11/05/2012

| |

நாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ளவர்கள்

வெப்பம் தாங்க முடியாமலும் உரிய மருந்து, உணவு வசதிகள் இன்றியும் துயரங்களை அனுபவிப்பதாக நவ்றூ முகாமில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.ஆஸ்திரேலியா செல்லும் நோக்கில் இலங்கையிலிருந்து படகு மூலமாக சென்று, கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப்பட்டிருந்து, பின்னர் அங்கிருந்து நவ்றூ தீவுக்கு மாற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாடு திரும்பவே எண்ணியுள்ளதாக நவ்றூ தீவு முகாமிலிருந்து பிபிசி தமிழோசையிடம் பேசிய ஒருவர் தெரிவித்தார்.
தமது தஞ்சக் கோரிக்கையை பரிசீலிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் காலதாமதமாகி வருவதால் நாடு திரும்பி விடுவதே நல்ல முடிவு என்று பலரும் எண்ணுவதாக அவர் மேலும் கூறினார்.நவ்றூ தீவில் மிகுந்த துயரங்களுக்கு மத்தியிலேயே தாம் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் நவ்றூ முகாமிலுள்ளவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்அந்த அடிப்படையிலேயே நவ்றூ தீவிலிருந்து இலங்கை திரும்புவதற்கு மேலும் 11 பேர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னும் ஒரு சில மாதங்களில் தமது விசாரணைகளை தொடங்குவது தொடர்பான முடிவு எதுவும் கிடைக்காவிட்டால் நாட்டுக்குத் திரும்புவதற்கே அங்குள்ள இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் பிபிசி தமிழோசையிடம் பேசிய அந்த தஞ்சக் கோரிக்கையாளர் தெரிவித்தார்.

மோசம் செய்யும் ஏஜண்டுகள்

சட்டவிரோத வெளிநாட்டுப் பயண ஏற்பாட்டாளர்களின் ஆசை வார்த்தைகளை நம்பியே தம்மில் பலர் ஏமாந்துபோயிருப்பதாகவும் இன்னும் பலர் படகுகளில் நாளாந்தம் ஆஸ்திரேலியா நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம் ஆஸ்திரேலிய பெருநிலபரப்புக்குள் கொண்டு சேர்ப்பதாகக் கூறி தம்மை கடல் மார்க்கமாக அழைத்துச்சென்ற 'ஏஜண்டுகள்' மிகுதிப் பணத்தைக் கொடுக்குமாறு தமது குடும்பங்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பதாகவும் நவ்றூ தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
தாம் சட்டவிரோத பயணத்தை மேற்கொண்ட காரணத்திற்காக தமது குடும்பங்கள் அதுபற்றி காவல்துறையிடம் முறைப்பாடு செய்யமுடியாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையிலிருந்து சிறு படகுகளில் பயணத்தை தொடங்கி, பின்னர் பெரிய படகுக்கு மாற்றப்பட்டு, ஒரு மாத காலம் கடலில் தத்தளித்த நிலையில் ஆஸ்திரேலிய காவல்படையினரால் மீட்கப்பட்டே தம்மில் பலர் கிறிஸ்மஸ் தீவை சென்றுசேர்ந்ததாகவும் நவ்றூ தீவில் உள்ள இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
நவ்றூ தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்கள் தமது விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் அல்லது ஆஸ்திரேலியாவுக்குள் அனுப்பி அங்கு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரி கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர்.
கடல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்குள் வர முயற்சிப்போரை, அங்கிருந்து நவ்றூ மற்றும் பப்புவா நியூகினி ஆகிய நாடுகளுக்கு அனுப்பி, அங்கிருந்து அவர்களின் தஞ்சக்கோரிக்கையை பரிசீலிக்க ஆஸ்திரேலிய அரசு அண்மையில் சட்டம் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.