உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/06/2012

| |

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக் கொள்ளும் ஆசனங்கள்: கடந்த கால தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஓரு பார்வை…

 முஹம்மத் பாசில் -
இறுதித் தேர்தல் பிரச்சாரப் பணிகள் நேற்று (05.09.2012) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடைந்த நிலையில் இந்த அரசியல் சதுரங்கத்தின் இறுதிப் போட்டி எதிர்வரும் 08.09.2012 இல் வாக்களிப்பாக அரங்கேறப் போகின்றது.
இதனை நடைபெறப் போகும் மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் ஒப்பிட்டுப் பார்ப்பதனைவிட இன்று தேசியத்திலும் ஏன் சர்வதேசத்திலும் மிக முக்கியமானதாக கருதப்படும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பேசுவது சாலச்சிறந்த்தெனலாம்.
அதிலும் குறிப்பாக இவ்விணைய வாகனம் காத்தான்குடி மண்ணை நோக்கிய செய்திப் பயணத்தை மேற்கொள்வதனால் எமது மண்சார்ந்த மட்டு மாவட்டம் தொடர்பாக அலசலாம் என இப்பார்வை எதிர்பார்க்கின்றது.
இந்தத் தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமடைந்த காலகட்டத்தில் இம்மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் சுயேற்சைக் குழுக்களும் தமது பிரசாரங்களில் தங்களுக்கு சார்பாக எத்தனை ஆசனங்களை தாம் கைப்பற்றுவோம் என்று உரத்த தொனியில் கோஷமிட்டதனை அவதானித்தோம். இதற்கு அந்தந்த கட்சிகள் தமதணியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனும் நோக்கில் பல்வேறு வியுகங்களை தமது பிரசார மற்றும் மக்கள் சந்திப்புக்களில் உபயோகித்தனர். இந்த வாக்கு வேட்டைக்காக சிலர் தமது பிரசார உத்திகளை மற்றவர்களை விமர்சிப்பதிலும் பிறர் செய்ததாக அறியப்பட்ட கடந்த கால விடயங்களில் குறை கண்டு பிடிப்பதிலும் தமது காலங்களை அதிகம் செலவிட்டதுடன் மற்றுமொரு பிரிவினர் மத இன பிரதேச வாதங்களை தமதாயுதமாக பயன்படுத்தி வாக்குக் கோரிக்கையினை சமர்ப்பித்தனர்.
சரி எது எவ்வாறிருப்பினும் எமதாய்வானது இந்தத் தேர்தல் தொடர்பான ஒரு ஒத்திகை முடிவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இனி கடந்த 2008 மாகாண சபைத் தேர்தலை எடுத்து நோக்கினால் அந்த தேர்தல் முடிவுகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சாதகமானதாக அமைந்திருந்த்து. இத்தேர்தலில் அக்கட்சி 105,341 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களைப் பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியானது 58,602 வாக்குகளுடன் 04 ஆசனங்களையும் TDNA எனும் கட்சியானது 7714 வாக்குகளுடன் 01 ஆசனத்தையும் பெற்றுக் கொண்டது.
இம்முடிவுகளின் அடிப்படையில் சுமார் 7700 வாக்குகளை அதாவது 4.25 வீத பெற்றுக் கொண்ட TDNA எனும் கட்சிக்கும் ஒரு ஆசனம் கிடைத்ததனால் இந்த தேர்தலில் 05 வீதமான வாக்குகள் பெற்றுக் கொண்ட கட்சிகள் ஆசனத் தெரிவில் உள்ளடக்கப்படும் எனும் பிரசாரம் பொய்யாகியது.
அத்துடன் இது இம்மாவட்ட ரீதியான ஆய்வாகையால் 2010 இல் இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டு ஆய்வதானது இவ்வாய்வின் நோக்கத்தை மேலும் மெருகூட்டுமென எதிர்பார்க்கலாம்.
இப்பொதுத் தேர்தலில் 2008 இல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாத இலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிட்டதனால் அக்கட்சி 66,235 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 62,009 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியானது 22,935 வாக்குகளுடன் 01 ஆசனத்தையும் கைப்பற்றின. எனினும் இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் முன்னால் முதலமைச்சர் பிள்ளையானின் கட்சியானது வோட் சின்னத்தில் போட்டியிட்டு 16886 வாக்குகளை அதாவது 9.35 சதவீத வாக்குகளைப் பெற்று ஆசனத்தை இழந்தது.
இவ்விரண்டு தேர்தல்களும் அடுத்தடுத்து மாவட்டத்தில் இடம்பெற்ற அண்மைய தேர்தல்களாகும். இத்தேர்தல் இரண்டிலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிட்டன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இனி இம்முறைத் தேர்தலுடன் இம்முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கடந்த 2008 மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிட வில்லை ஆதலால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 06 ஆசனங்களை பெற்றது. ஆனால் அது இம்முறை சாத்தியமகாது போகும். அத்துடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை தனித்து போட்டியிடுவதனால் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 04 ஆசனங்களும் கிடைக்காது.
இது இவ்வாறிருக்க கடந்த 2010 பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் வோட் சின்னத்தில் போட்டியிட்டு 16886 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் ஒன்று சேர்ந்து களமிறங்கியுள்ளதனால் இரு கூட்டும் இணையும் போது 62009+16889= 78895 ஆக வாக்குகள் அதிகரிப்பதற்கே வாய்ப்புக்கள் அதிகமுண்டு.
இத்தொகையானது மேலும் மேலும் அதிகரிப்பதற்கே அதிக சந்தர்ப்பங்களுண்டு ஏனெனில் இம்முறை ஆளும் கூட்டமைப்பில் பிரதி அமைச்சர் கருணா அம்மானும் இணைந்து கொண்டு பிரசாரங்களை மேற்கொண்டார். அத்துடன் தமிழரசுக் கட்சியானது மாவட்டத்தில் கிரிஸ்தவ சமயத்தைப் புறக்கணித்தும் அந்த மத்த்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் எந்தவொரு அபேட்சகரையும் தேர்தலில் நிறுத்தவில்லை என்னும் குற்றச்சாட்டுக்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் பொதுவாகப் பேசப்படுவதனாலும் சுமார் ஒரு இலட்சத்துக்குமேற்பட்ட வாக்குப்பலத்தை மாவட்டத்தில் கொண்ட கௌரவ கிரிஸ்தவ சமூகத்தினரும் ஐ.ம.சு.  கூட்டமைப்பையோ அல்லது ஐ.தே.க.யையோ ஆதரிக்கலாம் எனும் ஊகம் ஆளும் கட்சிக்கு மட்டு மாவட்டத்தில் வாக்குப்பலம் அதிரிக்கலாம் என ஆய்வாளர்கள் சலசலக்கின்றனர்.
மேலும் தமிழரசுக் கட்சியானது 2010 இல் தாம் பெற்றுக் கொண்ட 66,235 வாக்குகளை தொடர்ந்து இம்முறையும் தக்கவைக்குமா எனும் சந்தேகமும் காணப்படுகின்றது. ஏனெனில் இம்முறைய மாகாண சபைத் தேர்தல் கருத்துக்கணிப்பில் தமிழ்ப் பிரதேசங்களில் மக்கள் வாக்களிப்பில் விருப்பமின்மையையே அவதானிக்க முடிகின்றது. அத்துடன் முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தமிழரசுக் கட்சி மந்த கெதியிலேயே தமது பிரசாரங்களை மேற்கொண்டதுடன் அப்பிரதேசங்களில் ஆளும் கட்சியின் தீவிர பிரசார நடவடிக்கைகள் தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியை நலிவடையச் செய்யும்.
எனவே இம்முறை மட்டு மாவட்ட முடிவுகள் ஆளும் ஐ.ம.சு.மு. கட்சியை வெற்றிபெறச் செய்யலாம். அக்கட்சியானது கடந்த 2008 மாகாண சபைத் தேர்தல் போன்று சுமார் 85,000 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களையும் சுமார் 70000 வாக்குகளை பெற்றுக் கொள்ளும் தமிழரசுக் கட்சி 04 ஆசனங்களயும் பெற்றுக் கொள்ள ஈற்றில் எஞ்சும் ஒரு ஆசனத்தை சுமார் 12000 க்கும் 15000 க்கும் இடைப்பட்ட வாக்குகளைப் பெறும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும் என எதிர்வு கூறலாம்.
எனினும் இவ்வாக்கெண்ணிக்கை அண்ணளவான உத்தேசமான அளவாகையால் இவ்வெண்ணிக்கை கூடிக் குறைவடையக் கூடிய வாப்புக்களே அதிகமுண்டு. இந்த இடத்தில் பெரும்பாண்மைக் கட்சிகளுக்கு ஆசன ஒதுக்கீடுகள் மேற்கொள்ளும் போது ஒருசில வாக்குகள் அக்கட்சிகளுக்கு மேலுமொரு ஆசனத்தை பெற்றுக் கொள்ளப் போதுமானதாக இல்லாத போதே கடைசியாக வரும் கட்சிக்கோ அல்லது சுயேற்சைக் குழுக்கோ ஆசனம் கிடைக்க சந்தர்ப்பமுண்டு.
அதாவது UPFA – 05, ITAK – 04 SLMC – 01 என முடிவுகள் அமையுமாயின் எஞ்சும் ஒரு ஆசனம் எமதுர்ரைச் சேர்ந்த சுயேற்சைக் குழு 08க்கு கிடைக்குமா? என்பது வினாக்குறியாகும்.
ஏனெனில் கடந்த 2010 பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க யின் சார்பில் போட்டியிட்ட மாவட்ட அமைப்பாளர் திரு. சசிதரன் அவர்கள் சுமார் எட்டாயிரத்துக்குமதிகமான விருப்பு வாக்குகளையும் ஐ.தே.க. மு.கா கூட்டு 22935 வாக்குகளையும் பெற்றதனால் இம்முறை இத்தொகையில் மு.கா. இன் 12000-15000 வாக்குகளைக் கழித்தால் எஞசியவற்றை இந்த மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் பகுதிகளில் ஐ.தே.க. நிரந்தர வாக்குப் பலமாகக் கொண்டுள்ளதனால் அக்கட்சி சுமார் 8000-10000 இக்கு இடைப்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்பங்களுண்டு.
அத்துடன் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான மாசிலாமணி என்பவர் ஐ.தே.க. இல் நிறுத்தப்பட்டுள்ளதனால் அதுவும் அக்கட்சிக்கு வாக்குப்பலத்தை அதிகரிகச் செய்யும்.
ஆனால் இந்த நல்லாட்சி சுயேற்சைக் குழு 08 ஆனது கடந்த காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் 6809 வாக்குகளைப் பெற்றது. இந்தவாக்குகளில் மு.கா. வின் வாக்குகள் சுமார் 1500 உள்ளதாக கூறப்படுவதுடன் இம்முறை மு.கா. இல் 03 வேட்பாளர்கள் காத்தான்குடியில் நிறுத்தப்பட்டுள்ளதனால் இத்தொகை குறையக் கூடிய வாய்ப்புக்களே உண்டு. அத்துடன் நல்லாட்சி சுயேற்சைக் குழு 08 க்கு முஸ்லிம் பிரதேசங்களான ஏறாவுர் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை போன்ற பிரதேசங்களில் வாக்குகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அரிது. ஆதலால் நல்லாட்சி சுயேற்சைக் குழு 08 மாவட்டத்திலேயே சுமார் 5000 க்கு உட்பட்ட வாக்குகளையே பெற்றுக் கொள்ளும்.
எனவே தொகுத்து நோக்குமிடத்து இம்முறை மட்டு மாவட்டத்தில் 06,04,01 என்று ஆசனப் பகிர்வு அமையுமாயின் ஐ.தே.க. க்கோ அல்லது சுயேற்சைக் குழுவுக்கோ ஆசனம் கிடைக்காது. ஆனால் 05,04,01,01 என்று ஆசனப் பகிர்வு அமையுமாயின் அது இறுதி ஆசனத்தை ஐ.தே.க. க்கே பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுண்டு எனலாம்.
இம்முடிவுகள் மாற்றமடையக் கூடிய வாய்புக்களும் இல்லாமலில்லை எனினும் இந்த ஆய்வானது கடந்த கால மட்டு மாவட்டத்தில் இடம்பெற்ற முக்கிய தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதே தவிர தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கருத்திற் கொள்ளப்படவில்லை.

நன்றி *காத்தான்குடி .கொம்