உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/24/2012

| |

25ஆம் தேதியுடன் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்படவுள்ளது

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்திருந்த 3 லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் நாளை மறுதினம் 25ஆம் திகதியுடன் மூடப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.
இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள மீள்குடியேற்ற நடவடிக்கையில் தற்போது மனிக்பாம் முகாமில் மிஞ்சியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 361 குடும்பங்களையும் அவர்களது பகுதிகளுக்கு திங்களன்று அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அந்த மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து நேற்று மனிக்பாம் முகாமுக்குச் சென்றிருந்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அவரும் இதனை உறுதிப்படுத்தினார்.
முக்கிய இராணுவ அதிகாரிகள், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் சனிக்கிழமையன்று மனிக்பாம் முகாமுக்குச் சென்று அங்குள்ள மந்துவில் மற்றும் கேப்பாப்பிலவு பகுதி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றனர்.
இந்தச் சந்திப்பின்போது தங்களைத் தமது சொந்த கிராமத்திலேயே மீள்குடியேற்ற வேண்டும் என்று தாங்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும், மாதிரி கிராமம் போன்ற வசதிகளுடன் கூடிய ஓரிடத்தில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதனால், அங்கு சென்று குடியேற வேண்டும் என்று அதிகாரிகள் முடிவாகத் தெரிவித்திருப்பதுடன், மனிக்பாம் முகாம் மூடப்படுவதனால் வேறு வழியில்லை என்றும் அதிகாரிகள் தங்களிடம் கூறியிருப்பதாக கேப்பாப்பிலவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மனிக்பாம் முகாமை மூட வேண்டும் என்ற அதிகாரிகளின் முடிவினால் தாங்கள் விருப்பமில்லாத ஒரு நிலையிலேயே வேறிடத்தில் சென்று குடியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.