11/22/2012

| |

காசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்லப்பட்ட இஸ்ரேலிய உளவாளியின் உடல்!


காசா பகுதியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது , இஸ்ரேலிய உளவாளிகள் 6 பேர் பாலஸ்தீன பகுதியில் சி்க்கினார்கள் என ஹமாஸின் அக்சா ரேடியோ செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஹமாஸ் அமைப்பால் உளவாளிகள் என பிடிக்கப்பட்ட 6 பேரில் குறைந்தபட்சம் ஒருவருடைய இறந்த உடலை, மோட்டார் பைக்கில் கட்டி இழுத்தபடி காசா பகுதி வீதியில் ஹமாஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர்.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் இயக்கத்தின் அக்சா ரேடியோ வெளியிட்ட செய்தியில், 6 பேரும் கொல்லப்பட்டனர் என கூறியிருந்தது. நேற்று காலை ஒலிபரப்பான செய்தி அறிக்கையில், “காசா பகுதியில் மறைந்திருந்து, இந்த உளவாளிகள் இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தனர். ஹமாஸ் இயக்கத்தின் உளவுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் பேரில், இவர்கள் கையும் களவுமாக அகப்பட்டனர்” என கூறப்பட்டது.

ஹமாஸிடம் சிக்கிக்கொண்ட 6 பேரிடமும், ஹை-டெக் தகவல் தொடர்பு சாதனங்கள் இருந்ததாக அக்சா ரேடியோ குறிப்பிட்டது.
இவர்கள் காசா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இந்த ஹைடெக் சாதனங்களை இயக்கியதாகவும், இஸ்ரேலிய குண்டுவீச்சு விமானங்கள் காசாவின் மற்றைய பகுதிகள் அனைத்திலும் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்திய போதிலும், இந்த வீடு அமைந்திருந்த இடத்தில் மட்டும் குண்டுகள் ஏதும் விழாமல் பார்த்துக்கொண்டார்கள் என்றும் கூறப்பட்டது.


கொல்லப்பட்ட 6 பேரில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல்கள் மோட்டார் பைக்குகளில் கட்டப்பட்டு வீதி வீதியாக இழுத்துச் செல்லப்பட்டன எனவும் அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மோட்டார் பைக்கில் சென்றவர்கள் வீதிகளில் துப்பாக்கிகளை உயர்த்தியபடி, “உளவாளி.. உளவாளி..” என கோஷமிட்டுக்கொண்டு சென்றதாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
“இஸ்ரேலுக்காக உளவு பார்க்கும் வேறு யாராவது இருந்தால், உங்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்” எனவும் அவர்கள் கோஷமிட்டபடி சென்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.


காசா தகவல்களின்படி, வேன் ஒன்றில் கொண்டுவரப்பட்ட 6 பேரும், நடுவீதியில் இறக்கப்பட்டு, வீதியில் வரிசையாக குப்புற படுக்கும்படி உத்தரவிடப்பட்டனர் எனவும், அதன்பின் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்டவர்கள் தமது உளவாளிகளா என்பது குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.