10/27/2012

| |

பா.ஜ. தலைவர் பதவியில் இருந்து நிதின் கட்கரி விலகுகிறார்


அடுத்தடுத்து எழுந்துள்ள சரமாரியான முறைகேடு புகார்களை தொடர்ந்து பா.ஜ. தலைவர் பதவியில் இருந்து நிதின் கட்கரி விலகுகிறார். இடைக்கால தலைவராக அத்வானி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிராவில் விவசாயிகளின் 100 ஏக்கர் நிலத்தை நிதின் கட்கரி அபகரித்து கொண்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இதை கட்கரி மறுத்தார். எனினும், நிலத்தை பெற்றுக் கொண்ட அறக்கட்டளையை கட்கரி நடத்துவதாக புகார்கள் எழுந்தன.

 இந்த பரபரப்பு அடங்கும் முன், கட்கரிக்கு எதிராக அடுத்த புகார் கிளம்பியது. கட்கரிக்கு சொந்தமாக மகாராஷ்டிராவில் புர்தி மின் உற்பத்தி நிலையமும் சர்க்கரை ஆலையும் உள்ளன. இந்த நிறுவனங்களில் ஐடியல் ரோடு பில்டர்ஸ் என்ற சாலை கட்டுமான நிறுவனம் ரூ.165 கோடி முதலீடு செய்தது. அதற்கு பிரதிபலனாக, 1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக கட்கரி இருந்தபோது, கட்டுமான நிறுவனத்துக்கு சாலை அமைக்கும் ஒப்பந்தங்கள் முறைகேடாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையும் கட்கரி மறுத்தார். 

மேலும், முறைகேடாக கிடைத்த பணத்தில் 18 நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும் அதன் முதலீட்டாளர்கள் பற்றி போலி யான தகவல்கள், முகவரிகள் கொடுக்கப்பட்டதா கவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. கட்கரியின் கார் டிரைவர் மனோகர் பன்சே மற்றும் கணக்குப்பிள்ளை கவுடு சடே ஆகியோர் ஒரே நாளில் 7 நிறுவனங்களின் இயக்குநர் களாக நியமிக்கப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக மத்திய அரசு உத்தர வின்பேரில் வருமான வரித்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. இதனால், தலைவர் பதவியில் இருந்து விலக அவர் முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.

விலக மாட்டார் பாஜ அறிவிப்பு

இதற்கிடையே நாக்பூரில் இருந்து நேற்று மாலை டெல்லி வந்த நிதின் கட்கரி, கட்சியின் மூத்த தலைவர்  அத்வானியுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, விஜய் கோயல், ஜாவேத்கர் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் பா.ஜ. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் நேற்றிரவு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நிதின் கட்கரி பதவி விலகப்போவதாக வந்துள்ள செய்திகள் அடிப்படையற்றவை. அது உண்மையல்ல. கட்சி முழுமையாக அவரை ஆதரிக்கிறது. எந்த விசாரணையையும் எதிர்க்கொள்ள தயார் என்று அவர் அறிவித்துள்ளார்’’ என்றார்.