11/09/2012

| |

தலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை

சீன தலைமைகள் மாறும் நாட்டின் ஆளும் பொதுவுடமை கட்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ஹு ஜின்தாவோ, ஊழல் குறித்து கட்சி அங்கத்தவர்களை எச்சரித்தார்.
2000க்கும் மேற்பட்ட கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், சீன பொதுவுடைமை கட்சியில் ஊழலை ஒழிக்காவிட்டால், கட்சி சீர்குலைந்துவிடும் என ஜனாதிபதி எச்சரித்தார். சீனா எதிர்பாராத வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்நோக்குவதாக கூறிய அவர், அதற்கு முகம் கொடுக்க தேசமே உயர்வான இலக்கோடு கடுமையாக பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.
சீனாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தலைமை மாற்றத்திற்கான முக்கிய ஆளும் கட்சி மாநாடு நேற்று பீஜிங்கில் ஆரம்பமானது. இதனையொட்டி தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு மாநாட்டை ஒட்டி பல அரச எதிர்ப்பாளர்களும் கைது செய்யப்பட்டு அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ஹு ஜின்தாவே கூறும்போது; ‘ஊழலை ஒழிப்பதற்காக சீன பொதுவுடைமை கட்சி இடைவிடாமல் செயலாற்ற வேண்டும். மேலும் கட்சியினரிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும். ஊழலுக்கு எதிரான முயற்சி மற்றும் அரசியல் ஒற்றுமை மட்டுமே, கட்சியின் நீண்டகால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதில் நாம் தவறு செய்வோமானால் அது கட்சிக்கு மிகவும் கேடாக அமைவதுடன் கட்சி சீர்குலையவும் வாய்ப்பாக அமைந்து விடும்’ என்று தெரிவித்தார்.
இதில் சட்டத்தை மீறுபவர் யாராக இருந்தாலும் என்ன பதவியில் இருந்தாலும் நீதிக்கு முன் கொண்டுவரப்படுவார் என ஜனாதிபதி எச்சரித்தார். சீன பொதுவுடைமை கட்சியின் முன்னணி உறுப்பினரான போ எக்சியாலி ஊழல் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எக்சியாலியின் மனைவி பிரிட்டன் தொழிலதிபர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அதேபோல் எக்சியாலியும் ஊழல் குற்றச்சாட்டுக்காக நீதி விசாரணையை எதிர்நோக்கி யுள்ளார்.
சீனாவில் அதிகரித்து வரும் ஊழல் விவகாரம் அந்நாட்டு மக்களுக்கு இடையிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் அண்மை மாதங்களில் மந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் உயர்வான இலக்கோடு கடுமையாக பாடுபட்டு தொடர்ந்து அபிவிருத்தி இலக்கை எட்டி விஞ்ஞான ரீதியிலும் மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என ஜனாதிபதி ஹு ஜின்தாவே வலியுறுத்தியுள்ளார்.
எனினும் ஒருவாரம் நீடிக்கும் சீன பொதுவுடைமை கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி ஹு ஜின்தாவே மற்றும் பிரதமர் வென்ஜியாவோ ஆகியோர் ஓய்வுபெற்று அவர்களுக்கு பதில் புதிய ஜனாதிபதியாக எக்சி ஜின்பின்கும், புதிய பிரதமராக லி கெகியங்கும் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.