Election 2018

10/06/2012

| |

அதிபர் தேர்தல்: முதல் விவாதத்தில் ஒபாமாவுக்கு சறுக்கலா?

ராம்னியுடன் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொண்ட ஒபாமாவுக்கு முதல் சுற்று சறுக்கலாகி விட்டதாக பெரும்பான்மையான ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
ஆனாலும் ஒபாமா தேர்தல் பணிக்குழுவினர் பெரிதாக கவலைப்படாமல், அடுத்த சுற்றில் பார்த்துக்கொள்வோம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலின் ஒரு பகுதியாக இரு போட்டியாளர்களும் பங்குபெறும் நேருக்கு நேர் விவாதம், ஜான் கென்னடி – ரிச்சர்ட் நிக்சன் போட்டியிட்ட 1960 தேர்தலில் ஆரம்பமானது. 90 நிமிட விவாத நேரம் முழுவதும், எந்த இடைவேளையும் இல்லாமல் தொலைக்காட்சிகளில் நேரடியாகவும் ஒளிபரப்பப் படுகிறது. எந்த எந்த கட்சியையும் சாராதவர்கள் இந்த மூன்று விவாதங்கள் மூலம் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்கிறார்கள் என்றும் நம்பப்படுகிறது.
திருமண நாளில் ‘ஒண்டிக்கு ஒண்டி’
அக்டோபர் 3 ந் தேதி ஒபாமா – மிஷல் ஒபாமா வின் திருமண நாளாகும். இந்த ஆண்டு அது ஒபாமாவுக்கு முதல் விவாத நாளாகவும் அமைந்து விட்டது. டாஸ் வென்ற ராம்னி, கடைசி முடிவுரை பேச விரும்பியதால், ஒபாமா முதல் கேள்விக்கு பதில் அளிக்க அழைக்கப்பட்டார்.
தான் பதவி ஏற்கும் போது நாடு இருந்த நெருக்கடி நிலையை குறிப்பிட்டு, கடந்த வந்த பாதைகளையும், எதிர் நோக்கியுள்ள சவால்களையும், தனது தலைமையில் எப்படி அதை சமாளித்து முன்னேற்றப் பாதைக்கு செல்லப்போகிறோம் என்று பேசினார்.

ஆவேச ராம்னி-அமைதி ஒபாமா
விவாதத்தை நடத்திய ஜிம் லெஹரர், ஒபாமா முதலில் பேசி முடித்ததும், ராம்னியை அழைத்தார். முதல் பதிலிலேயே ஒபாமாவின் கொள்கைகளை கடுமையாக சாடியதோடு அல்லாமல், இது வரை மேடைகளில் பேசி வந்த அனைத்தையும் மறுக்கவும் செய்தார்.
‘ஏ.. என்னப்பா நடக்குது.. இது வேற வாய் போல!’ என்ற ரீதியில் சற்றே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஒபாமா. ஆனாலும் சுதாரித்துக்கொண்டு, ராம்னியின் புதிய அவதாரத்தை புரிந்து கொண்டவர் போல், தனது அடுத்தடுத்த பதில்களை நேரடியாக மக்களுக்கு சொல்வது போல் ஆரம்பித்து விட்டார். நடுத்தர மக்களின் வாழ்வாதரமே பொருளாதாரத்தின் அடிப்படை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் வகையில் ஒபாமாவின் பதில்கள் அமைந்திருந்தது.
அனைத்து கேள்விகளுக்கும் மிகுந்த வேகத்துடன் உடனுக்குடன் ராம்னி பதிலடி கொடுத்தாலும், ஆட்சிக்கு வந்தால் அரசாங்கத்தின் வருவாயை எப்படி அதிகரிப்பார் என்ற கேள்விக்கு கடைசி வரை தெளிவான பதில் கொடுக்கவில்லை.
ராம்னியின் ஆவேசமான கேள்விகள், குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விவாதத்தை ஒபாமா மிகவும் அமைதியாக கையாண்ட விதம் புதிராக இருந்தது.
ராம்னியின் பெயின் காப்பிடல் நிறுவனம், 47 சதவீத பேச்சு, கேமென் தீவுகளில் முதலீடு, வெளி நாட்டு வங்கிகளில் பணம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து ஒபாமா அமைதி காத்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
ராம்னியின் செல்வாக்கு உயருமா?
ஒபாமாவின் அதிரடி தாக்குதல் இல்லாத நிலையில், விவாதத்தில் ராம்னி வெற்றி பெற்றதாக ஊடகங்கள் உடனடி கருத்துக் கணிப்பை வெளியிட்டன. குடியரசுக் கட்சியினருக்கும், ராம்னிக்கும் உத்வேகத்தை கொடுத்துள்ள இந்த விவாதம், வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்துமா என்பதை வார இறுதியில் வரும் கருத்துக் கணிப்பில் தெரியவரும். முக்கியமான ஒஹயோ மாகாணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக முன்ண்ணியில் இருக்கும் ஒபாமாவை இந்த விவாதம் மூலம் ராம்னி நெருங்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
நேர்மை இல்லாத ராம்னி: ஓபாமா கடும் தாக்கு
விவாத மேடையில் அமைதியாக இருந்த ஒபாமா, அடுத்த நாள் பிரச்சாரத்தில் ராம்னியை கடுமையாக விமரிசித்துள்ளார். பதினெட்டு மாதமாக வெவ்வேறு விதமாக கொள்கைகளை பேசி வந்த ராம்னியை நான் விவாதத்தில் பார்க்கவில்லை. இந்த புதிய அவதார ராம்னி நேர்மையில்லாதவர், தனது உண்மையான நிலைப்பாட்டை மறைத்து பேசினார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஒபாமாவின் பேச்சை பாராட்டிய குடியரசு துணைத் தலைவர் ஜோ பைடன், ‘அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதோ அல்லது மறந்து போவதோ தான் ராம்னியின் தன்மை’ என விமரிசித்துள்ளார்.