10/27/2012

| |

திருமலையில் மாதா சொரூபம் சேதம்

திருகோணமலை பாலையூற்று புனித லூர்து அன்னை ஆலயத்தின் முன்புறமாக அமைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாதவர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

சொரூபம் உடைக்கப்பட்டிருந்ததை இன்று காலை அவதானித்த பொதுமக்கள் இது பற்றி ஆலய பங்குக்குருவானவருக்கு தகவல் கொடுத்தனர். இந்த சொரூபம் நேற்றிரவே உடைக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து பங்;குக்குருவானவர் அருட்திரு.அன்றியாஸ் பெர்ணான்டோ சம்பவம் பற்றி திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

1974ஆம் ஆண்டு அருட்திரு.தியோப்பிளஸ் றாகல் பாலையூற்று பங்குத்தந்தையாக கடைமைபுரிந்த காலத்தில் மேற்படி புனித லூர்து அன்னை சொரூபம்; நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

38 வருடங்களாக இந்த இடத்தில் இருந்த இச் சொரூபம் கடந்த 30 வருட உள்நாட்டு மோதல் காலத்தில்கூட எவ்விதப் பாதிப்பின்றி இருந்தது என்றும், தற்போதைய அமைதிச்சூழலில் இவ்வாறான அனர்தம் இடம்பெற்றமை கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களிற்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் பங்குத்தந்தை அருட்திரு.அன்றியாஸ் பெர்ணான்டோ கருத்து தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.