Election 2018

10/12/2012

| |

சுரேஷின் ஜம்பம் சம்பந்தனிடம் பலிக்குமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் 2001  ஆம் ஆண்டு பரிணாமம் பெற்றது. அதற்கு முன்னர் தமிழ்  தேசிய   கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுதம் தாங்கிய இயக்கங்களும், பிற கட்சிகளும் தனித்தனியே தேர்தலில்  போட்டியிட்டு திரும்ப திரும்ப மக்களால் நிராகரிக்கப்பட்டனர்.
விடுதலைப்புலிகளுக்கு  தமிழ்  தேசிய   கூட்டமைப்பில்  அங்கம் வகிக்கும் இயக்கங்கள் தமக்கு எதிராக வெளிப்படையாக செயட்பட்டதோ   அல்லது சம்பந்தன் போன்றவர்கள் மறைமுகமாக செயட்பட்டதோ “காற்றுப்புக முடியாத இடங்களுக்குள் ” எல்லாம் புகுந்து விளையாடிய  விடுதலைப்புலிகளுக்கு    தெரியாத ஒரு விடயமல்ல.வெளிநாட்டு தூதரகங்கள் நடாத்தும் விருந்துபசாரங்களில் தேவைக்கும்  அதிகமான அளவு வெளிநாட்டு குடிவகைகள் குவித்து வைக்கப்படும். வெளிநாட்டு குடிவகைகள் உள்ளே சென்றதும் கொஞ்சம் கொஞ்சமாக உள்நாட்டு விடயங்கள் பரிமாறப்படும். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு தலைவர் ஒருவர் “புலிகளை அளிக்காமல் ஒன்றும் செய்யமுடியாது ” என்று கூறியதும் விடுதலைப்புலிகளுக்கு தெரிந்து தான் இருந்தது. அது மட்டுமல்ல வெளிநாட்டு தலைவர்களை, உயர் அதிகாரிகளை சந்திக்கும் போதும் என்னென்ன கதைத்தார்கள் என்பது புலிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. இவ்வளவும் தெரிந்திருந்தும், காய் நகர்த்தலில் வல்லவர்களான விடுதலைப்புலிகள்  இவர்கள் எல்லோரையும் தமிழ்  தேசிய   கூட்டமைப்பு என்ற கூடாரத்திற்குள் கட்டிப்போட்டதென்பது காரணம் இல்லாமலில்லை.
EPDP யானது தீவுப்பகுதியில் தனது காலைப்பதிப்பதில் ஆரம்பித்து ஏனைய பகுதிகளிற்கும்  தமது பிரசன்னத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. ஏனைய இயக்கங்கள் போன்று இவர்களும் மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாது அந்நியப்பட்டுவிடுவார்கள் என்றே  பலராலும்   எதிர்பார்க்கப்பட்டது. சோறா? சுதந்திரமா?  என்ற கோஷம்   முன்வக்கப்பட்டிருந்த நேரத்தில் EPDP யானது தமிழ் மக்களின், குறிப்பாக தீவுப்பகுதி மக்களின் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டதுடன் வெற்றியும் கண்டது. தமிழ் தலைமைகளினால் சோறும் கிடைக்காமல் சுதந்திரமும் கிடைக்காமல் அலைந்த மக்களுக்கு சோற்றுத் தேவை உட்பட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தமை ஆனது மக்களின் ஆதரவை EPDP யின் பக்கம் திருப்பியது. இதை விடுதலிப்புலிகள் சரியாகவே   கணக்கிட்டிருந்தார்கள். இராணுவ ரீதியில் பலம் பொருந்தியவர்களாக இருந்த விடுதலைப்புலிகள் இந்த நிலை நீடித்தால், அரசியல் ரீதியாக  ஆபத்தில் முடியும் என்பதை  முன்பே உணர்ந்தார்கள். இதனால்தான் தங்களது உறுப்பினர்களை கொன்ற இயக்கத்தவர்களையும், தமிழ் தலைவர்கள் என்று சொல்லப்படுகிறவர்களையும்   இணைத்து தமிழ்  தேசிய   கூட்டமைப்பை ஆரம்பித்தார்கள்.  அவர்கள் கடந்த காலங்களில் மாபெரும் தவறுகளை விட்டிருந்தாலும், EPDP  யின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகவும் தொலை நோக்குடன் தான் செயற்பட்டிருக்கிறார்கள். ஐந்து கட்சிகளை கொண்ட கூட்டமைப்பை உருவாக்கி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எவராலும் தாக்குப்பிடிக்க முடியாதளவு பிரச்சாரத்தை மேற்கொண்டு, எத்தனையோ பழிகளை EPDP மீது போட்டு அதன் முக்கிய உறுப்பினர்கள் பலரை அளித்தும் EPDP யானது 94  ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாள இரண்டு தசாப்தங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வருவதுடன் கடந்த பொது தேர்தலில்  அதிகூடிய விருப்பு வாக்கை  டக்லஸ் பெற்றிருக்கிறார். இத்தனைக்கும் “உனது சகோதரனையும் சகோதரியையும் நிர்வாணமாக கொன்றவர்கள் ” என்ற உணர்ச்சியை தூண்டும் பிரச்சாரங்கள் அரசிற்கெதிராக மேற்கொள்ளப்பட்டிருந்த வேளை அரசாங்கத்தின் பங்காளியாக டக்லஸ் இருந்து வருகின்றார். விடுதலைப்புலிகள் மதிநுட்பத்துடன் தமிழ்  தேசிய   கூட்டமைப்பை  உருவாக்கியிருக்காமல் விட்டிருந்தால் நிலைமை எங்கேயோ போய் முடிந்திருக்கும் .
இவ்வாறு உருவாக்கபட்ட    தமிழ்  தேசிய   கூட்டமைப்பில்   அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன்  என்றால் என்ன, செல்வம் அடைக்கலநாதன் என்றால் என்ன,சம்பந்தன் என்றால் என்ன இவர்கள் அனைவரினதும் தலைவர்கள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டவர்கள் தான். இவ்வாறிருந்தும் தமிழ்  தேசிய   கூட்டமைப்பிற்குள்  தம்மை இணைத்துக்கொண்டதற்கான காரணம் கடந்த காலங்களை மறப்போம், மன்னிப்போம், உரிமைகளை வென்றெடுக்க அனைவரும்  ஒன்றுபடுவோம் என்ற உயர்ந்த நோக்குடன் அல்ல. தமிழ் மக்களின் மேல் உள்ள பாசத்தினால் அல்ல. மக்கள் செல்வாக்கு இல்லாவிடினும் புலிகள் இவர்களை வெல்லவைத்து பாராளுமன்றம் அனுப்புவார்கள் என்ற அவாவினால்தான். இவ்வாறு சுய லாப நோக்குடன் இணைந்து கொண்டவர்களுக்குள் நான் பெரிதா ? நீ பெரிதா ? நானா நீயா ஆங்கிலம் நல்லா கதைப்பது ? நானா நீயா கூட படிச்சது ? நானா நீயா துவக்கு பிடிச்சது ? நானா நீயா மக்களின் பணத்தை கொள்ளையடித்தது ? நானா நீயா புலிகள் போலே நடித்துக்கொண்டு புலிகளை காட்டிக்கொடுத்தது ? என்ற புகைச்சல் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் அண்மையில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சம்பந்தனுக்கேதிரான குற்றச்சாட்டு.
சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் தான் பலமுறை கோரியிருந்தும் தமிழ்  தேசிய   கூட்டமைப்பை  பதிவு செய்யாமல்  சம்பந்தன் இழுத்தடிப்பதாக குற்றம்  சாட்டியுள்ளார். பதிவு செய்யப்படவில்லை என்பது உண்மைதான் ஆனால் இதுதான் உண்மையான காரணமா ? EPDPகு  மக்கள் மத்தியில் பலமுள்ளதாக இருந்திருந்தால் சுரேஷ் அவர்கள் தமிழ்  தேசிய   கூட்டமைப்பு  பதிவுசெய்யப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருப்பாரா ? இல்லை, உண்மை என்னவென்றால், சுமந்திரனின் வருகையின் பின்னர் சுரேஷ் ஓரங்கட்டப்பட்டு வந்திருக்கிறார். வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திக்கும் போது சம்பந்தன், சுமந்திரனையே அழைத்து சென்றிருக்கிறார். தமிழ்  தேசிய   கூட்டமைப்பின் உத்தியோகபூர்வமான பேச்சாளராக சுரேஷ் இருந்தும் ஊடகங்களுக்கு  குறிப்பாக  ஆங்கில ஊடகங்களிற்கு சுமந்திரனே பேட்டிகளை வழங்கி வந்துள்ளார். “நாங்கள் ஆயுதம் தூக்காதவர்கள்” என்று சம்பந்தன் கூறியதன் மூலம் சுரேஷ் ஆயுதம் தூக்கியவர், கொலைகள் கடத்தல்களில் ஈடுபட்டவர் என்பதை மறைமுகமாக குறிபிட்டமை போன்றன   சுரேஷை ஓரங்கட்டுவதற்கான  முயற்சியே.
இயற்கையாகவே இறுமாப்பு குணாம்சத்தை கொண்ட சம்பந்தன் புலிகளின் காலத்தில் தமிழ் செல்வன் போன்றவர்களுக்கெல்லாம் சலாம் போட்டிருக்கிறார். புலிகள் ஆயுதங்களுடன் உலா வந்த நேரத்தில் கொஞ்சிக்குலாவி அவர்களுடன் திரிந்தவர் தான் சம்மந்தன். அந்த நேரத்தில் தாங்கள் ஆயுதம் தூக்காத மகான்கள்  என்றெல்லாம் கூறவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளிப்படையாக தனக்கெதிராக கிளர்ந்தெளுவார் என்பது  சம்பந்தன் எதிர்பார்க்காத ஒன்று தான். அரசியல் களங்கள் பலவற்றை கண்ட சம்பந்தனுக்கு சுரேஷ் ஒரு  ஜுஜுபி. சுரேஷின் உத்தரவின் பேரில் புலி உறுப்பினர்களை கொன்றது, கட்டாய ஆட்சேர்ப்பு, மண்டையன் குழு போன்றவற்றை வைத்தே சுரேஷை இலகுவாக அம்பலப்படுத்திவிடலாம்  என சம்பந்தன் எண்ணக்கூடும். அதே நேரத்தில், தமிழ்  தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டமொன்றில் சரவணபவன் ஒரு சிறு விடயத்தில் முரண்பட்ட போது  “நாங்கள் இஞ்ச யாவாரம் செய்து சனத்திண்ட பணத்தை சுருட்டிப்போட்டு அரசியல் செய்யேல்ல ” என்று சற்று காட்டமாக சொன்னதும் , சரவணபவன் வாலை  சுருட்டிக்கொண்டு இருந்தது போல சுரேஷ் இருக்கப்போவதில்லை. சம்பந்தனின் குணாம்சம் தெரிந்திருந்தும் எதுவித பின்னணியும் இல்லாமல் சுரேஷ் கோதாவில் இறங்கியிருக்க முடியாது. புலம்பெயர் தமிழர்களை பொறுத்த மட்டில் கணிசமானவர்கள் சுரேஷின் பக்கம் நிற்கிறார்கள். உள்ளூர் பத்திரிகைகள் சில சுரேஷின் அறிக்கையை இருட்டடிப்பு  செய்திருந்த போதிலும் புலிகளின் உத்தியோகபூர்வமான   பத்திரிகைகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தமை  இதற்கு சான்றாகும் .
சம்பந்தன் போன்றவர்களிடம் கல்வியறிவு, பேச்சாற்றல், பணபலம் போன்றன இருந்தும் காலம் காலமாக தமிழ் மக்கள் தமது பூரண ஆதரவை வழங்கியிருந்தும் இந்த  தலைமை தமிழ் மக்களுக்கு கண்ணீர்,கம்பலை, உயிரிழப்பு, பொருளிழப்பு , இடப்பெயர்வு  போன்றவற்றை தவிர  எதைத்தான் பெற்றுக்கொடுத்திருக்கிறது ? முருக்கு பருத்தும் தூணுக்கு உதவாததுபோல் இவர்கள் பலம் பெற்றாலும்  மக்கள் எவரும்  பயனடையப்போவதில்லை. இதுதான் சம்பந்தன் போன்றவர்கள் பற்றி தமிழ் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள கருத்தாகும். இதை உறுதி செய்வது போலவே இவர்களது நடவடிக்கைகளும் மைந்துள்ளன.
என்னதான் இருப்பினும் சுரேஷ் அவர்கள் சம்பந்தனை ஒரு உலுப்பு உளிப்பித்தான் போட்டார். ஆனால் அவர் இப்போதைக்கு தமிழ்  தேசிய   கூட்டமைப்பை விட்டு வெளியேறப்போவதில்லை. வெளியேறினால் நாடு ரோட்டில் தான் நி ற்க வேண்டி  வரும் என்பது சுரேஷிற்கு நன்றாக தெரியும். இவர்கள் எல்லாம் தங்கள் தங்களது கட்சி பலத்தில் நிற்பவர்கள் அல்ல. கருணாதியின் பாஷையில் சொலவதானால் ஸ்டான்டில்லாத  பைசிக்கில்கள். மாற்றான் தாய் மனப்பான்மையுடன்  தம்மை  நடத்துவதாக கூறிக்கொண்டாலும்  அவர்களின் காலில் விழுந்தாவது தேர்தலில் வென்றுவிடவேண்டும் என எண்ணும் மானஸ்தர்கள்.
என்னதான் இருப்பினும் சுரேஷின் ஜம்பம் சம்பந்தினிடம் பலிக்கப்போவதில்லை. அவர் சேரக்கூடாதவர்களிடம் எல்லாம் பின்கதவால் சேர்ந்து ஓரங்கட்ட தயங்கப்போவதில்லை.
பொன்.வாதவூரன்*http://salasalappu.com