11/09/2012

| |

மீண்டும் ஒபாமா!


அமெரிக்கா முன்னேற்றப்பாதையில் செல்லவில்லை என்கிற அவநம்பிக்கை பரவலாக இருந்தாலும்கூட, அமெரிக்க மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவை இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான்.
 நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், இப்போதைய அவரது வெற்றிக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. கடந்த தேர்தலில், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க அதிபராக்கி உலகுக்குத் தங்களது சமத்துவ சிந்தனையை அறிவிக்க விரும்பிய உணர்வுபூர்வமான உந்துதல் இருந்தது. இந்த முறை, பராக் ஒபாமா ஒரு செயல்படும் அதிபர் என்கிற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்களே தவிர, இனமோ, நிறமோ காரணிகளாக இருக்கவில்லை.
 இன்று அமெரிக்கா எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளை வைத்துப் பார்த்தால், நியாயமாக அதிபர் ஒபாமா வெற்றி அடைந்திருக்கக் கூடாது. இந்த அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவிய காலகட்டங்களில் எல்லாம் மக்களின் கோபமும், ஆவேசமும் ஆட்சி மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. 70 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய பொருளாதாரத் தேக்க காலத்தில் அதிபராக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்குப் பிறகு, 8% வேலையில்லாத் திண்டாட்டம் இருந்தும் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பராக் ஒபாமா மட்டுமே. இருவருமே ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
  2008-இல் பதவி ஏற்றபோது, அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருந்தது என்பது மட்டுமல்ல, ஆப்கானிஸ்தான், இராக் என்று அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இருந்தது. தேவையில்லாத யுத்தங்களை இழுத்துப் போட்டுக்கொண்டு, வீணாக அமெரிக்க வீரர்களை உயிரிழக்கச் செய்கிறார் அதிபர் ஜார்ஜ் புஷ் என்கிற அதிருப்தியில் அமெரிக்கா ஆழ்ந்திருந்தபோது, பராக் ஒபாமா ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தென்பட்டார்.
 கடந்த நான்கு வருடங்களில் நிலைமை ஒன்றும் பெரிய அளவில் மாறிவிடவில்லை. சொல்லப்போனால், பொருளாதார நிலைமையில் சொல்லிக்கொள்ளும்படியான மாற்றமெதுவும் இல்லை. வெளிவிவகாரக் கொள்கையைப் பொருத்தவரை, ஈரான் பிரச்னை தொடர்கிறது. லிபியாவில் தலையிட்டதை உலகமே கண்டிக்கிறது. பின்லேடனைக் கண்டுபிடித்து கொன்றது மட்டும்தான் அமெரிக்க மக்களின் ஆமோதிப்பைப் பெற்ற ஒரு நிகழ்வு. ஆனாலும், மக்கள் நிலைமை மாறாததற்கு அதிபர் பராக் ஒபாமாவைக் குற்றப்படுத்தவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
 பொருளாதாரத் தேக்கத்தை அகற்ற அதிபர் ஒபாமா மேற்கொண்ட நடவடிக்கைகள், "வால் ஸ்ட்ரீட்' பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திக் கண்காணிக்கும் நடவடிக்கைகள், மருத்துவக் காப்பீட்டுச் சட்டம் போன்றவை, மக்கள் மனதில் அதிபர் ஒபாமா ஆக்கபூர்வமான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார் என்கிற நம்பிக்கையை அளித்தது. ஒஹையோ மாநிலத்திலுள்ள அமெரிக்க மோட்டார் வாகனத் தொழிலுக்கு ஒபாமா நிர்வாகம் அளித்த ஊக்கமும், தொழிலாளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகக் காரணமாக இருந்தது.
  பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பு என்கிற ஒபாமாவின் திட்டமும், அதற்கு ரோம்னியின் எதிர்ப்பும், பொருளாதாரத் தேக்கத்தை மாற்ற அரசு தலையிட்டாக வேண்டும் என்கிற ஒபாமாவின் கருத்தும், ""தனியாரும், சந்தையும் பார்த்துக்கொள்ளும், அதில் அரசு தலையிடக் கூடாது'' என்கிற ரோம்னியின் கருத்தும், அதிபர் தேர்வு முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நல்வாழ்வுத் திட்டங்களுக்காகப் பணக்காரர்கள் அதிக வரி கொடுப்பது நியாயமில்லை என்கிற குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியின் வாதமேகூட அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கக் கூடும்.
 பத்து சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள லத்தீன் அமெரிக்க வாக்காளர்களும், கறுப்பர் இனத்தவரும், ஆசிய அமெரிக்கர்களும் பெருவாரியாக அதிபர் ஒபாமாவுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். அதிபர் ஒபாமாவை மத்தியதர வகுப்பினரும், அடித்தட்டு மக்களும் ஆதரித்ததற்கு மிக முக்கியமான காரணம், அவர் வேலைவாய்ப்பை அதிகரிப்பார் என்கிற எதிர்பார்ப்பைவிட, சமூகக் காப்பீட்டுச் செலவினங்களைக் குறைக்க மாட்டார் என்பதும், கருக்கலைப்பு, ஒருபால் திருமணம் போன்ற பிரச்னைகளில் எதிர்ப்புக் காட்ட மாட்டார் என்பதும்தான்.
 அதிபர் ஒபாமாவின் வெற்றிக்கு இயற்கை நிறையவே கை கொடுத்தது எனலாம். சமீபத்தில் வீசிய "சாண்டி' புயலின் கோரத் தாண்டவத்தை ஒபாமா நிர்வாகம் கையாண்டவிதம், அவரை எதிர்த்த குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியையே பாராட்ட வைத்தது என்னும்போது, மக்கள் மனநிலை எப்படி வேறாக இருக்க முடியும்? புஷ் நிர்வாகத்தில்  காத்தரீனா புயலை எதிர்கொள்ளத் தெரியாமல் தவித்ததுபோல அல்லாமல், ஒபாமா நிர்வாகம் சுறுசுறுப்பாக இயங்கியதேகூட அவருக்குச் சாதகமான தீர்ப்புக்கு வழிகோலியிருக்கக் கூடும்.
 அமெரிக்க சரித்திரத்திலேயே மிக அதிகமாகப் பணம் செலவழிக்கப்பட்ட அதிபர் தேர்தல் என்கிற பெருமைக்குரிய இந்தத் தேர்தல் முடிவுகள், அதிபர் ஒபாமாவுக்கு முழு வெற்றியையோ, சுதந்திரமாகச் செயல்படும் நிலைமையையோ ஏற்படுத்தி விடவில்லை. "காங்கிரஸ்' எனும் மக்களவையில் முன்போலவே குடியரசுக் கட்சிக்குத்தான் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. "செனட்' எனப்படும் மேலவையில்தான் அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது.

 மக்களின் மறு அங்கீகாரத்தால் கடந்த தடவை இருந்ததைவிட சற்று பலசாலியாக அதிபர்  ஒபாமா காட்சி அளித்தாலும், அவரைச் சுதந்திரமாகச் செயல்பட "காங்கிரஸ்' அனுமதிக்குமா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது! ஆனால்தான் என்ன? "தன்னால் முடியும்' என்கிற அசைக்க முடியாத தன்னம்பிக்கைக்குச் சொந்தக்காரர் ஆயிற்றே அதிபர் பராக் ஒபாமா, அதனால் சமாளித்துக் கொள்வார்!