10/19/2012

| |

பொன்சேகாவின் கூட்டம் பிசுபிசுப்பு ஐ.தே.க, ஜே.வி.பி. பகிஷ்கரிப்பு டிரான், அர்ஜுன, கரு, மனோ புறக்கணித்தனர்

தேசிய பிக்கு முன்னணியினால் நேற்று (18) ஹைட் பார்க் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு எதிரான கூட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்பட மக்கள் விடுதலை முன்னணியும் பகிஷ்கரித்தமை விசேட அம்சமாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சரத் பொன்சேகாவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய டிரான் அலஸ், அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மனோ கணேசன் ஆகியோரும் இக்கூட்டத்தை பகிஷ்கரித்தனர். இந்நிலையில் மேற்படி கூட்டத்திற்கு ஒரு சில பிக்குமார்களும், சரத் பொன் சேக்காவும், அனோமா பொன்சேக்காவும் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவும், ஜயந்த கெட்டகொட, பாலித்த ரங்க பண்டார, அசோக்க அபேசிங்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் மாத்திரமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. சிரால் லக்திலக்க மற்றும் மைத்திரி குணரத்ன ஆகிய மாகாண சபை உறுப்பினர்களும் மாத்திரமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன் காரணமாக கூட்டத்திற்கு வருகை தந்திருந்த சிறிய தொகை பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதை காணக்கூடியதாக இருந்தது.
மேலும் நேற்றைய (18) கூட்டத்தில் கலந்து கொள்வதாக தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கரு ஜயசூரிய நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நேற்று (18) கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளவில்லையென குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கரு ஜயசூரிய வெளியிட்டிருந்த அறிக்கையில் தமது மனச்சாட்டிக்கு ஏற்ப செயற்படும் கட்சி உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கவோ அல்லது பழிவாங்கவோ கூடாது என தாம் எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
கட்சிக்குள் பிளவு ஏற்படுவதை தடுப்பதற்காகவே தாம் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதென்ற தீர்மானத்தை கைவிட்டதாகவும் கரு ஜயசூரிய வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டிருந்தது.