11/18/2012

| |

பால் தாக்கரே காலமானார்

இந்தியாவின் கடும்போக்கு ஹிந்து அரசியல் தலைவர்களில் ஒருவரான சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே சனிக்கிழமை பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 86.
நுரையீரல் மற்றும் கணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாக்கரே பாதிக்கப்பட்டிருந்தார். பிற்பகல் 3.30 மணிக்கு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துவிட்டதாக அவரது மருத்துவர் ஜலில் பார்கர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
அவரது உடல்நிலை கடந்த சில நாட்களமாக மோசமடைந்து வந்த நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக நேற்றிரவு வரை சிவசேனைத் தலைவர்கள் கூறிவந்தனர்.
தாக்கரே மறைவை ஒட்டி, மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று மும்பை மக்களை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் என்றும், இறுதி ஊர்வலம் காலை 10 மணிக்குத் துவங்கும் என்றும் செய்திகள் கூறுகின்றன.
அரசியல்வாதியான கார்டூனிஸ்ட்
நாளிதழ் ஒன்றில் கார்டூனிஸ்டாகப் பணியாற்றி வந்த பால் தாக்கரே, பின்னர் அரசியல்வாதியாக மாறினார். வெளிமாநிலங்களில் இருந்து வந்து மகாராஷ்டிர மாநிலத்தில் குடியேறியவர்கள், மராட்டியர்களின் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறிய தாக்கரே, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி, 1960-களின் இறுதியில் சிவசேனைக் கட்சியைத் துவக்கினார். தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் சிவசேனைக் கட்சியின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய நிலை இருந்தது.
மிகவும் சர்ச்சைக்குரிய தலைவராக செயல்பட்டு வந்த பால் தாக்கரே, தேசியவாதம் என்ற பெயரில், ஹிந்து அடிப்படைவாதத்தை பரப்பினார். கடந்த 1993-ல் நடந்த மும்பை கலவரத்தின்போது, முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் எழுதி, இனக்கலவரத்தைத் தூண்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. கலவரம் நடந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், உள்ளூர் நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்தது.
தான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் அல்ல என்று கூறிவந்த பால் தாக்கரே, பாகிஸ்தானுக்கு சாதகமாக நடந்து கொள்வோரை தான் கடுமையாக எதிர்ப்பதாக ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவதைக் கடுமையாக எதிர்த்த சிவசேனை கட்சியினர், பல முறை கிரிக்கெட் மைதானங்களை சேதப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு முறை, 1983-ல் இந்தியா வென்ற உலகக் கோப்பையைக் கூட சேதப்படுத்திவிட்டார்கள்.
காதலர் தினம் கொண்டாடுவோர் மீதும் சிவசேனை தாக்குதல் நடத்தி வந்தது.
சமீப ஆண்டுகளில், சிவசேனைக் கட்சியின் அரசியல் ஆளுமை குறைந்து வந்தாலும் கூட, பால் தாக்கரேவை வணங்கியவர்களும், அவரைக் கண்டு அச்சப்பட்டவர்களும் இருந்துகொண்டுதான் இருந்தார்கள்.
அதனால்தான், கடந்த சில தினங்களாக பால் தாக்கரே உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், அவரது வீட்டைச் சுற்றிலும் மும்பையின் முக்கியப் பகுதிகளிலும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வந்தது.