Election 2018

9/30/2012

| |

வாசிப்பு மனநிலை விவாதம்- 3

வாசிப்பு மனநிலை விவாதம் 3வது தொடர் கடந்த ஞாயிறு (23-09-2012) நடைபெற்றது. கடந்த 2வது விவாதத்தில் கலந்து கொண்டவர்களோடு மேலும் பலர் அதிகமாக கலந்துகொண்ட  சந்திப்பு இதுவாக இருந்ததில் மேலும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. குறிப்பாக பல இளைஞர்கள் புதிதாக கலந்து கொண்டதென்பது இவ்வாறான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதற்குரிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சந்திப்பில் விவாதிக்கப்பட இருந்த இரண்டு நூல்கள் பற்றிய ஓர் அறிமுகத்தை உதயகுமார் அவர்கள் முன்வைத்தார். உதயகுமார் அவர்கள் பிரான்சில் இயங்கிய ரி.ஆர்.ரி எனும் வானொலியில் அரசியல் கலந்துரையாடல்களை நெறிப்படுத்தி வந்தவர். புலிகளின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஜனநாயக பூர்வமான பல தரப்பட்ட கருத்துகளும் மோதுவதற்கான களமாக அந்த அரசியல் கலந்துரையாடலை நீண்ட காலமாக நடத்திவந்தவர். இவ்வாறான இலக்கிய-சமூக-அரசியல் பிரதிகளின் வாசிப்பும் அது பற்றிய கலந்துரையாடல்களும் தொடர்ச்சியாக நிகழ்த்தபடவேண்டும் என்று ஊக்கப்படுத்தியவர்களில் உதயகுமார்  அவர்களும் ஒருவர்.
உதயகுமார் அவர்களின் நூல் அறிமுகம்:வாசிப்பு மனநிலை விவாதம் 3வது தொடர் இது. இவ்வாறான நிகழ்வை நடத்தவேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு இருந்தோம் ஆனால் அது அப்போது கைகூடவில்லை. இருந்தபோதும் தற்போது இந்த நிகழ்வை நாம் 3வது தொடராக தொடர்ந்து நடத்தி வருகின்றோம். அந்தவகையில் சிறப்பம்சமாகவே இதை நான் கருதுகின்றேன். இன்று மிக முக்கியமான இரண்டு நூல்கள் குறித்து உரையாட இருக்கின்றோம். முக்கியமாக யோ.கர்ணன் அவர்களது சிறுகதைகள் குறித்து சொல்வதென்றால் யோ.கர்ணன் அவர்கள் ஒரு போராளியாக இருந்தவர். முள்ளிவாய்க்கால் அனுபவங்களோடு வாழ்பவர். அவரது எழுத்துகள் எமது ஆயுதப்போராட்டத்தில்  கட்டமைக்கப்பட்ட புனிதங்களையெல்லாம் கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக இந்தப்போராட்டத்தை  புனிதப்படுத்திய சம்பவம் புகலிடத்திலேயே கூடுதலாக நடைபெற்றது. இந்த புனிதம் எனும் பிம்பம் யோ.கர்ணனின் அனைத்துக் கதைகளாலும் உடைக்கப்படுகின்றது. உதாரணமாக சிலதைக் கூறலாம் இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்துக்கொடுப்பவர்களுக்கு ஒரு சையிக்கிள் பரிசாக வழங்கப்படுவது. புகலிடத்திலிருந்து போராட்டத்தை ஊக்கப்படுத்துபவர்களே பெண்போராளியாக முன்பு இருந்தவர்களை திருமணம் செய்ய தயங்குவது போன்ற பல சம்பவங்களை நாம் யோ.கர்ணனின் கதைகளில் காணலாம். யோ.கர்ணனின் அனைத்து கதைகளின் முடிவுகள்தான் வாசிப்பவர்களின் மனதை உலுப்புகின்ற சம்பவங்களாக அமைந்திருக்கும். இதே பாணியை நான் சோபாசக்தியின் கதைகளை வாசிக்கும்போதும் உணர்ந்திருக்கின்றேன். யோ.கர்ணனின் இவ்வாற்றலானது அவருக்கு  இயல்பாக அமைந்ததா! அல்லது பிற வாசிப்பு அனுபவங்களுடாக பெற்றாரா என்பது ஆச்சரியமாக உள்ளது. அவரது கதைகள் பற்றிய மேலதிக அனுபவங்களை நாதன் உங்களுக்கு கூறுவார்.
அடுத்ததாக கார்டன் வைஸ் அவர்களின் ‘கூண்டு’. இதில் முள்ளிவாய்க்கால் இறுதியுத்த சம்பவங்களை கூறுவதோடு, இலங்கையின் அரசியல் வரலாற்றையும் தொட்டுச் செல்கின்றது. இதில் வந்து சீனா, இந்தியா, ரசியா போன்ற நாடுகள் புலிகளை இல்லாமல் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததென்பதாக கார்டன் வைஸ் பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றார். தலைவர் எது நடந்தாலும் இறுதியில் வெற்றிபெறுவார் என்பதாக மக்கள் இறுதிவரை நம்பியிருந்தனர் என்பதையும் குறிப்பிடுகின்றார். அச்சம்பவத்தை நகைப்பிற்கிடமாக விபரிப்பதாகவும் உணரக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை அரசிற்கு சீனா வழங்கும் ஆதரவை மேற்குலகம் கண்டிக்கமுடியாத சூழல் என்பதற்கான காரணமாக, சீனாவின் மிகப்பாரிய பொருளாதார வளர்ச்சியை இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.  சீனக்குடியரசை முதல் முதலில் ஆதரித்த நாடாக இலங்கை இருந்ததையும், அதன் அடிப்படையில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சீனாவை மீறி இலங்கைப் பிரச்சனையில் தலையிடமுடியாத ஜக்கிய நாடுகள் சபையின் நிலை, அதையும் மீறி பாதுகாப்புச்சபை கூடினாலும் அது ஒரு சம்பிரதாயபூர்வமான நிகழ்வாகவே இருந்தது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் எடுப்பதை எதிர்த்து சீனாவும், ரசியாவும் உறுதியாக இருந்தது போன்ற தகவல்களும் பதிவாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் குறித்து நாங்களே அறிந்தவிடயமான வெளியேற முயற்சிக்கும் மக்களை கொன்ற சம்பங்களை தமிழரல்லாத கார்டன் வைஸ் அவர்களே உறிதிப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை அரசானது தனது நாட்டின் இறைமையை பேணுவதற்காக யுத்தம் புரிவதையும் ஏற்றுக்கொள்கின்றார். வெளிநாட்டு சக்திகள் தலையிட்டு யுத்தத்தை நிறுத்துவதற்காக மக்கள் அதிகமாக கொல்லப்படுவதை புலிகள் விரும்பினார்கள், அதே நேரம் மக்களை புலிகளிடமிருந்து பிரித்தெடுப்பதிலேயே இராணுவம் மூர்க்கமாக செயல்பட்டது எனவும் பதிவு செய்துள்ளார். இருந்தபோதும் மக்கள் அழிவு குறித்து இரு தரப்புமே அக்கறைகொள்ளவில்லை என்றும் கூறுகின்றார். இவ்வாறு பதிவு செய்யும் கார்டன் வைஸ் அவர்கள் அரசாங்கம் எவ்வாறு இழப்பில்லாமல் மக்களை மீட்டிருக்க முடியும் என்ற கருத்தெதையும் முன்வைக்கவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றார்கள். கார்டன் வைஸ் அவர்கள் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் மக்களே கொல்லப்பட்டிருப்பார்கள் எனும் கருத்தை முன்வைத்திருக்கின்றார்.
இன்று நாம் விவாதிக்கவுள்ள இரண்டு நூல்களுமே வன்னியில் நடைபெற்று முடிந்த யுத்த விளைவுகளையே பேசுகின்றது. அந்தவகையில் ’கூண்டு’ நூல் பற்றிய தனது கருத்தை   வாசுதேவன் அவர்கள்  கூற இருக்கின்றார். முதலில் யோ.கர்ணனின் சிறுகதைகள் குறித்து நாதன் ( அசுரா) பேசுவார்.
யோ.கர்ணனின் சிறுகதைகள் விமர்சனத்திற்குள்ளாகும் தன்மைகள், அக்கதைகள் குறித்த அசுராவின்: “தமிழ்த் தேசியத்தை சந்தைப்படுத்துவதற்காக மொழியும், இனமும் கிடந்து மாளும்”
உரையாடல்:
அரவிந் அப்பாத்துரை:   போர் முடிந்த பிற்பாடு இந்த வகையான கதைகள் இப்போதுதான் வரத் தொடங்கியிருக்கின்றது. இதில் வந்து புலிகள் மீதான விமர்சனம் நிறையவே உள்ளது. முதல் கட்ட வாசிப்பில் இவை விடுதலைப்புலிகள் மீதான விமர்சனமாகத்தான் கருதப்படும்.
நீங்க குறிப்பிட்டீர்கள் அப்படிப்பட்ட மனநிலையில் வாசிக்கவில்லை என்பதாக. அப்படியிருப்பினும் இப்படியாக முதல் முதல் எழுதப்படும் காரணத்தால் முதல் வாசிப்பில் புலி எதிர்ப்புக் கதைகளாகத்தான் பார்க்கப்படும் என்பது எனது ஒரு கருத்து. அது காலப்போக்கில் உங்களது வாசிப்பு நிலைக்கு வரலாம். ஆனால் முதல் வாசிப்பில் இவை புலி எதிர்ப்பு கதைகளாகத்தான் பார்க்கப்படும். இரண்டாவது வந்து சோபாசக்தி பற்றி பேசிநீங்க, அவரோட கம்பார் பண்ணிப் பேசிநீங்க. எழுத்தோட்டம் வந்து சோபாசக்தியின் எழுத்தோட்டமாகவே இருக்கின்றது. இதில வந்து ஒரு விசயம் புரியவில்லை  யோ.கர்ணன் சோபாசக்தியின் எல்லையை மீறியுள்ளார் என்ற ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறீங்க!  இலக்கியத்தில் எல்லை மீறுவது வந்து என்ன மாதிரி என்பதைக் கொஞ்சம் தெளிவு படுத்துங்க.
அசுரா: நான் சொன்னது அனுபவம் குறித்ததுதான்.
அரவிந் அப்பாத்துரை: so உள்ளடக்கத்தில் அனுபவத்தில் அவருக்கு கிடைத்த பல சம்பவங்களையா?
அசுரா: ஓம் இயக்கக் கதைகளை  சோபாசக்தியூடாக நாங்க  அறிந்ததுதானே. அந்தவகையில்தான் அந்த அனுபவங்கள் யோ.கர்ணனிடம் அதிகமாக இருக்கும் என்ற வகையில் சொல்லப்பட்டதுதான் ‘எல்லை’ என்பது
அரவிந் அப்பாத்துரை: சோபாசக்தி வந்து புலிகள் பலமாக இருந்த சமயத்தில் இவ்வாறான கதைகளை எழுதினார். இப்ப அவ்வாறான நெருக்கடிகள் இல்லாதபோது இவர் எழுதுகின்றார். நீங்கள் சொல்வதுபோல் உள்ளடக்கம் பெரிதாக இருந்தாலும் கூட அந்த ‘எல்லை’ எனும் பிரச்சனை தான் மீண்டும் வருகின்றது. சோபாசக்தி கடந்த எல்லையை இவர் கடக்க முடியாதென்ற எண்ணம் எழுகின்றது. அவர் எழுதுகின்றபோது றெம்ப ஸ்ரிக்காக இருந்தது. ஓப்பினாக சொல்றன் அப்போது சோபாசக்தியை வந்து எல்லோரும் துரோகி  என்று சொன்னார்கள். ஆனால் இவரை யாரும் துரோகி என்று சொல்லப்போறதில்லை. சொல்லுறதுக்கு ஆக்களே கிடையாது.
சோபாசக்தி:  சொல்லுறாங்க.
அரவிந் அப்பாத்துரை: சொல்லுவாங்க ஆனால் அந்தளவிற்கு அபாயகரமானதாக இருக்காது.
அசுரா: யோ.கர்ணன் தமிழ்தேசியத்திற்கு எதிரானவர் என்று பலர் சொல்லுகிறார்கள் அவர் ஒரு தமிழ்த்தேசிய விரோதி என்ற கருத்துப்பட ஜமுனா ராஜேந்திரன், தமிழ்நதி, ரயாகரன் போன்றோர் எழுதியும் இருக்கிறார்கள். ‘ஐயனின் எல்.எஸ்.ஆர். எனும் கதை வந்து ஈ.பி.டி.பி இயக்கத்தையும் அதன் தலைமையையும் விமர்சிக்கும் கதை  அதன் காரணமாக யோ.கர்ணன் பல நெருக்குவாரங்களுக்கும் உள்ளாகியும் இருக்கின்றார்.
சோபாசக்தி: யோ.கர்ணன் மீது பலர் துரோகி என்ற பட்டம் சுமத்தி வருகின்றார்கள். தொடர்ச்சியாக இணையங்களை பார்த்து வருபவர்களுக்கு அது தெரியும். இன்று காலம்பிற கூட பத்துப்பேர் வரை எழுதியிருக்கிறார்கள் யோ.கர்ணன் ஒரு துரோகி, அரச நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வேலை செய்பவர் என்று. மற்றது என்னையும் யோ.கர்ணனையும் ஒப்பிட்டு பேசிநீங்க. நான் இயக்த்தில் இருந்தது 3 வருசம். நான் இருந்த காலத்தில பெரும் சிக்கலான பிரச்சனைகள் இருந்ததில்லை. பிள்ளைகளை பிடிக்கேலாது, நினைச்ச உடனே யாரையும் சுட ஏலாது. நான் இருந்தது 86க்கு முன்பு. எனக்குத் தெரியாத பெரிய ஒரு உலகம் தெரியும் யோ.கர்ணனுக்கு. நான் 3 வருசம் என்றால், அவர் 10 வருசத்திற்கு மேலாக இயக்கத்தில் இருந்திருக்கிறார். எனக்கு இயக்கத்தில் இருந்ததில் ஒரு காயமும் கிடையாது அவர் ஒரு காலை இழந்திருக்கிறார். அதோட நான் வந்து ஈ.பி.டி.பி யை எதிர்த்தோ, புலிகளை எதிர்த்தோ, இலங்கை அரசாங்கத்தை எதிர்த்தோ எழுதியது இங்கு, புகலிடத்தில் இருந்து. நல்ல பாதுகாப்பா இருந்து எழுதினன். கர்ணன் இப்பவும் அங்க இருந்துகொண்டு எழுதிக் கொண்டிருக்கின்றார். நான் இலங்கையில் இருந்தால் இப்படி எழுதுவேனா என்பது சந்தேகம்தான். மனத் துணிச்சலுடன் எழுதிக் கொண்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் நடந்த அவரது புத்தக வெளியீட்டில் இராணுவம் குறுக்கிட்டு அவரது புத்தகத்தையும் பறிச்சிருக்கிறது. இரண்டுதரம் கர்ணன் விசரணைக்கு சென்றிருக்கின்றார். இப்படியான இக்கட்டான சூழலில் இருந்து எழுதுவதென்பது மிகப்பெரிய சவால். அது மிகப்பெரியதொரு வேள்விதான்; கர்ணன் போன்றவர்கள் இதுபற்றிப் பேசிக்கொண்டிருப்பதென்பது. நாதன் முதலில் குறிப்பிட்டார் விடுதலைப் புலிகளின் எதிர்பாளர்களால் தான் கர்ணனின் கதைகள் விரும்பப்படுகின்றதென்றதொரு விமர்சனம் இருப்பதாக. அது உண்மை. கர்ணன் வந்து விடுதலைப் புலிகள் மீதான கடும் விமர்சனத்தை முன்வைக்கின்றார். நாங்கள் வைச்ச விமர்சனங்களெல்லாம் எங்களுக்குத் தெரிந்த 86க்கு முன்பு நடந்தவை பற்றியதும் இங்கு வந்ததன் பிற்பாடு யாரும் சொன்னதை வைத்தும் எழுதியது. ஆனால் அவர் இறுதிவரை உள்ளே இருந்து பார்த்தவர். முள்ளிவாய்க்காலில் இறுதிவரை இருந்தவர். அவர் வைப்பது இரத்தமும் சதையுமான விமர்சனம்.அதை யாராலும் மறுக்க முடியாது. நான் இப்படி எழுதினால் படிக்கும்போதே மறுக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. சோபாசக்தி யாரோ சொன்னதைக் கேட்டு எழுதியிருக்கின்றான் என்று. ஆனால் கர்ணனை மறுக்க ஏலாது. கர்ணன் அங்கிருந்த இரத்தமும் சாட்சியும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அந்தவகையில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்…, இங்கும் கூட விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் யாரும் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக கர்ணனை மறுப்பார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. காரணம் கர்ணன் விடுதலைப்புலிகள் பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கின்றார். அதேவேளை அரசாங்கத்தைப் பற்றியும், ஈ.பி.டி.பியை பற்றியும், இந்திய அரசாங்கத்தைப் பற்றியும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கின்றார். பொதுவாக இந்த விசயங்களையெல்லாம் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கவனத்தில் எடுப்பதில்லைத்தானே! ஆயிரம் பக்கங்களில் அரசாங்கத்தை எதிர்த்து எழுதியிருந்தாலும் இரண்டு வசனம் புலிகளை எதிர்த்து எழுதினால் அவர்கள் கொந்தளித்து விடுவார்கள். ஆகவே விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கர்ணனை எதிர்ப்பதோ அல்லது அவர்களது வழமையான உத்திப்படி  டக்ளசின் கைக்கூலி என்றோ, அரசாங்கத்தின் கைக்கூலி என்றோ போர்தொடுப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் கர்ணனை விரும்பி வாசிக்கின்றார்களா என்றால் அது உண்மை. அது எப்படி என்று சொன்னால் கர்ணனின் இந்தப்புத்தகம் இலக்கிய வட்டத்திற்குள் உலாவுகிற  புத்தகம். நம்ம இலக்கியவட்டங்கள்தான் இந்த புத்தகத்தை படிப்பார்கள். இலக்கியம் படிப்பவர்கள் யாரு? அவர்கள் எல்லாத்தையும் படிப்பார்கள்.  அவயள் நாலு கொம்யூனிசப் புத்தகத்தைப் படிப்பினம். நாலு ஜனநாயக புத்தகத்தைப் படிப்பினம், யு.என்.எச்.ஆர் அறிக்கை படிப்பினம். கூண்டு புத்தகத்தை படிப்பினம்.
ரூபன்:  ஆனந்த விகடனும் படிப்பினம்.
சோபாசக்தி: ஓம் ஆனந்த விகடனும் படிப்பினம். உதெல்லாம் படிக்கிறவன், சிந்திக்கத் தெரிந்தவன் ஓட்டமெற்றிக்கா விடுதலைப்புலிகளுக்கு எதிராகத்தான் மாறுவான். இந்த யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் அநியாயம் என்பது கொஞ்ச நஞ்சமல்ல. அரசாங்கத்திற்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு விடுதலைப் புலிகளிடமும் இருக்கின்றது. ஆகவே அரசியல் அறம் சார்ந்து சிந்திக்கத் தெரிந்தவன், ஒரு மனிதாபிமானி நிச்சயமாக விடுதலைப்புலிகளின் அரசியலுக்கு எதிராகத்தான் இருப்பான். ஆகவே அப்படியான ஒருவன் கர்ணனின் புத்தகத்தை விரும்புவதொன்றும் ஆச்சரியம் இல்லை. இவைகளுக்கு அப்பால நடுநிலையாக இருப்பதாக சிலர் சொல்லுகிறார்கள்.  இந்த யுத்தத்தில் இரண்டு இலட்சம் பேர் செத்திருக்கிறார்கள், ஐம்பதுநாயிரம் பேர் அங்கவீனம், லட்சக்கணக்கானவர்களுக்கு பயித்தியம், ஐயாயிரம் பேர் இன்னும் பிறிசினில இருக்கிறார்கள். இப்படியிருக்க நான் அந்த பக்கமும் இல்ல… இந்தப் பக்கமும் இல்ல என்று சொன்னால் அவர்கள் மனிசர் இல்லை, அவர்கள் பிணம். இவர்களை நினைச்சால் ஒளவையார் சொன்னது தான் ஞாபகம் வருது ‘படிக்காதவன் முகத்தில் இருக்கும் கண் இரண்டும் புண்’ என்றார். எனவே அவர்கள் குறித்து பேசத் தேவையில்லை. சிந்திக்கத் தெரிந்தவன், அறிவுள்ளவன், ஒரு ஜனநாயகவாதி என்பவன் விடுதலைப் புலிகளின் அரசியலை எதிர்ப்பான், அதேவேளை அவன் இலங்கை அரசாங்கத்தையும் எதிர்க்கவேண்டும்! எல்லா அநியாயத்தையும் எதிர்ப்பான் அப்படி எதிர்ப்பவன் கர்ணனின் கதைகளை கண்டிப்பாக ஆதரிப்பான் விரும்புவான்.
அரவிந் அப்பாத்துரை: புலி ஆதரவு அரசாங்க எதிர்ப்பு என்பதை மீறி போர்காலத்தைப்பற்றி எழுதும் கதைகள் எல்லாமே விமர்சனக் கதைகளாகவே இருக்கும். போர்க் காலங்களில் நிகளும் பேரிழிவுகள் பற்றி யாரும் ஆதரித்து எழுத முடியாது. அதாவது வந்து நீங்க விடுதலைப் புலிகள் இயக்கத்தப்பற்றி எழுதினாலும் சரி, அரசாங்கத்தைப் பற்றி எழுதினாலும் சரி அல்லது எந்த இயக்கத்தைப் பற்றி எழுதினாலும் போர் நடந்த காலகட்டம் அதன் வெளி அது ஒரு விமர்சனத்திற்குரிய வெளிதான்.
அசுரா: அரவிந், சோபாசக்தி, வாசுதேவன் நீங்க படைப்பாளிகள்,  கர்ணனின் ‘சேகுவேரா இருந்த வீடு’பற்றிய ஒரு விமர்சனம் ஒன்றை பார்த்தேன் அதை இங்கு வாசிக்கிறேன் அதுபற்றிய அபிப்பிராயத்தையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறன்.“சிங்கள தமிழ் அரசியல் தலைமைகள் என இரண்டுமே சேகுவேராவின் ஆன்மாவைத் தீண்டமுடியாது. இதுவே மெய். பிறகு எதற்காக யோ.கர்ணன் தனது சிறுகதைத் தொகுப்பை கிறிஸ்தோபரின் வீடு என்பதற்கு மாறாக சேகுவேரா இருந்த வீடு என குறிப்பிடுகிறார். வீடு என்பது விடுதலை, வீடு என்பது நினைவுகள் வாழும் இடம், வீடு என்பது அங்கு வாழ்பவரின் முதுசம். சேகுவேரா ஒருபோதும் அவரது அரசியல் நோக்கில், புரட்சிகர ஆன்ம நோக்கில் இலங்கையில் நுழைந்திருக்கவில்லை.  நுழைந்தேயிராத ஒருவர் எவ்வாறு அந்த வீட்டில் குடியிருக்க முடியும்.சேகுவேரா இன்று ஒரு விளம்பரப்பொருளாகவும், விற்பனைப் பொருளாகவும், ஒரு மோஸ்தராகவும் ஆகமுடியும் என்பதற்கான சான்றுபோல்தான் யோ.கர்ணனின் சிறுகதைத்தொகுப்பின் தலைப்பாகவும் அவர் ஆகியிருக்கிறார்.” இப்படியான அபிப்பிரயத்தை எப்படி புரிந்து கொள்வது.
அரவிந் அப்பாத்துரை:  யாரு ஜமுனா ராஜேந்திரனா?
விஜி:  சேகுவேரா எனும் வார்த்தைக்கு இருக்கும்  புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில்தான் அவர் அப்படி எழுதியிருக்கிறார்.
தில்லைநடேசன்:  அது வந்து சும்மா ஒரு குறியீடுதான்.
உதயகுமார்:  கதையில் வரும் பாத்திரத்தின் இயக்கப்பெயர்.
சோபாசக்தி: தோழர்களே யமுன ராஜேந்திரனோடு கிட்டத்தட்ட 20 வருசமா மல்லுக்கட்டிக்கொண்டு வாறம் அதில உங்களவிட எனக்குத்தான் நிறைய அனுபவம் இருக்கு. அவர் ஒவ்வொரு தரம் ஒவ்வொன்று கதைப்பார். 2009 க்கு பிறகுதான் விடுதலைப் புலிகளும் மனித உரிமைகளை மீறியிருக்கிறார்கள் என்று கதைக்கிறார். 2009 க்கு முதல் அவர் கதைச்சது கிடையாது. முஸ்லிம் மக்களை துரத்தியது பற்றி ஒரு வார்த்தை கதைச்சதில்ல. அவர் வந்து…..அவர்…. பெரிய தொல்லைதான் எங்களுக்கு. அந்தாள் இப்படி எழுதிக்கொண்டுதான் இருக்கும். தொல்லைதான்….அதை எப்படி நிப்பாட்டிறதெண்டால்…. இந்த குளோபல் வெப்சைற் மாதிரி ஒரு வெப்சைற்றை நாங்களும் தொடங்கி… குளோபல் தமிழ் வெப்சைற் காரர் ஒரு பக்கத்துக்கு 100 பவுண் குடுத்தாங்கள் எண்டால் நாங்கள் ஒரு 150 பவுண் கொடுத்தம் எண்டால் தான் இந்த தொல்லையை நிப்பாட்டாலாமே ஒழிய வேற வழியில்லை. அவர் காசுக்கு எழுதுற ஆளுங்க. அதை அவரே ஒத்துக்கொண்ட விசயம். அவரைப்பற்றி எல்லாம் கதைக்கேலாது அதை விடுங்க.
விஜி: பெண்ணிய வாதிகளையும், புகலிட இலக்கிய சூழலையும் யோ.கர்ணன் சாடியிருக்கிறார் என்ற விமர்சனம் வைத்தவரும் ஜமுனா ராஜேந்திரன் தான். ஆனால் எனக்கும் தமிழ்கதை வந்து மிகவும்  பிடித்த கதை. புகலிடத்தில இருக்கிற தமிழ் தேசியவாதிகள் அல்லது தமிழ் ஈழத்தை நேசிக்கின்ற ஆக்களின் மனநிலை எப்படி இருக்குது என்பதை வெளிப்படுத்துற வகையிலதான் யோ.கர்ணனின் அநேகமான கதைகள் அமைந்திருக்கு. அங்கேயிருந்து போராடுகிற, அந்த சூழ்நிலைக்குள் இருக்கிற மக்களின் மனநிலை எப்படி இருக்கு, புகலிடத்தில கொடிபிடிக்கிற ஆக்களும், தேசியத்தை போற்றுகிற ஆக்களின் மனநிலையும் எப்படி இருக்கு என்பதை இந்த கதையில  அழகாக விபரிக்கபட்டிருக்கு. புகலிடத்தில் இருகிகிறவர்கள் வந்து அங்கே இருக்கிறவர்கள்தான் கலாச்சாரத்தை பாதுகாக்கவேணும் எண்டு நினைக்கிறார்கள் இங்க தங்களது பிள்ளைகளெல்லாம் அப்படியெல்லாம் கலாச்சாரத்தை பாதுகாக்கத்தேவையில்லை. அங்கே இருக்கிற பெண்கள்தான தங்களது கலாச்சாரத்தை பாதுகாக்கவேணும் அங்கே இருக்கிற பெண்கள் சிங்களவர்களோட பழகேலாது, முஸ்லிம்களோட பழகேலாது.  உன்ர பெண்ணை சிங்களவனோடையா விட்டிருக்கிறாய் என்று ஒரு கவிஞர் பின்னூட்டம் விட்டிருப்பதாக சொல்லப்பட்டிருப்தெல்லாம்  அதுதான். இங்க இருப்பவர்கள் யாரையும் காதலிக்கலாம், எவரையும் விரும்பலாம், அங்க இருக்கும் பெண்கள் பத்தினியாகத்தான் இருக்கவேணும். சோபாசக்தியின் ‘கடவுளும் காஞ்சனாவும் ’ என்ற கதையில் சொல்வதுபோல் வைச்சாள் ஒரு வெடி காஞ்சனா கடவுளுக்கு என்பதான முடிவுகள் யோ.கர்ணனின் கதைகளிலும் காணக்கூடியதாக இருக்கு. ‘திரும்பி வந்தவன்’என்ற கதை அவ்வாறுதான் இருந்தது. வெக்கம் நளினத்தோட கூடிய பாலியல் தொழில் செய்யும் தமிழ் ஈழப் பெண் ஒருவரைத் தேடுவதும், அந்தப்பெண் இறுதியில் அசோக் அண்ணா என்னை விடுங்கோ இந்தவேலை செய்யுறா எண்டு  என்ர அம்மாவை நீங்கதானே சுட்ட நீங்க. என்ற அந்த முடிவை வாசித்ததன் பிறகு எனக்கு கொஞ்சநேரம் ஒன்றும் செய்ய ஏலாமல் போய்விட்டது.
அசோக் பிரகாஸ்:  எனக்கும் அந்தக்கதை மிகவும் பாதித்தது.
விஜி:  அதேபோல ‘அரிசி’ என்ற கதையும் மிகவும் பாதித்த கதை. ஒரு தாயின் இழப்பென்பதை அதை அனுபவித்தவர்களால்தான் உணரமுடியும் இறந்த தாயின் இரத்தில் ஊறிய அரிசியை மகள் கழுவிக்கொண்டிருப்பதை பார்பதில் கதை முடிவடைகிறது. சடலங்களுக்கு மத்தியிலும் தாயின் மரணத்தையும் தாண்டி அடுத்த நேர சூழலை விபரிக்கும் விதம் மிகக் கொடுமையானது. நாதன் சொன்னது மாதிரி யோ.கர்ணனின் கதைகள் உணர்வு ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவைகளை வந்து வெறும் புலி எதிர்ப்புக் கதையாக என்னாலும் பார்க்கமுடியவில்லை. இந்த தமிழ் தேசியவாதிகளிடம் இருக்கும் புனிதத்தை கேள்விக்குள்ளாக்கிற கதைகள்தான் எல்லாமே. ஏன் இந்தபோராட்டம் பாழாப்போனது என்பதற்கான கேள்விகளாகத்தான் இருக்கிறது. தேசியத்தை விரும்புகிறவர்களோ, தமிழ் ஈழத்தை  விரும்புகிறவர்களோ இந்தப்போராட்டத்தில் என்னென்ன பிரச்சகைள் நடந்திருக்கிறதென்பதை யோசிப்பவர்களாக இருப்பின் யோ.கர்ணனின் கதைகளில் வரும் முடிவகளிலிருந்து சிந்திக்கவேண்டும். அப்போதுதான் புதிய ஒரு வழியை தேடமுடியும். அந்தக் காலத்தில் புளொட் இல் இருந்த எனக்கு தெரிந்த பெண்கள் பலர் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். இயக்கத்தில் இருக்கும்போது சக தோழிகளை விரும்பிய ஆண்கள் அவர்களை வேண்டாம் எனக்கூறி வேற திருமணம் செய்தவர்களும் இருக்கிறார்கள். அப்படியான பெண்கள் இன்றுவரை திருமணம் முடிக்காமல் இருப்பதும் எனக்குத் தெரியும் அதற்கு ஒரே ஒரு காரணம் இயக்கத்தில் இருந்ததுதான். இதே போன்ற சம்பவத்தைதான்  ‘திரும்பி வந்தவள்’எனும் கதையும் சொல்லுகிறது. ஊரில் இருக்கும்போது காதலித்தவர்களில் ஆண் வெளிநாடு வந்ததன் பிற்பாடு காதலித்த பெண் சூழ்நிலை காரணமாக இயக்கத்திற்குபோய் ‘திரும்வி வந்தவள்’. அதன் காரணமாகவே புகலிடத்தில் இருப்பவர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுக்கிறார். அதே நேரம் புகலிடத்தில் ராஜபக்சவின் வருகைக்கு எதிராக கொடியேந்திப் போராட்டம் செய்த அவரது புகைப்படம் பத்திரிகையில் வருகிறது. புகலிடத்தில் இருக்கிற தேசிய வாதிகள் ஊரில் இருக்கும் பெண்கள் எப்படி இருக்கவேணும் என்று கருதுகின்றாங்கள்  என்பதையும்,  புகலிடத்தில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறாங்கள் என்பதையும்  காட்டுவதாகத்தான் யோ.கர்ணனின் சில கதைகள் அமைந்திருக்கிறதாக நான் நினைகிறன்.
துரைசிங்கம்: சேகுவேரா இருந்த வீடு என்ற கதையின் பெயர் பற்றி எனக்கு தெரிந்த ஒருவிடயம். முன்பு காசிலிங்கம் என்ற பத்திரிகை ஆசிரியர் 71ஆம் ஆண்டின் ஜே.வி.பி இயக்கத்தின் கிளர்ச்சி  பற்றி எழுதிய ஒரு புத்தகத்தில் ஜே.வி.பியை சேகுவேரா என்றே குறிப்பிட்டு எழுதியுள்ளார். பாமரமக்கள் மத்தியிலும் சேகுரோ இயக்கம் என்றே பேசப்பட்டும்வந்தது. இயக்கத்தில் இருந்தவர் பெயர் சேகுவேரா என்பதாகவும், இயக்கத்தின் உபயோகத்தில் அந்த வீடு இருந்ததாலும் ஒரு குறியீட்டுப்பெயராக சேகுவேரா என்ற பெயர் வைத்தில் தவறில்லை என்பது எனது அபிப்பிராயம். மற்றது இப்படியான கதைகள் வந்து கூடுதலாக வந்துகொண்டிருக்கு. விடுதலைப் புலிகளுக்கு எதிராகவெல்லாம் கதைக்கிறார்கள். சரி,பிழைகளுக்கு அப்பால் விடுதலைப் புலிகளிடமும் சரியான விசயங்கள் கனக்க இருந்தது. போராட்டத்தில கனக்க இருந்தது அதை சொல்லேலாது எனக்கு. அந்தப்பக்கங்களை ஒருதரும் பாக்கிறதில்ல. விமர்சனக் கண்ணோட்டத்தில பார்க்கும்போது தனிய பிழைகளைமட்டும்தான் பார்க்கப்படுகின்றது.
சோபாசக்தி:  ஒரு சரியை சொல்லுங்கோவன்.
துரைசிங்கம்:  உதாரணமாக சொல்லப்போனால், அவர்களில் கனக்க பிழைகள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இருணுவமுகாம் தாக்குதல்கள், உதாரணத்திற்கு ஆனையிறவு இராணுவ முகாம் வந்து எங்களுக்கு முக்கியமான ஒரு தளம். அதை தகர்க்கிறதுக்காக இரண்டு தரம் முயற்சி செய்யப்பட்டது. அப்போது பல இழைப்புக்களையும் சந்திக்க நேர்ந்தது. அப்படியும் அது அழிக்கப்பட்டது. அதற்காக மற்றைய இயக்கங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை அவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் செய்திருப்பார்கள். ஆனால் அதை விடுதலைப் புலிகள் விடயில்ல. இருந்தும் அப்படி செய்திருக்கிறார்கள் அப்படியான விசயங்களில் அவர்கள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள்.
சோபாசக்தி:  ஓம்… யோ.கர்ணன் ஆக்கள்தான் ஆனையிறவு அடிச்சது.
துரைசிங்கம்: அவர்களது இழப்புகளையெல்லாம் நான் நேரில் இருந்து பார்த்ததால சொல்லுறன். தொழில் நுட்பங்களிலெல்லாம் ஒரு வளர்ச்சி இருந்தது. அதுகளை ஒருதரும்  சுட்டிக்காட்டவில்லை. இப்படியெல்லாம் சொல்லுவதை நான் பிழை என்று சொல்லவில்லை. இரண்டு பக்கமும்  சொல்லவேணும் என்பதுதான் என்ர அபிப்பிராயம். முன்பெல்லாம் அனைத்து பத்திரிகைகள், சஞ்சிகைகள்  எல்லாமே விடுதலைப்புலிகளை புகழ்ந்துதான் எழுதுவார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த  றொபேட் என்பவரோடு  நான் ஒரு முறை கதைத்தபோது அவர் எனக்கு சொன்விசயம், இப்போது விடுதலைப் புலிகளை போற்றி எழுதுபவர்கள் ஒருகாலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எழுதுவார்கள் என்று. அவர் சொன்னது தீர்கதரிசனமாக இன்று நடக்குது. இதில நான் சொல்லவாற விசயம் என்னவென்றால் இயக்கத்திற்கு வெளியால இருந்தவர்கள் கதைக்கிறத விட இயக்கத்துக்குள் இருந்தவர்களே இப்போ கதைக்க வந்துள்ளார்கள். அந்தவகையில் யோ.கர்ணனின் கதைகளை புலி எதிர்ப்பாளர்கள் என்றில்லாமல் வாசிப்பவர்கள் எல்லோரும்  ஏற்றுக்கொள்வார்கள்  என்பதுதான் எனது கருத்து.
‘கூடு’ பற்றிய உரையாடல் மிக விரைவில்