உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/07/2012

| |

'உள்ளூராட்சி மன்றங்களுக்குள் தோட்டத்துறை மக்களையும் உள்வாங்குக'


நாடாளுமன்றத்தில் உள்ளூராட்சி சபைக்கான சட்டத்திருத்த விவாதத்தில் மலையக தலைவர்கள்  பேசவேண்டும்
இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லைக்குள் மலையகத் தோட்டப்புறங்களையும் உள்வாங்க வேண்டும் என்று மலையக சிவில் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதேச சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்க உரிமை இருக்கும் தோட்டப்புற மக்களுக்கு அந்தப் பிரதேச சபைகளின் சேவைகளைப் பெறுவதில் மட்டும் சட்டரீதியான தடைகள் இருப்பதாக நீண்டகாலமாக சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.இலங்கையின் உள்ளூராட்சி மன்ற முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது.
இதற்கான விவாதத்தின்போது, மலையக மக்களையும் உள்ளூராட்சி நிர்வாக முறைக்குள் உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக சமூக நீதிக்கான மலையக ஒன்றியம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தது.

'சட்டமே தடுக்கிறது'

1987-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்டத்தின்படியும் அதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த கிராமிய சபைகளுக்கான சட்டத்தின்படியும் தோட்டப்புறங்கள் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக எல்லையிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக சமூக நீதிக்கான மலையக ஒன்றியத்தைச் சேர்ந்த என். கருணாகரன் சுட்டிக்காட்டினார்.இதனால் பிரதேச சபைகள் நிறைவேற்ற வேண்டிய குடிநீர், வீதி சீரமைப்பு, கழிவகற்றல், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை மலையக மக்கள் பல தசாப்தங்களாக ஒழுங்காக பெறமுடியாத நிலையில் இருக்கின்றனர்.
பிரதேச சபைகள் தோட்டங்களுக்குள் செயற்பட முடியாதபடி உள்ளூராட்சி நிர்வாக சட்டத்தில் தெளிவான தடைகள் இருப்பதாக என். கருணாகரன் தெரிவித்தார்.
ஆனால் பிரதேச சபை தேர்தல்களில் மட்டும் தோட்ட மக்கள் வாக்களிக்க அனுமதி இருக்கிறது.
இன்று அம்பகமுவை பிரதேசசபையில் உள்ள 23 உறுப்பினர்களில் 17 பேர் மலையகத் தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற போதிலும் அவர்களால் தம்மைத் தெரிவு செய்த மக்களுக்கு சேவை செய்யமுடியாதவாறு சட்டரீதியான தடைகள் இருப்பதாகவும் அந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் மலையக தோட்டப்புறங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டுவிட்ட பின்னணியில் அந்தப் பகுதிகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தோட்ட நிர்வாகங்கள் வசமே உள்ளன.

'சட்டத் திருத்தம் வேண்டும்'


ஆனால் தோட்ட நிர்வாகங்கள் அரசின் கண்காணிப்பை இழந்துவிடுவதால் பெரும்பாலான தோட்டங்கள் அடிப்படை வசதிகள் இன்றி பல தசாப்தங்களாக பின்னடைந்து காணப்படுவதாகவும் மலையக சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னைய அரசாங்கத்தின்போது இருந்த தோட்ட உட்கட்டமைப்புகளுக்கான அமைச்சையும் தற்போதைய அரசாங்கம் ஒழித்துவிட்ட பின்னணியில் அடிப்படை வசதிகளைப் பெறுவதில் தோட்டப்புற மக்கள் பெரும் துயரங்களை சந்தித்துவருவதாக கூறுகின்றனர்.
எனவே, மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளில் மலையக தோட்டத்துறை மக்களையும் உள்வாங்குவதற்கான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிவில் சமூக பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, மலையக தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான அரசியல் கட்சிகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பங்காளிக் கட்சிகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.