10/18/2012

| |

திருச்சி ஐஎஸ்ஐ உளவாளி.. பாகிஸ்தானின் இலங்கை தூதரக அதிகாரி மீது ‘க்யூ பிராஞ்ச்’ வழக்கு

தஞ்சாவூர் அழகம்மாள்புரம் பகுதியை சேர்ந்த தமீம் அன்சாரி (35) தீவிரவாத செயல்களுக்கு உதவி வருவதாக வந்த தகவலின்பேரில் தமிழக சைபர் கிரைம் போலீசார் அவரது இ-மெயில்களை கண்காணித்து வந்தனர்.
அப்போது இலங்கையில் உள்ள பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளிகளுடன் அவர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை இலங்கை வழியாக பாகிஸ்தானுக்கு இவர் கடத்துவது உறுதியானது. இதையடுத்து இது குறித்து சைபர் கிரைம் போலீசார் மத்திய உளவுப் பிரிவான ஐ.பிக்கு தகவல் தந்தனர்.
இதைத் தொடர்ந்து ஐ.பி மற்றும் வெளிநாட்டு உளவுப் பிரிவான ‘ரா’ ஆகியவை இணைந்து ரகசியமாக விசாரணையைத் துவக்கின. அன்சாரியை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தன.
இந் நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி இலங்கை செல்ல முயன்றார் தமீம் அன்சாரி. இந்தத் தகவலை தமிழக க்யூ பிரிவு போலீசாருக்குத் தெரிவித்தது ஐ.பி. இதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையம் கிளம்பி வந்த அன்சாரியை தஞ்சாவூர் அருகே வைத்து வைத்து க்யூ பிரிவு போலீசார் தமீம் அன்சாரியை கைது செய்தனர். அவரிடமிருந்து லேப்டாப், ராணுவ ரகசியங்கள் அடங்கிய சி.டிக்கள், பென்டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் இந்திய ராணுவத்தின் பாரா கிளைடிங் பயிற்சி, ராணுவ சிக்னல் பிரிவு, நாகப்பட்டிணம் துறைமுகம், ஊட்டி வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ பயிற்சி மையம் ஆகியவை குறித்த சிடிக்களும் அடக்கம்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மத்திய உள்துறையின் கீழ் வரும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (National Investigation Agency-NIA) ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பிரிவினர் அன்சாரியிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் வெங்காய வியாபாரம் தொடர்பாக இலங்கை சென்றபோது ஷாஜி, ஹாஜி ஆகிய 2 பேர் அறிமுகமானதாகவும், அவர்கள் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரியான (பதவியின் பெயர் Visa Counsellor) அமீர் என்ற சுபேர் அலி சித்திக் என்பவரை அறிமுகம் செய்து வைத்ததாகவும் கூறினார்.
அந்த தூதரக அதிகாரி கேட்டுக் கொண்டபடி பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ரகசியங்களை படம் பிடித்து அவருக்கு அனுப்பியதையும் தமீம் அன்சாரி ஒப்புக்கொண்டார்.
இதன்பேரில் க்யூ பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தமீம் அன்சாரி முதல் குற்றவாளியாகவும், இலங்கையைச் சேர்ந்த ஷாஜி 2வது குற்றவாளியாகவும், ஹாஜி 3வது குற்றவாளியாகவும், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி சுபேர் அலி சித்திக் 4வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சுபேர்அலி சித்திக்கை இலங்கையில் இருந்து பாகிஸ்தான் அரசு திரும்ப அழைத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி கியூ பிரிவு போலீசார் கூறுகையில், பல மாதங்களாக தமீம் அன்சாரி நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வந்தன. ராணுவ ரகசியங்கள் கடத்துவது பற்றி போதிய ஆதாரங்கள் கிடைத்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டார். மேலும் தமீம் அன்சாரியிடம் இருந்து பல்வேறு ரகசியங்களை பெற்ற பாகிஸ்தான் தூதரக அதிகாரி சுபேர் அலி சித்திக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமீம் அன்சாரி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (National Security Act-NSA) கீழ் வழக்குகள் பதிவாகலாம் என்று தெரிகிறது.
இந்த முழு விவகாரத்தையும் இலங்கை அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் மத்திய வெளியுறவுத்துறை மூலம் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அலியை காப்பாற்றும் வகையில் அவரை பாகிஸ்தான் அரசு இலங்கையில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டதாகத் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, தமீம் அன்சாரி இந்திய பாதுகாப்பு ரகசியங்களை ஐஎஸ்ஐ அமைப்புக்கு தந்து வந்தது மேலும் உறுதியாகியுள்ளது.