர வேண்டுமென ஜப்பான்காரனுக்கு என்ன தலைவிதியா? மண்முனை மக்களுக்குத் தேவை இருக்கின்றது என்று ஜப்பான்காரன் நேரடியாக வந்து எமக்குப் பாலம் போடுவானா?
ஜனாதிபதி நினைத்திருந்தால் ஜப்பானின் இந்த  உதவியினை அம்பாந்தோட்டையில் செய்யுங்கள் என்று கூறிவிடமுடியும் அல்லது தென்னிலங்கையின் எங்கோ ஓர் பகுதியில் அந்த அபிவிருத்தி நிச்சயம் நடக்கும். ஆனால் எமது பிரதேசத்திற்குத் தேவை இருக்கின்றது எங்கள் மண்முனையாற்றுக்குப் பாலம் வேண்டும் என்று வலியுறுத்தி சண்டைபிடித்து எமது பிரதேசத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பதுயார்? இது யாருடைய பொறுப்பு? இதையெல்லாம் விட்டு,விட்டு அபிவிருத்தி தானாய் நடக்குமாம் என்று சிறுபிள்ளைத் தனமாய்க் கூறுகிறது இந்தக் கூட்டமைப்பு.
ஓர் பொறுப்புள்ள அரசியல் கட்சி கூறுகின்ற பதிலா  இது? எம் மக்கள் எப்படிப் போனாலும் பரவாயில்லை தங்களது கதிரைகள் மட்டும் காப்பாற்றப்படவேண்டும் என நினைக்கின்றார்கள்.
துன்பங்களை மலைகளாகத் தூக்கிச் சுமந்தவர்கள் எமது மக்கள மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள் எம் மக்களைத் தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு நாம் தயாராகவும் இல்லை,துணை நிற்கப் போவதும் இல்லை. அந்தவகையில் நாம் தெளிவாக இருக்கின்றோம். எமது கிழக்குமாகாணம் வெளித்துவிட்டது  மெல்ல,மெல்ல இருள் அகன்று வருகின்றது. எமது விடியலை யாரும் தடுக்க முடியாது,எம்மையும் எமதுமக்களையும் வீழ்த்தவும் முடியாது என்று தெரிவித்தார்.
இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்களான பூ.பிரசாந்தன் (முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர்)
சி.சிறிதரன் (வெல்லாவெளிப் பிரதேச சபை தவிசாளர்)மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தேர்தல் பிரச்சாரம் இடம் பெற்ற முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டு மைதானத்தினை 02 மில்லியன் செலவில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களே அமைத்துக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.