11/28/2012

| |

'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் எம்பி

தமிழோசைக்கு வழங்கிய செவ்வி குறித்து தான் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 4 ஆம் மாடி அலுவலகத்தில் அந்த திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரிகளால் தான் சுமார் இரு மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறிதரன் எம்பி கூறியுள்ளார்.
இலங்கை இராணுவத்துக்கு தமிழ் பெண்கள் சேர்க்கப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் தான் பேசிய உரை தொடர்பாகவும், இது தொடர்பாக பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி குறித்தும் தான் விசாரிக்கப்பட்டதாக சிறிதரன் கூறியுள்ளார்.பிசி செவ்வியில் தமிழ் பெண்கள் பாலியல் தொல்லைகள் காரணமாக இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியதாக தான் கூறியதாக தன்னை விசாரித்தவர்கள் தன்னைக் கேட்டதாகவும், ஆனால் தான் அப்படி அந்தச் செவ்வியில் இடம்பெறவில்லை என்று அவர்களுக்கு விளக்கியதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் இது ஒரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை என்று தான் கூறிய கருத்து குறித்தும் தன்னை அவர்கள் விசாரித்ததாகவும் சிறிதரன் கூறினார்.
தான் நாடாளுமன்றத்தில் பேசிய விடயங்கள் தொடர்பில் தன்னை குற்றப் புலனாய்வு பிரிவினர் இதுவரை இருதடவைகள் விசாரித்திருப்பதாக கூறிய சிறிதரன், அது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என்றும் கூறினார்.
இவை குறித்த அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.