உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/23/2012

| |

கைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்தியானந்தா!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கொடுத்துள்ள போலீஸ் புகாரின் பேரில் தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சும் நித்தியானந்தா, தமிழகத்தை விட்டே போய் விட்டார். அவர் தற்போது கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்திற்குப் போயிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அருணகிரிநாதரால் பட்டம் சூட்டப்பட்ட நித்தியானந்தா, அதே அருணகிரிநாதரால் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் மதுரை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரை ஆதீனம் சார்பில் விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நித்தியானந்தாவை நீக்கியிருப்பதால், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியிருந்தார்.
இதையடுத்து அந்தப் புகாரின் பேரில் நித்தியானந்தாவை தூக்கி உள்ளே போட காவல்துறையினர் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதை உணர்ந்த நித்தியானந்தா, தனது திருவண்ணாமலை மடத்தை விட்டு வெளியேறி விட்டாராம்.
அவர் தற்போது பிடதி ஆசிரமத்திற்குப் போய் விட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து திருவண்ணாமலை மடத்தின் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், சுவாமி தலைமறைவாகவில்லை. ஆதீனப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு திருவண்ணாமலையில் அவருக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டன. இதைத் தவிர்க்க அவர் தனது சீடர்களுடன் பிடதி ஆஸ்ரமத்துக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார். இத்துடன், அங்கு இம் மாதம் 28-ம் தேதி வரை நித்யானந்தாவே தியானப் பயற்சி நடத்துகிறார். திருவண்ணாமலைக்கு அவர் எப்போது வருவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றனர்.
ஆனால் இப்போதைக்கு அவர் தமிழ்நாட்டுப் பக்கம் வருவதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள். ஏற்கனவே பிடதி ஆசிரமத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தமிழகத்திற்கு வந்தார் நித்தியானந்தா. தற்போது மறுபடியும் அதே பிடதிக்குப் போயுள்ளார். ஏற்கனவே கர்நாடகத்திலும் அவருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் இருப்பது நினைவிருக்கலாம்.