உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/20/2012

| |

நல்லிணக்கம், மீள்கட்டுமான விடயங்களில் முன்னேற்றம் உள்ளது: ரஷ்ய அதிகாரி

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானம் தொடர்பான விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக  ரஷ்யாவின் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி விவகார ஆணையாளரான கொன்ஸ்டான்டின் டோல்கோவ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மேற்கொண்ட இரு நாள் விஜயத்தின் நிறைவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"நிலைமை முன்னேற்றமடைகிறது. மிக வெற்றிகரமான நல்லிணக்க மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இது பெரும் பெறுபேறாகும்" என அவர் கூறினார்.  உள்ளூராட்சி செயன்முறையை மீள ஸ்தாபித்தல் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கான செயற்திட்டம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யாவைச் சேர்ந்த கொன்ஸ்டான்டின் டோல்கோவ் கூறினார்.

இலங்கையின் இறையாண்மை வரம்பிற்குள், வினைத்திறனான பொறுப்புடைமை செயன்முறை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

எனினும், மனிதாபிமான விவகாரங்களில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், இது குறித்து அவர் விபரிக்கவில்லை.

சர்வதேச அரங்கங்களிலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கைக்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது  இரட்டை நிலைப்பாடு, சில நாடுகளை இலக்குவைத்தல், அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவளித்தல் என்பவற்றை தொடர்ந்தால் அது பொருத்தமற்றவையாகிவிடும் என அவர் கூறினார்.