11/02/2012

| |

ரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதில் 130 பேர் மாயம்

மியன்மார் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகொன்று வங்காள விரிகுடா பகுதியில் மூழ்கியதில் படகில் இருந்த சுமார் 130 பேரை காணவில்லை என பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மியன்மாரில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு மலேஷியா நோக்கிச் சென்ற படகே மியன்மார், பங்களாதேஷ¤க்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இந்த படகில் 135 பேர் அளவில் இருந்ததாக படகில் இருந்து மீடுகப்பட்ட ஒருவர் கூறியதாக ஏ. எப். பி. செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் படகில் இருந்து தப்பிய 24 வயது இளைஞர் தற்போது பங்களாதேஷ் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தப் படகு சட்ட விரோதமாக மலேசியாவுக்குச் செல்ல முற்பட்டதாக மீட்கப்பட்ட இளைஞர் குறிப்பிட்டதாக பங்களாதேஷ் தென்கிழக்கு முனையான டெக்னாப் பகுதி பொலிஸ் பரிசோதகர் மொஹமட் பர்ஹாத் ஏ. எப். பிக்கு குறிப்பிட்டுள்ளார்.
“படகு மூழ்கும் போது இருள் சூழ்ந்திருந்ததால் தப்பி வந்தவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் தனது உயிரை காப்பாற்றிக் கொண்டுள்ளார்” என்று அந்த பொலிஸார் கூறியுள்ளார். இதில் தப்பிய 6 பேரை மீன்பிடி படகொன்று காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்தப் படகு பங்களாதேஷின் சப்ரங் கிராமத்தில் இருந்து புறப்பட்டிருப்பதாகவும் கூறப்பட் டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் ரொஹிங்கியா முஸ்லிம்கள் மியன்மாரில் இருந்து சட்டவிரோதமாக அயல்நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் அயல்நாடான பங்களாதேஷ¤க்கு அகதிகளாக செல்கின்றனர். இதில் அண்மைய இனக்கலவரத்தால் மேலும்பலர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
எனினும் இந்த படகு எப்போது மூழ்கியது என்பது குறித்து முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூழ்கியதாக பங்களாதேஷ் பொலிஸார் கூறியபோதும் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமையே மூழ்கியதாக பாங்கொக்கை மையமாகக்கொண்டு இயங்கும் ரொஹிங்கியா ஆதரவுக்குழு கூறியுள்ளது. “133 பேரை ஏற்றி மலேஷியா நோக்கிச்சென்ற படகே மூழ்கியுள்ளது. இதில் 6 பேர் தப்பியுள்ளனர். எஞ்சியோரை காணவில்லை” என்று ரொஹிங்கியா ஆதரவுக் குழுவின் இயக்குனர் கிறிஸ் லெவா குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் 10 தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஏற்பட்ட பெளத்தர்களுக்கும் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையிலான இனக்கல வரத்தில் 89 பேர் கொல்லப்பட்டதோடு 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர்.
எனினும் மியன்மாரில் இனக்கலவரம் ஆரம்பமானது தொடக்கம் அங்கிருந்து படகுகளில் வரும் ரொஹிங்கியா முஸ்லிம்களை பங்களாதேஷ் திருப்பி அனுப்பி வருகிறது.
பங்களாதேஷின் இந்த செயலுக்கு ஐ. நா. சபை கண்டனத்தை வெளியிட்டு வருகிறது. ஆனால் 300,000 ரொஹிங்கி அகதிகள் தம்மிடம் இருப்பதாக பங்களாதேஷ் கூறியுள்ளது.
இந்நிலையில் ரொஹிங்கியா அகதிகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட மலேஷியா வுக்கு செல்ல முற்பட்டு வருகின்றனர்.