10/16/2012

| |

மண்முனை பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
மட்டக்களப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படுவான்கரையையும், எழுவான்கரையையும், இணைக்கின்ற பிரதான பாலம் மண்முனை பாலமாகும். இன்று இப் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டுவைத்தார்.

பல நூறு ஆண்டு காலமாக எமது மக்கள் பாதுகாப்பின்றி பயணம் செய்த நீர்மார்க்கமான போக்குவரத்துக்கு இன்று முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசின் நன்கொடையும்,இலங்கையின் நிதியுமாக சேர்த்து சுமார் 1870மில்லியன் செலவில் 210மீட்டர் நீளமும், 9.8 மீட்டர் அகலமும், கொண்டதாக இப் பாலம் அமையவுள்ளது.

கடந்த ஓரிரு ஆண்டுகாலங்களாக, மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்திய ஆளுந்தரப்பு அரச தமிழ் தலைவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் குறித்த பாலத்திற்கான பெருந் தொகைப்பணம் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவினால் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டு காலமாக எமது மக்கள் எதிர்கொண்ட போக்குவரத்து பிரச்சினைக்கு சிறந்த தீர்வு எட்டப்பட்டமையானது. அனைவரினதுமான பாராட்டுக்குரிய விடயமாகும்.
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத், பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அரச அதிபர் சார்ள்ஸ், மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.