உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/18/2012

| |

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் தெரிவு?


கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப் ஏ. மஜீட்டை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவான நஜீப் ஏ. மஜீட் முதலமைச்சராக பதவியேற்றால், முதல் முஸ்லிம் முதலமைச்சராக விளங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமைப்பதனால் அக்கட்சிக்கு இரண்டு மாகாண அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளது எனவும் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலதிகமாகவுள்ள இரண்டு மாகாண அமைச்சு பதவிகளில் ஒன்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாயக்கவிற்கு வழங்கப்படும் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ஆகிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளதவாகும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு மாகாண அமைச்சு பதவிகளையும் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களான எம்.மன்சூர், ஏ.எம்.ஜெமீல் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அகமட் ஆகிய மூவரில் இருவருக்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன், தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்தவர்களுக்கு கிழக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.