உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/24/2012

| |

‘புத்தனின் பெயரால்’: வாசிப்பு மனநிலை விவாதம் -4

நன்றி 
http://www.thuuu.net


தில்லை நடேசன் அவர்கள்  நாடக, கூத்து போன்ற கலை வடிவங்களில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர், கட்டுரைகள், கதைகள் போன்ற இலக்கியத்துறைகளிலும் தனது பதிவுகளை செய்து வருபவர். அவரது கூத்து நாடக மரபு பற்றிய ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பொன்றும் வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது.‘புத்தனின் பெயரால்’எனும் நூல்பற்றிய தனது அனுபவத்தை கூறுகின்றார்.
தில்லை நடேசன்: இது ஒரு மேடைப்பேச்சாகவோ அல்லது ஒரு கருத்தரங்காகவோ இல்லாமல் ஒரு கலந்துரையாடலுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இதுபற்றி பேச வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நாவல்,சிறுகதை திரைப்படம் போன்றவற்றை விமர்சனம் செய்வது ஒருவகையாக இருக்கும். இந்த நூலானது திரைப்படங்களை ஒரு தத்துவார்த்த அரசியல் கோட்பாட்டுப் பின்புலத்தில் பார்த்த அனுபவத்தினூடாக எழுதப்பட்ட நூல் எனத்தெரிகின்றது. இவ்வாறான நூலை விமர்சிப்பதென்பது ஒரு வகைஅனுபவமே. இந்த நூலின்  முன்னுரையில் இந்த நூலை எழுதவேண்டும் என்பதற்கான உந்துதலுக்குரிய சில விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இலங்கையில் நடந்த விடுதலைப்போராட்டம், அல்லது விடுதலைப்போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் திரைப்படம் எனும் ஊடகத்தின் ஊடாக அதை எப்படி ஒரு சாட்சியமாக வைக்கலாம் என்பதற்கான நீண்ட தேடல் இந்த நூல் ஆசிரியரிடம் இருக்கின்றது. இவ்வாறான தேடலை நாம் இலக்கியத்தில் அடங்குகின்ற சிறுகதை, நாவல், நாடகம், போன்ற துறைகள் ஊடாகவும் அணுகலாம்.  இந்தக் காலகட்டங்களிலே நிறைய சிறுகதைகள் வந்திருக்கின்றது. சில நாவல்கள் வந்திருக்கின்றன. இது குறித்த நாடகங்களும் வெளிவந்திருக்கின்றது. அதைப்போன்று திரைப்படங்களும் வந்திருக்கின்றது. திரைப்படம் என்பது மற்றைய எல்லா கலை வடிவங்களையும் விட தனித்துவமானது. நாடகம், கூத்து போன்ற கலைவடிவங்களில் பரீட்சயம் உள்ளவன் என்ற வகையில் திரைப்படம் என்பது அதனது ஆளுமை விரிவாக்கம் போன்றவற்றில் ஒரு தனித்துவமான கலைவடிவமே. பொதுவாகவே தமிழ் சினிமா என்று பார்த்தால் அநேகமாக ஜனரஞ்சக சினிமாவாகவே இருக்கின்றது. இந்த நூலாசிரியரின் கவனமும் மையமும் யதார்த்த சினிமா குறித்தே கவனம் கொள்வதாக இருக்கின்றது. இவ்வாறான சினிமாக்கள் ஐரோப்பா,அமெரிக்கா,ஆசியா போன்ற உலகளாவிய ரீதியில் எவ்வாறு அமைந்திருக்கின்றது போன்ற தகவல்களை மிக விரிவாக இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.
இந்த நூல் எனது கையில் கிடைத்ததும் நான் பார்த்த சில தமிழ் படங்களை திரும்பவும் பார்த்தேன் எனக்கு ஒரளவு சிங்களம் புரியும் என்ற வகையில் இந்த நூலில் பேசப்பட்ட சிங்கள சினிமாக்களையும் தேடிப்பார்த்தேன். இதில் அடங்கியுள்ள அனைத்துப்படங்களையும் நான் பார்க்கவில்லை. பார்த்த படங்களின் அடிப்படையில் வைத்துத்தான் பேசுகின்றேன். முக்கியமானது வந்து ஈழத்து தமிழ்தேசிய சினிமா என்ற கருத்தாக்கம் பற்றியது. ஈழத்து தமிழ் தேசிய இலக்கியம் என்ற கருத்தாக்கம் 1956களில் பேசப்பட்டடு வந்ததை நாம் அறிவோம். இந்தக் கருத்தாக்கம் வந்து கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களால் முன்வைக்கப்பட்டு வந்தது. அதேபோன்று சிங்கள தேசியத்திற்கான  நாடக வடிவத்திற்கு எதிர்வீர சரச்சந்திர என்பவரை குறிப்பிடலாம். அவர் வந்து மனமே, சிங்கபாகு போன்ற நாடகங்களை அந்த கருத்தாடலில் முன்வைத்தவர்.  அவர் தனது நாடகத்திற்கான உத்திமுறைகளை பாரம்பரிய கலைவடிவங்களான நாடகம், கூத்து போன்ற கலைகளிலிருந்தே பெறுகின்றார். அது குறித்து அவர் பேசுகின்றபோது எனது இந்த நாடக கூத்து உத்திமுறைகளுக்கு தமிழர்களின் வடமோடி கூத்து நாடகமும் பின்புலமாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். இதன் பிற்பாடுதான் எமது தமிழ் பேரறிஞர்களுக்கு உறைத்து; தமிழர்களுக்கான தேசியநாடக வடிவம் தேவை என்று உணரப்பட்டது. இதில் வந்து சு.வித்தியானந்தன்,தாசியஸ் போன்றவர்கள் கூத்தின் உத்திமுறைகளைக் கொண்டு புதியவகை நாடக முயற்சிகளை மேற்கொண்டார்கள். இன்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக தமிழர்களுக்கான தேசிய நாடகம் ஒன்று உருவாகியுள்ளது என்றே சொல்லலாம். அதேபோன்று ஈழத் தமிழர்களுக்கான சிறுகதைகளும், நாவல்களும் இருக்கின்றது. ஆனால் ஈழத் தமிழர்களுக்கான சினிமா இருக்கா  என்று கேட்டால் அது கேள்வியோடு அடங்கிப் போவதாகவே இருக்கின்றது.
இருந்தாலும் அப்படி ஒரு முயற்சி இருந்திருக்கின்றது. அதை எப்படி நகர்த்த வேண்டும் என்பது குறித்த அபிப்பிராயத்தை இந்த ‘புத்தனின் பெயரால்’எனும் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். சிங்கள சினிமா குறித்து இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றபோது சிங்கள சினிமாவும் ஆரம்பத்தில் இந்தியா சினிமாவின் பாதிப்பாகவே இருந்து வந்தது. 1956 க்கு பிற்பாடு குறிப்பாக ஜேம் பீரீஸ் அவர்களின் வருகைக்குப் பிற்பாடே சிங்களத்திற்கான தனித்துவமான யதார்த்த சினிமாவின் வருகை நிகழ்ந்துள்ளது. இதற்கு இலங்கை அரசாங்கமும் ஆதரவாக இருந்தது என்பதும் ஓர் உண்மை. இதனால் தான் சிங்கள சினிமா வளர்ச்சி பெற்றது இவ்வாறான அரச ஆதரவு இல்லாததால்தான் தமிழர்களின் தேசிய சினிமா வளர்ச்சி பெறவில்லை என்று கூறுகின்ற விமர்சகர்களும் இருக்கின்றார்கள். இந்திய தமிழ் சினிமாவின் தரம் குறித்தும் இதிலே பதிவு செய்திருக்கின்றார். அவை வெறும் மிகையதார்த்தமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மலயாள,வங்காள திரப்படங்கள் அதிகளவு  யதார்த்த திரைப்படங்களாக இருந்தபோதும் தமிழ் சினிமாவில் அதன் வளர்ச்சியின்மை பற்றியும் இந்நூல் பேசுகின்றது.
ஈழத்து தமிழ் சினிமா என்று வருகின்றபோது ஆரம்பமாக ‘பொன்மணி’’வாடைக்காற்று’’குத்துவிளக்கு’போன்றவை ஒரு வகையாகவும். பின்பு ‘நான் உங்கள் தோழன்’ போன்ற எம்.ஜி.ஆர். பாணியில் அமைந்த திரைப்படங்களையும் கணலாம். பின்பு பேராட்ட காலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பு நிதர்சனம் எனும் நிறுவனத்தின் ஊடாக பல குறும்படங்களையும், சில முழுநீளதிரைப்படங்களையும் தாயாரித்து வந்துள்ளது. அதேபோன்று புலம் பெயர்ந்த இடங்களிலும் இதே நிலைமைதான். புலம்பெயர் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், போன்று புலம்பெயர் சினிமாவும் உருவாகி வந்திருக்கின்றது.
இந்த நூலாசிரியர் குறிப்பிடுகின்ற சிங்கள சினிமாக்கள் வந்து மிக முக்கியமான சினிமாக்கள். உண்மையில் சிங்கள சினிமாக்களும் 95 வீதமானவை கமார்சியல் சினிமாதான். அண்மையில் எதுவரையில் வந்த கட்டுரை ஒன்றை அதற்கு ஆதாரமாக நீங்கள் பார்க்கலாம். அங்கு விதிவிலக்காக சில யதார்த்த படங்களுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவே மிக ஆரோக்கியமான விடயம்தான். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில இயக்குனர்கள் உருவாகியிருக்கின்றார்கள்.  இவ்வாறானவர்களின் படைப்புக்கள் வந்து உண்மையிலேயே வீரியமானவைகளாக உள்ளது. இவ்வாறான படைப்புக்கள் தமிழில் வராததற்கான காரணங்கள் என்ன, அதற்கான ஆரம்ப நிகழ்வுகள் நடந்திருக்கின்றதே ஒழிய அவை ஏன் தொடர முடியாது போனது. இவ்வளவு சனத்தொகை கொண்ட தமிழகத்தில் ஏன் அது நடைபெறவில்லை என்ற கேள்விகளை இந்நூலாசிரியர் முன்வைத்து செல்கின்றார். அதற்கான காரணங்களையும் விவாதித்துக்கொண்டு செல்கின்றார் என்பதும் முக்கியமான விசயம்.
ஒரு சமூகவியல் நோக்கில் இந்த சினிமாக்கள் குறித்து இரண்டு விதமான பார்வையில் நாம் பார்க்க வேண்டியுள்ளது. அதிகமான மக்கள்தான்  ஜனரஞ்சகமான  சினிமாவில்  நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களால் யதார்த்த பூர்வமான சினமாவுடன் பரீட்சயம் கொள்ள முடியாதிருப்பதற்கான காரணம் என்ன. நாளாந்தம்  துன்பங்களையும் கஸ்டங்களையும் அனுபவித்துவரும் மக்கள் யதார்த்த பூர்வமான சினிமாக்களை பார்க்க அஞ்சுகின்றார்களா? இந்த மக்களை கவனத்தில் கொள்ளாது யதார்த்த பூர்வமான சினிமாக்கள் பற்றி பேசுவது சரியா போன்ற இரண்டு வித சமூகவியல் பார்வையிலும் நாம் நோக்க வேண்டியுள்ளது. யதார்த்த பூர்வமான, கலாபூர்வமான சினிமாக்கள் என்பது மிக அவசியமானது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
எமது நாட்டில் இன ஒடுக்குமுறை ஒன்று நிகழ்ந்து வருகின்றது, சரிபிழை என்பதற்கு அப்பால் அதற்கு எதிரான ஒரு போராட்டமும் நிகழ்ந்துள்ளது. இந்த இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கான நியாயமான காரணங்களும் இருக்கின்றது. அதற்காக போராடியவர்களின் வராலாறுகளும் இருக்கின்றது. அதேநேரம் எதிர் தரப்பான அரச இராணுவம் என்று பார்க்கின்றபோது சிங்கள மக்கள் மத்தியிலே உள்ள பொருளாதார நெருக்கடிகள், அவர்கள் இராணுவத்தில் இணைவதற்கான அடிப்படைக் காரணங்கள் பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக மாறுகின்ற சமூக பொருளாதார சூழல்களையெல்லாம் இந்த சிங்கள இயக்குனர்கள்  தமது சினிமாக்களில் மிக யதார்த்தபூர்வமாக சித்தரித்து வந்துள்ளனர்.
தீவிர தேசியவாத சிங்கள சினிமாக்களும் வெளிவந்துதான் இருக்கின்றது. இருப்பினும் யதார்த்தவாத சினிமாக்களை எடுத்த குறிப்பிட்ட சில இயக்குனர்கள் அடித்தட்டு மக்ளின் வாழ்க்கை முறை, அவர்கள் இராணுவத்தில் இணைவதற்கான பொருளாதாரத் தேவைகள் குறித்த அடிப்படை உண்மைகளை யதார்த்தபூர்வமாக திரைப்படங்கள் ஊடாக சித்தரித்து வந்துள்ளனர். இதேபோன்று தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பிரச்சனைகளை வெளிப்படுத்தக் கூடியவகையில் சமூவியல்பார்வையில் அமைந்த சினிமாக்கள் வந்திருக்கின்றதா என்றால் அவை கேள்விக்குரியதாகவே உள்ளது. இது வந்து சினிமாவில் மட்டும் அல்ல பொதுவாகவே சிங்கள சமூகத்திலிருந்து குமாரி ஜெயவர்த்தனா போன்ற வரிசையில் நாம் சில சமூகவியலாளர்களை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக இருக்கின்றது. ஈழத் தமிழர்களிலிருந்து சமூகவியலாளர்கள் என்று நாம் யாரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக இருக்கின்றது. தம்பையா என்று ஒருவர் தேசவழமை குறித்த ஒரு சமூக ஆய்வை செய்திருக்கின்றார்
குறுக்கீடு சோபாசக்தி: ஏன் சிவத்தம்பியை சொல்லமுடியாதா? சிவத்தம்பிக்கு என்ன குறை? அரசியல் கருத்துகளில் வேறுபாடு இருக்கலாம் ஆய்வாளர்தானே பேச்சு?
தில்லைநடேசன்: சிவத்தம்பியை ஒரு இலக்கிய ஆய்வாளர் என்றுதான் சொல்லலாம்.
சோபாசக்தி: ஏன் அவர் சமூகவியல் குறித்து எழுதியிருக்கிறார்.
தில்லைநடேசன்: சமூகவியலை தொட்டிருக்கின்றார். முறையான சமூகவியலாளர்கள் எம்மிடம் இல்லாததால் இலக்கியத்துறையில் ஈடுபட்ட கைலாசபதி,சிவத்தம்பி போன்றவர்கள் சமூகவியலுக்குள் சென்றிருக்கிறார்கள். ஆனால் அடிப்படை சமூகவியல் பார்வையில் வந்தவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாதிருக்கின்றது.
1937களில் உருவான சிங்கள சினமாக்களில் 1956களிலிருந்தே யதார்த்த சினிமாக்கள் வெளிவரத் தொடங்கியது. ஈழத்து தமிழ் சினிமாவில் இவ்வாறான ஒரு வளர்ச்சிமுறை ஏன் இல்லாது போனதென்றால் அதற்கு இந்திய தமிழ் சினிமாக்களே அடிப்படைக்காரணம் எனலாம். ஒரு ஆலமரத்துக்கடியில் புல்லு முளைக்காததுபோல் இந்திய தமிழ் சினிமாவின் தாக்கமே ஈழத்து தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்திருக்கின்றது. இந்த நூலில் ஒரு விசயத்தை குறிப்பிடுகின்றார். சிங்கள சினிமாவிலும் இந்திய தமிழ் சினிமாவின் தாக்கம் இருந்திருப்பதாக. அப்படியிருந்தும் சிங்கள சினிமா தனக்கான தனித்துவத்தை தக்கவைத்துள்ளதாக. அதற்கான அடிப்படையாக இருந்தது மொழி என்றே கூறவேண்டும். தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்த நிலைமை நிகழ்ந்ததென்று பார்த்தால் தமிழ் சினிமாவின் வரலாற்றை நாம் பார்க்கவேண்டும். தமிழ் சினிமாவின் ஆரம்பம் இசைநாடகங்களாகவே இருந்துள்ளது. இசைநாடகத்தில் போடப்பட்ட அல்லி அருச்சுனா, பவளக்கொடி, நந்தனார் போன்ற இசைநாடகங்களே திரைப்படங்களாக எடுக்கப்பட்டது. இதற்கடுத்த கட்டமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கில் நிகழ்ந்த வசனகாலகட்டம். இதற்கு அண்ணாத்துரை, கருணாநிதி போன்றவர்கள் பின்னணியாக விளங்கினார்கள். இவர்களது பிரதான அம்சமாக இருந்தது வசனம். இவர்களுக்கு காமெரா முக்கியமாக தெரியவில்லை. நடிப்பு, தொழில்நுட்பம், இசைஅமைப்பு போன்ற அனைத்து வகையிலும் தகுதியுள்ளவர்கள் இருந்தும் யதார்த்த சினிமா உருவாகாததற்கு  காரணமாக இருந்தது தி.மு.கா தான். தி.மு.காவின் அடிப்படை நோக்கமாக இருந்தது ஆரம்பகால புராணப்படங்களுக்கு எதிராக தங்களது கருத்து நிலையில் திரைப்படங்களை எடுக்கவேண்டும் என்று. இருந்தபோதும் நாடகத்தில் விட்ட அதே தவறை சினிமாவிலும் பின்பற்றினார்கள். தமிழுக்கான ஒரு தேசிய சினிமாவை அவர்கள் உருவாக்கவில்லை. இது தி.மு.கா மீது வைக்கப்படும் முக்கியமான ஒரு விமர்சனம். இருந்தாலும் அவர்கள்தான் வசனநாடகங்களை அறிமுகப்படுத்தியதும்,சமூக விமர்சனங்களையும் முன்வைத்தவர்கள். இதில் தி.கவிற்கும்,தி.மு.காவிற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளையும் நாம் பார்க்கவேண்டும். பெரியாருடைய கருத்துக்களை தி.மு.க சினிமாவிற்குள் கொண்டு வந்திருந்தால் அதனது விளைவுகள் வித்தியாசமாக இருந்திருக்கும். பெரியாருடை பெண்ணியக் கருத்துக்கள் இன்றும் நவீனமானது. வடக்கில் சீதையை முன்னிறுத்தியபோது தி.மு.காவினர் கண்ணகியை முன்நிறுத்தினார்கள். அதற்கு மாறாக கற்பெனும் கருத்தியலை இவர்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. யதார்த்தமான சூழலை முன்வைப்பதற்கு இவர்கள் முன்வரவில்லை. இந்தக் காலகட்டத்திற்கு பிற்பாடுதான் காமெராவினால் கதை சொல்லும் நவீன சினிமா தோன்றுகின்றது. எதார்த்தமாக கதை சொல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. பாலுமகேந்திரா,மகேந்திரன்,பாரதிராஜா போன்றவர்களின் முயற்சிகளை குறிப்பிடலாம். ஆனால் இந்த சினிமாகூட நிலைத்து நின்றதா என்றால் இல்லை.10வருடத்திற்கு பிற்பாடு வியாபாரா மசாலா திரைப்படங்களின் எழுச்சியின் காரணமாக இவ்வாறான முயற்சியும் தோல்வி அடைந்தது. இவைகளின் தாக்கமே ஈழத்து தரமான சினிமாவின் முயற்சிக்கும் தடையாக இருந்துள்ளது என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் வெளிவந்த பொன்மணி போன்ற திரைப்படங்களை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் அதற்கு எவ்வாறான ஆதரவு இருந்தது. ஏன் இவ்வாறான திரைப்படத்தை மக்கள் பார்க்க விரும்பவில்லை.
இந்த வகையில் ஈழத்து சிங்கள சினிமாவில் குறிப்பிட்ட சிலர் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.இந்த புத்தகம் படித்ததன் பிற்பாடே தேடிச் சில படங்களைப்பார்த்தேன்.இதில் கூறப்பட்டிருக்கும் அசோக ஹந்தகம வின் அக்ஸர்யா எனும் திரைப்படம், பிரசன்ன விதானகேயின் திரைப்படங்கள் யாவும் யதார்த்த பூர்வமான திரைப்படங்கள். ஆன்மாவின் உணர்வுகளை திரைப்பட மொழியூடாக எவ்வாறு தீண்ட முடியும் என்பதை இந்த சிங்கள இயக்குனர்கள் நிரூபித்து வருகின்றார்கள். இவ்வாறு வந்து இந்த நூல் பல்வேறு சிங்கள தமிழ் சினமாக்களின் அனைத்து அம்சங்களையும் விபரித்து செல்கின்றது. இந்தநூல் தற்போது கவனம் கொள்ளாது போனாலும் 50 வருடங்களுக்கு பிற்பாடு இதனது முக்கியத்துவம் கவனத்தில் கொள்ளப்படும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.
உரையாடல்:
சோபாசக்தி: என்ன புத்தகத்துக்க வரமால் பேசுறீங்க…படிக்கேல்லையோ?
றூபன்: அதுதான் என்ர கேள்வியும்.
தில்லைநடேசன்: புத்தகம் படிச்சனான்.
றூபன்: உங்கட அனுபவத்தைத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறீங்க.
அசுரா: தேவதாசுக்கு ஒரு வேலை இருக்கு இந்த தலைப்பை மாத்தி எழுதவேணும் திலலைநடேசனின் சினிமா,கூத்து, நாடக அனுபவம் என்று.
றமேஸ்: வாசிப்பு மனநிலை என்பதுதானே தலைப்பு. அதனால அவர் தன்ர மனநிலையில்  பேசியிருக்கிறார்.
சோபாசக்தி: அவர் எப்படி மதிப்பிட்டிருக்கின்றார். அது சரியா பிழையா.
தர்மினி: எழுத்தாளரின் மன நிலையையும், உங்கட மனநிலையையும் சொல்லுங்கோவன்.
தில்லைநடேசன்: கலந்துரையாடலில் கதைப்பம்.
தேவதாசன்: எழுத்தாளர் சொன்ன விசயத்தை தனது கருத்தாக முன்வைத்திருக்கிறார். இது அவரின்ர வாசிப்பு மனநிலைதானே.
ஜோய்: கடசியா இவர் வாசிச்ச விசயம் இருக்குத்தானே ‘வரலாறு எழுதுவதிலும் ஆவணங்களைத் திரட்டுவதிலும், 30ஆண்டுகால அனுபவங்களை தொகுப்பதிலும் ஈழத் தமிழர்களிடம் உள்ள அடிப்படைச் சிக்கல்’ என்று ஜமுனா  கூறுவது. அது ஒரு தப்பித்துச் செல்லும் முயற்சியாகவே தெரியுது. வரலாற்றை முழுமையாக பதிவதற்கு ஈழத்தமிழர்களுக்கு அடிப்படைச்சிக்கல் இருக்குது என்று சொல்லவாறார். இந்தப்புத்தகம் முழுமை அடையாது விட்டால் அதற்கும் காரணம் அடிப்படைச்சிக்கல்தான். அடிப்படைச்சிக்கல் என்பது என்ன என்பது கடசிவரை சொல்லப்படவேயில்லை. இதுதான் தப்பித்துப்போகும் முயற்சி என்பது.  அடிப்படைச் சிக்கல்கள் என்ன, அதிலிருந்து மீண்டெழுவது எப்படி என்பதை பதிவாக வைக்க வேண்டும். இல்லாதுபோனால் இது ஒரு முழுமையான நூலாக இருக்கமுடியாது. 2009க்கு முன்பு அடிப்படைச்சிக்கல் பற்றி நாம் கதைத்தனாங்கள் இண்டைக்கு அது இல்லை. இந்த புத்தகமும் 2009 க்கு பிற்பாடுதான் வெளிவந்திருக்கின்றது. எனவே அவருக்கான அடிப்படைச்சிக்கல் என்ன, அல்லது ஈழத் தமிழர்களுக்கான அடிப்படைச் சிக்கல்கள் என்ன?
தில்லைநடேசன்: ஓரளவிற்கு ஆவணங்கள் தொகுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. தனிப்படட ரீதியாகவோ குழுக்கல் சார்ந்தோ அந்த வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கு
சோபாசக்தி: டென்மார்க்கில கே.எஸ்.துரை என்டு ஒரு எழுத்தாளர் இருக்கிறார் அவர் சில குறும்படங்கள், திரைப்படங்கள் எல்லாம் எடுத்திருக்கின்றார். அவர் வந்து தனது கலையுலக வாழ்க்கையை ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். அதில வந்து சுவாரசியமான செய்தி ஒண்டு சொல்லுறார் எப்படியெண்டா, சிங்கள திரைப்படங்களின் வளர்ச்சிக்கு சிங்கள அரசாங்கம் உதவி செய்தது. மானியங்கள் போன்ற உதவிகள். அதேபோல தமிழ் திரைப்படங்களுக்கும் உதவிகள் பெறவேண்டும் எனக்  கருதி 60களில் சில தமிழ் கலைஞர்கள் போய்    அமிர்தலிங்கத்திடம் இதுபற்றி கதைத்திருக்கினம். அமிர்தலிங்கம் ஆக்கள் மிகத் தெளிவாக வந்து அதெல்லாம் இங்கவேணாம் எண்டு சொல்லிப்போட்டினமாம். அதுக்கு இவர் சொல்லற காரணம் என்னெண்டா: தமிழ் நாட்டில வந்து நடிகர்கள் அரசியல் கட்சிகளைதொடங்கி ஆட்சியை பிடித்தார்கள். அதுபோல சிங்களப் பகுதிகளிலும் காமினி பொன்சேகா,விஜயகுமாரணதுங்க போன்றவர்கள் அரசியலுக்கு வந்தார்கள. அதேபோல எங்கட கலைஞர்களும் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என்ற பயத்திலதான் அமிர்தலிங்கம் ஆக்கள் இதெல்லாம் வேணாம் என்று கலைச்சுவிட்டார்கள் என்று அவர் எழுதுறார்.
யோகரட்ணம்: இல்ல அதில ஒரு உண்மை இருக்கு.
சோபாசக்தி: அப்ப விசயம் இருக்கு.
யோகரட்ணம்: இதில நாங்க கவனமாக பார்க்கவேண்டிய ஒரு விசயம் இலங்கை வானொலியில நடக்கும் அத்தனை தமிழ் நிகழ்ச்சிகளையும் இந்திய தமிழர்கள் வரவேற்றார்கள். தமிழகத்து தமிழர்கள் இலங்கைத் தமிழை வரவேற்றார்கள். இலங்கைத் தமிழில் எடுக்கப்படும் தமிழ் சினிமாக்கள் 6-7 நாட்களுக்குமேல்  ஓடுவதில்லை.  நீங்கள் சொன்ன ‘குத்துவிளக்கு’,கண்மணி’,ரக்சிறைவர்,’வாடைக்காற்று’இதெல்லாம் படுத்து தூங்கினதுக்கு காரணம் சாதாரணமான பேச்சுத் தமிழை ரசிக்கத் தவறியதால்தான். அது ஒண்டு. இரண்டாவது அவர் சொன்னது சிங்களசினமாவிற்கு அரசாங்கம் ஆதரவு கொடுத்ததென்பது அது பிழையான தகவல். இலங்கை திரைப்படக் கூட்டுஸ்தாபனம் தான் உதவிகளை செய்தது.ஆரம்பத்தில இந்தியாவில் இருந்து வரும் சினிமா சார்ந்த மஞ்சள் பத்திரிகைகளை தடைசெய்து உள்ளுர் இலக்கியத்தையும், கலைஞர்களையும் ஊக்குவிப்பதற்கான முயற்சிமேற்கொள்ளப்பட்டது. இதில சினிமாவும் அடங்குகின்றது. சினிமாவிற்கும் ஒரு குறிப்பிட்ட நிதியை இலங்கைத் திரைப்படக் கூட்டுஸ்தாபனம்  வழங்கியது. ஆனால் இந்த விசயத்தை எமது தமிழ் அரசியல் தலைமைகள் தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பாதகமாக பார்த்தது. இப்ப இவர் சொன்ன கருத்து மாதிரி இங்க விஜயகுமாரணதுங்க…
சோபாசக்தி: நான் சொல்லேல்ல  கே.எஸ்.துரை சொன்னது.
தில்லைநடேசன்: எனக்கு இது புதுத் தகவல்
யோகரட்ணம்: இதை நீங்கள் பழைய ஆக்களிடமும் கேக்கலாம். இதற்கு யாழ்ப்பாண அரசியல் தலைமை சொன்னது என்னென்றால் எங்கட தொப்புள்கொடி உறவுகள் அறுக்கப்படுகின்றது, அங்கே இருந்து வருகின்ற இலக்கியங்கள் தடுக்கப்படுகின்றது என்றெல்லாம் அந்த முயற்சிக்கு தடையாக இருந்தார்கள். இருந்தபோதும் நீங்க பார்த்தீங்களென்றால் இலங்கை தமிழ்படைப்பாளிகளின் 100 புத்தகங்களுக்கு மேலாக வீரகேசரிபிரசுரமாக வெளிவந்தது. இந்த புத்தகங்களை நீங்கள் தற்போது பேசுகின்ற இந்திய பிரபல்யங்கள் வாசித்துவிட்டு யாழ்ப்பாணத் தமிழிற்கு அடிக்குறிப்பு எழுதுங்கோ என்று கேட்ட வரலாறுகளும் இருக்கு.
தில்லைநடேசன்: இந்திய தமிழ் சினிமாவில் பேசுகிற மொழிக்கும் அவர்கள் சாதாரணமாக பேசுகிறமொழிக்குமே நிறைய வித்தியாசம் இருக்கு.
சோபாசக்தி: இன்னொரு விசயத்தையும் நேர்மையாக ஒத்துக்கொள்ளவேணும் நான் வந்து இலங்கையில வெளிவந்த எல்லா தமிழ் படங்களும் பார்த்திருக்கிறன். ‘வாடைக்காற்று’ ‘பொன்மணி’போன்ற இந்த இரண்டு படத்தை தவிர மற்ற படங்கள் யாராலையும் பார்க்கமுடியாத படங்கள்தான். மிக மோசமான படங்கள் அது கருத்தியல் ரீதியாகவும் மிக மோசம். ஆனால் ‘வாடைக்காற்று’ வெற்றிப்படம். ‘பொன்மணி’ வந்து அது எடுத்துக்கொண்ட விசயம் சீரியஸ். வசனம் எல்லாம் வந்து ‘அவள் ஒரு வெள்ளாடிச்சி’என்று பேசும் வசனங்கள். சாதிப்பிரச்சைனையை மையமாக வைத்து எடுத்த படம் பொன்மணி. அதை ஓடாமல் செய்யுறதுக்கு பலர் பலவிதமான வேலை பார்த்திருப்பார்கள். அந்தப்படம் ஒரு சிங்களவர் இயக்கியது. எழுதியது காவலூர் இராசதுரை எனும் ஒரு இடதுசாரி. சில்லையூர் செல்வராசன் போன்றவர்கள் பங்களிப்பு செய்த படம் அது.
யோகரட்ணம்: மற்றது சிங்கள சினிமாக்களை தயாரித்தவர்கள் அநேகமாக தமிழர்கள். கே.ஜி.குணரட்ணம், ஞானம்ஸ், ரொபின்தம்பு போன்றவர்கள். விஜயகுமாரணதுங்க அறிமுகமானதே ரொபின்தம்பு தயாரித்த படத்தின் மூலமாகவே. கேஜி.குணரட்ணத்திற்கு வத்தளையில மிகப்பெரிய படப்பிடிப்பு தியேட்டரே இருந்தது. ஜே.வி.பிக் கலவரத்தில் கொழுத்தப்பட்டது.
சோபாசக்தி: பிரசன்ன விதானகே வின் படமோ, அசோக ஹந்தகம வின் படமோ தியேட்டரில் ரிலீஸ் பண்ணுவதே பெரிய பிரச்சனையாக இருந்தது. அரசாங்கத்தாலும் பிரச்சனை வேற பல பிரச்சனைகளையும் எதிர்நோக்கியவர்கள் அவர்கள். அவர்களது படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகவும் ஓடுவதில்லை. அங்க இப்பவும் நன்றாக ஓடுற படங்கள் கமார்சியல் படங்கள்தான். அதையும் நாங்க யோசிக்க வேணும்.
யோகரட்ணம்: இந்திய சஞ்சிகைகளின் இறக்குமதி கொஞ்சம் தடைசெய்யப்பட்ட பிறகே இலங்கையில் பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மை வளர்த்துக்கொள்ளவும், பிரபல்யம் பெறவும் காரணமாக இருந்தது. இதற்கு தமிழ்த்தலைமை, குறிப்பாக அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் உள்ளுர பயந்தார்கள். எப்படியென்றால் தங்கட அரசியல இலக்கியத்தில கொண்டுவந்து விடுவார்கள், தங்கட அரசியலை நாடகத்தில கொண்டுவந்து விடுவார்கள், தங்கட அரசியல சினிமாவில கொண்டுவந்து விடுவார்கள் என்பது. இதைத்தான் கே.எஸ் துரை அவர்கள் சொல்லுவதில் ஞாயம் இருக்கு என்று சொன்னேன்.
தில்லை நடேசன்: இது ஒரு முக்கியமான விசயம். 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்தபோதே தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்கள்.ஆனால் அதை எதிர்த்தது யார்? இவர்கள்தான்.ஆங்கிலக்கல்வி தொடரவேண்டும் என்பதுதான் தமிழ் தலைமைகளின் விருப்பமாக இருந்தது. உண்மையில் பண்டாரநாக்கா தான் தமிழ்க் கல்விக்கு அடித்தளம்.
யோகரட்ணம்: அடித்தளம் மட்டுமல்ல நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் சொல்லிவாற விசயம் இதுதான். அதாவது சிங்கள மொழிச்சட்டத்தை கொண்டுவந்தபோது தமிழ் மொழிக்கான விசேடவிதியும் இணைக்கப்பட்டிருந்தது. தமிழ் பேசுகிற ஒவ்வொருவரும் தங்களுடைய பாசையில் எந்தக் காரியமும் மேற்கொள்ளலாம் என்பது விலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த விசயம் மறைக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் சினிமா வளர்ச்சிக்காக இலங்கை அரசாங்கம் பல உதவிகளை செய்தது. ஆனால் அதால தமிழ் அரசியல் தலைமைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை உணர்ந்து அதற்காக அவர்கள் கூறிய காரணம், ஐயோ இந்தியாவிலிருக்கும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளை இது பாதிக்கும் என்று கூறினார்கள்.
சோபாசக்தி: கே.எஸ்.துரை எழுதிய புத்தகத்தில் முக்கியமான விசயம் ஒன்றை அவர்குறிப்பிடுகிறார். தான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாடகம் நடித்ததாகவும் அந்த நாடகத்தின் பெயர் ‘மர்ம மனிதன்’என்பதாகவும், அந்த நாடகத்தை இயக்கியவர் வே.பிராபகரன் என்பதாகவும். இரண்டு பேரும் கிளாஸ் மெட். அப்ப பிரபாகரன் எட்டாம் வகுப்பிலேயே நாடகம் போட்டிருக்கிறார் அந்தநாடகத்திற்கு மர்ம மனிதன் என்றும் பெயர்வைத்திருக்கிறார். நோட் தட் பொயின்ட்.
ரமேஸ்: ’மர்ம மனிதனா ‘ ‘மர்ம சிரிப்பா’?
தேவதாசன்: மற்றது வந்து இலங்கைத் திரைப்படக் கூட்டுஸ்தாபனம்  என்பது சிங்களவர்களுக்கானது மட்டுமல்ல. தமிழ் சினமாக்களுக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்தது. தமிழ் அரசியல் தலைமைகள் தலையிட்டதால் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அவை தடையாக இருந்ததே ஒழிய இலங்கைத் திரைப்படக் கூட்டுஸ்தாபனம் என்பது சிங்களவர்களுக்கு மட்டுமானதாக இருக்கவில்லை.
யோகரட்ணம்: அதோட மிக குப்பையான படங்களை தவிர்க்கவேண்டும் என்றும் அரசாங்கம் கருதியது. கீத் என்கின்ற ஒரு ஹிந்திப்படம் மருதானையில் 3வருசம் தொடர்ச்சியாக ஓடியது. தமிழ் மக்கள் ரசித்து பார்க்கின்ற எம்.ஜி.ஆர். சிவாஜி யின் படங்களை சிங்கள மக்களும் மிக ரசித்து பார்த்தார்கள்.
அரவிந் அப்பாத்துரை: இப்ப நான் தமிழ் படங்கள் அதிகம் பார்ப்பதில்லை என்ன காரணம் என்றால் தமிழ் படத்தில வரும் மிகை நடிப்புகள் பிடிப்பதில்லை. ஒப்பனையும் அவர்கள் கதைசொல்லும் விதமும் எனக்கு பிடிப்பதில்லை. அதனால்தான் நான் அதிகம் தமிழ் படங்கள் பார்ப்தில்லை. நான் எழுதின ‘திரு மாயைகளின் சதிர்’ என்ற நாவல் இருக்கில்லையா அது வந்து தமிழ்சினமாக்கள் பற்றிய கதைதான். இப்ப தமிழில் வந்த யதார்த்த சினிமாபற்றி பேசிநீங்க அதற்கு உதாரணமாக பாலுமகேந்திரா போன்றவர்களை குறிப்பிட்டிருந்தீர்கள். தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று வந்து சடங்கு வகை, இன்னொன்று பிரச்சார வகை. ஆனால் கலை என்ற பக்கத்திற்கே தமிழ் சினிமா என்னும் வரவில்லை. சடங்கு,பிரச்சாரம்  இதுக்குள்ளதான் தமிழ் சினிமா மூழ்கிக் கிடக்குது. ஆரம்பத்தில் நினைத்தேன் இது காதலைப்பற்றிய ஒரு சடங்காக இருப்பதாக. எப்போதும் இந்த சினிமா காதலைப்பற்றித்தானே பேசுகிறது என்று. இப்படி இருக்கும்போது ஒரு படத்தை காட்சிகளை பார்க்காமல் வெறும் வசனங்களை மட்டும் கேட்டுப்ப்பார்த்தபோது அது காதலுக்கும் உரிய சடங்காக தெரியவில்லை. அது கல்யாணத்திற்கான சடங்காக தெரியுது.
இதில நான் தெரிந்து கொண்ட முக்கிய விசயம் என்னவென்றால் இதற்கு வந்து சிவில் அமைதியை காப்பாற்றுவதும் பழைய சடங்குகளை பேணுவதுமே அடிப்படை நோக்கமாக இருக்கின்றது. இதற்கான பின்பலம் எது என்று பார்த்தால் பணம். பணம் படைத்தவர்களே எவ்வாறான மாற்றத்திற்கும் உள்ளாகமல் சமுதாயம் அப்படியே இயங்கவேண்டும் என்பதில் கவனமாக செயல்பட்டு வருகின்றார்கள். சமூகத்தில் எந்த விதமான மாற்றங்களும் நிகழ்ந்து விடக் கூடாதென்பது தமிழ் சினிமாவின் முக்கியமான பொலிசியாக இருக்கின்றது. பணத்தின் அதிகாரம் தான் இதற்கு காரணமாக இருக்கின்றது. என்னுமொரு உதாரணத்தை பாருங்க 60வயது கிழவன் 20 வயதுபாத்திரத்தை ஏற்று நடிப்பது. இது கலை கிடையாது என்னைப் பொறுத்தவரையில் இது சடங்கு. அது மாதிரி பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் 30 வயதை தாண்டிவிட்டால் அம்மா வேசம்தான் போட்டாகணும். அவர்40 வயது வரை மிக அழகாக இருந்தாலும் அவ அம்மா வேசம் தான் போட்டாகணும். அவ கதாநாயகியாக நடிக்க முடியாது. தமிழ் சினிமாவில் உருப்படியான விசயம் என்றால் பாடல்களை சொல்லலாம் படத்தை எவ்வளவுதான் வெறுத்தாலும் பாட்டை நாம் வெறுக்கமுடியாது காரணம் பாட்டு ஒரு அரசியல். பாட்டு என்பது நாம் உட்காந்திருந்துதான் கேட்க வேண்டும் என்பதில்லை. எமது காதுக்குள் எப்போதும் எங்கேயும் கேட்டுக் கொண்டிருக்கும். ஆனால் அந்த பாடல்களிலும் சமுதாய விழுமியங்களில் பேணப்படுகின்ற விசயங்களை தாண்டவும் கூடாது என்கின்ற நிலைமையும் தமிழ் பாடல்களில் பேணப்பட்டுவருகிறது. புரட்சிகரமான சிந்தனைகள் வரவே கூடாது. தமிழ் சினிமாவென்பது கலை என்ற அம்சத்திற்குள் நுழையவில்லை. ஒன்றிரண்டு படங்கள் வந்தது உண்மைதான்.
சோபாசக்தி: கலை சார்ந்து, வாழ்வியல் சார்ந்து ஒரு படத்தை எடுத்து அதை மக்கள் பார்க்கிறார்களா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்க. உண்மையில் அப்படி ஒரு படத்தை எடுத்து தியேட்டருக்கு அனுப்பமுடியாது. படத்தில ஒரு சாதியின்ர பெயர் வந்தா கட், அரசியல் பிரச்சனைகளை வெளிப்படையா சொல்லேலாது இப்படி பல்வேறு பிரச்சனைகள் இருக்கு. செங்கடலில் வந்து ஆரம்பத்தில்  கட்டே கிடையாது ஒரு வருச தடைக்கு பிற்பாடு சிறு மாற்றங்களோடு வந்தது ஆனால் தியேட்டர்களில் ஓடவில்லை. காரணம் நேரடி அரசியலை பேசுகின்ற படம் என்பதால் யாரும் வேண்ட மாட்டார்கள். அந்த ஒரு பிரச்சனை இருக்கு. இது மட்டுமல்ல  சென்சாரில் இருந்து மீட்டெடுத்தாலும் எ சான்றிதழ் கிடைத்தால் வரிவிலக்கு இருக்கின்றது. இது கிடைத்தால் தயாரிப்பில் 30வீதத்தை எடுக்கலாம். இந்த பிரச்சனைகளையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் படங்கள் எடுக்கிறார்கள். சென்சார் என்பது மிகப்பெரிய தடை. உதாரணத்திற்கு பாமாவின் கருக்கு நாவலை படமா எடுக்கேலாது. பாமாவின் நாவலை பறையன, தேவர் என்ற வார்த்தையில்லாமல் எப்படி படமாக எடுகக்க முடியும். சிங்களப்படங்களில் உடல் உறவுக்காட்சிகளெல்லாம் காட்டப்படுகின்றது சில கதைகளுக்கு அவை காட்டப்படவேண்டியது அவசியமாக இருக்கு தமிழ் சினிமாக்களில் இது சாத்தியமேயில்லை.
அரவிந் அப்பாத்துரை: தமிழ் நாட்டில மட்டுமல்ல இந்தியா பூராவுமே கலைப் படைப்புகளுக்கான ஆதரவு இல்லை என்று தான் சொல்லலாம். உலகத்திலேயே வருடத்தில் அதிகமான சினிமா எடுக்கப்படுவது இந்தியாவில்தான் ஆனால் பிரான்சில் நடைபெறும் கான் திரைப்படவிழாவிற்கு எந்த இந்தியப்படமும் தெரிவாவதில்லை.
சோபாசக்தி: அது சரி நீங்க ஜமுனா இராஜேந்திரனின் புத்தகம்பற்றி கதைக்கிற யோசனையில்லையோ?
அசுரா: இவ்வளவு ஒரு முக்கியமான புத்தகம் பற்றி கதைக்காமல் நாங்கள் கதைச்சுக் கொண்டிருக்கின்றோம். இதில வந்து எவ்வளவு முக்கியமான சிங்களப்படங்கள் பற்றிய விபரங்கள் எல்லாம் அடங்கியிருக்கு. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உண்மையில வந்து இவ்வாறான சிங்களப் படங்களையும், தமிழ் குறும்படங்களையும், குறிப்பாக சிங்களப் படங்களை தமிழிற்கு அறிமுகப்படுத்திய வகையில் ஜமுனா இராஜேந்திரனுக்கு நாம் இங்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். இந்த நூலில் அடங்கியுள்ள  சில சிங்களப் படங்களை நான் பார்த்திருக்கின்றேன். உண்மையில் ஜமுனா இராஜேந்திரனின் திரைப்படங்கள் குறித்த அறிமுகம் என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியவிசயம் தான் மிக அழகாக அறிமுகப்படுத்துவார். ஆனால் அவருடைய விமர்சனங்கள் என்று வரும்போதுதான் சிக்கலாகவும், எனக்கு மிக எரிச்சலாகவும் இருக்கும். ஒரு கலைப்படைப்பு என்று வருகின்றபோது ஒரு கலைஞனுக்குரிய பன்முகப்பார்வை முக்கியம் என்று கருதுகின்றேன். விமர்சனம் என்று வருகின்றபோது ஜமுனா இராஜேந்திரன் அவர்கள் தான் பற்றுக்கொண்ட கருத்தியலில், கோட்பாடுகளில் வசப்பட்ட நிலையில் கலைப்படைப்புகளை விமர்ச்சிக்கும் தன்மை ஒரு உண்மையான கலைஞனுக்கு உகந்ததாக எனக்கு தெரியவில்லை. இவரது விமர்சனத்தில் நிறைய முரண்பாடுகளை என்னால் காணக் கூடியதாக இருக்கின்றது.
சோபாசக்தி:  கோட்பாட்டுப் பார்வை பார்க்கிறார் என்று சொல்லுறீங்களா?
அசுரா: பொறுங்கோ நான் அந்த முரண்பாடுகளையும், வேறபாடுகளையும் இந்த நூலில் இருந்து சில பகுதிகளை வாசித்து காட்டி எனது முடிவுக்கு வாறன். இதில மூன்று படங்கள் குறித்த இவரது விமர்சனங்களின் ஆதாரத்தின் அடிப்படையில் இந்த விசயத்தை சொல்லுறன். ஒன்று மோஹன் நியாசின் ‘களு சுது மல்’ எனும் படம், மற்றது அசோக ஹந்தகமவின் ‘கனல் தகிக்கும் சொல்’மூன்றாவது புதியவனின் ‘மண்’ எனும் திரைப்படம். ‘களு சுது மல் ‘எனும் படம் தவிர மற்றைய இரண்டு படமும் நான் பார்த்தனான்.
‘களு சுது மல்’ படத்தில் ஆண் பெண் எனும் இரண்டு தற்கொலைப் போரளிகள் அமைச்சர் ஒருவரை கொல்லும் திட்டத்திற்காக அனுப்பப்ட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக தங்கியிருக்கும்போது. பெண் தற்கொலைப்போராளி உடல் தெரியும் ஆடை அணிந்தபடி ஆண் தற்கொலைப்போராளியை வசப்படுத்தி உடல் உறவு கொள்கிறார். பக்கத்து கடைக்காரன் ஒருவனுடனும் அந்த தற்கொலை பெண் போராளி உடலுறவு கொள்கிறாள். பெண்தற்கொலைப்போராளி கற்பமானதால் தாங்கள் உயிர் வாழ ஆசைப்பட்டு பின்பு அந்தக்கடைக்காரனையே தற்கொலையாளியாக பயன் படுத்துகிறார்கள். இவர்கள் தப்பி வாழ்ந்தபோதும் தலைமை இவர்களை கொல்வதோடு படம் முடிகிறதாம்.
இதற்கு இந்த நூலில் ஜமுனா முன்வைக்கும் விமர்சனம்: ‘இந்தத் திரைப்படத்தின் பாலுறவுக் காட்சிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியதேயாகும். தற்கொலையாளிப் பெண்ணும் போராளியும் பதுங்குகுழியில் பாலுறவு கொள்ளும் காட்சியை சந்தோஸ் சிவன் டெர்ரரிஸ்ட் படத்தில் காட்சிப்படுத்தவில்லை. மணிரத்தினம் கூட உயிரே படத்தில் இவ்வாறான விகாரமான சித்தரிப்புகளை மேற்கொள்ளவில்லை. ஒரு மூன்றாம் தரப்படத்தினைப் போல காமக் கணைவீசும் காட்சிகளை, இரவு விடுதி நடன மாதின் மெல்லிய உடைகளுடன் இப்படத்தின் இயக்குனர் பாவித்திருக்கிறார். மேலாகக் கர்ப்பம் பெறாத பெண் தற்கொலையாளிகள், காதல் போன்றவற்றையும் மீறிய அவர்களது கடப்பாட்டு உணர்வுகளை இதுபோன்ற இயக்குனர்களால் தீண்டிப்பார்க்கவும் கூட முடிவதில்லை. என்பது இங்கு குறித்துக் கொள்ளத்தக்கதாகும்.’(ப.ம்48) இவ்வாறு இந்த உடல் உறவு, விகாரம், காமக்கணை வீசப்படுவது குறித்து மூன்றாம் தர சினிமா எனக்குறிப்பிடும் ஜமுனா. அசோக ஹந்தகம வின் ‘கனல் தகிக்கும் சொல்’எனும் திரைப்படத்தை புகழ்ந்து பேசுகிறார். இந்தத் திரைப்படக் கதையானது மகளையே தகப்பன் திருமணம் செய்வதும்  அது பிற்பாடு மகளுக்கு தெரிய வருகின்றபோது அப்பெண்ணின் மனநிலை குறித்த சித்தரிப்பாக விரிகின்றது. இந்தப்படம் பற்றிய ஜமுனாவின் விபரிப்பு இப்படியிருக்கிறது: ‘….ஆடைகலைந்த நிலையில் தனது இருகைகளையும் விரித்தபடி வா வந்து என் மீது படு. இப்படித்தான் என் மீது நீ படுத்திருப்பாய் என்றபடி தன் கால்களுக்கிடையில் அவனை அழுந்தப் புதைக்கிறாள். (ப.ம்.63)   ‘…கனல் தகிக்கும் சொல் இலங்கை மேட்டுக்குடியினரின் பாலுறவு அதிகாரம் முறைசாரா பாலுறவுகள், வன்புணர்ச்சி போன்றவற்றை சித்தரித்ததற்காகவும், புத்தமதக் கலாச்சாரத்தை அவமானப்படுத்துகிறது எனும் காரணத்திற்காகவும் தடைசெய்யப்பட்டது….. திரைப்படத்தில் தாய்க்கும் அவளது பன்னிரெண்டு வயதுச் சிறுவனுக்கும் இடையிலான ஒரு குளியலறைக் காட்சியில், சிறுவனுக்கு முன்பாக அவனது தாய் ஆடைகளைந்து முற்றிலும் அம்மணமான நிலையில் குளியலறைத் தொட்டிக்குள் இறங்கும் காட்சியால் படம் குழந்தைத் துஸ்பிரயோகம் கொண்டது என இலங்கை அரசு வாதிக்கிறது.’ (ப.ம்65)  இது வந்து உளவியல் சார்ந்த அதிர்ச்சி மனோவேதனைக் கதை என்பதாக இயக்குனரும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். கலாச்சார அமைச்சு அரசு போன்ற அதிகாரங்கள் இப்படைத்தை தடைசெய்திருக்கின்றது எனவே இப்படத்தை ஜமுனா பாராட்டியுள்ளார்.
அடுத்தது புதியவனின் ‘மண்’ எனும் திரைப்படம் குறித்து இவ்வாறு ஜமுனா எழுதுகிறார்: ‘மண் படத்தின் சொல்நெறி என்பது யதார்த்தமும் மனோரதியமும் கலந்த கலவையாக நிற்கிறது. படத்தில் நாயகன் நாயகிக்கு இடையிலான கதைக்கும் மிக மிக மையமான கலவிக் காட்சி, உக்கிரமான யதார்த்தமாக ஆகியிருக்கவேண்டும். மாறாக. உருண்டு புரண்டு, மரத்தைச் சுற்றி ஓடிய பாடல் காட்சியாக அது ஆகியிருக்கிறது. யதார்த்தத்திற்கும் மனோரதியத்திற்கும் இடையில் தீர்மானிக்கவியலாத வகையில் இயக்குனர் பயணம் செய்திருப்பது படம் நெடுகத் தெரிகிறது’(ப.ம்129)
இவ்வாறு ‘மண்’படத்தில் கலவிக் காட்சியின் குறைபாட்டையும், ‘கனல் தகிக்கும் சொல்’ படத்திற்கு ஜமுனா இராஜேந்திரன் விளக்கும் நியாயங்களுக்கும் ‘களு சுது மல்’ திரைப்படத்தில் ஜமுனா முரண்படுவதற்கும் உள்ள நியாயத்தை நாம்பார்ப்போம். ‘களு சுது மல் ‘திரைப்படம் அரச, இராணுவ ஒத்துளைப்புடன் எடுக்கப்பட்ட படம் ஒரு போராட்டத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரம் எனும் ஒரு கோட்பாட்டு நியாயங்களுடன் அப்படைத்தை விமர்சித்திருந்தால் அதில் ஏதாவது நியாயம் இருந்திருக்கலாம்.
‘மண்’ படத்தில் கலவிக் காட்சி உக்கிரமாக காட்டப்படவில்லை என்பது குறையாக தெரியும் ஜமுனாவிற்கு தற்கொலைப் போராளிகளின்  உடலுறவு கொள்வது ஏன் விகாரமாக தெரிகின்றது. அதில மணிரத்தினம் கூட இப்படியெல்லாம் செய்யவில்லை என்று வேற நியாம். தற்கொலைப் போராளிகள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு உடல் மொழி இல்லையா? அவர்களுக்கு மனப் பிறழ்வு ஏற்படாதா? அவர்களுக்கு வெடித்துச் சிதறுவதைத் தவிர வேறு நோக்கம் இருக்கமுடியாதா?
ஜமுனா இராஜேந்திரனால் எழுதப்பட்ட ‘புத்தனின் பெயரால்’எனும் நூலில் அவரது விமர்சனங்கள் வெறும் இயந்திரத்தனமானது ஒரு கலைஞனுக்குரிய நுண்ணிய தளங்களுக்கூடாக அவரது விமர்சனம் இயங்கவில்லை. மிக ஆழமாக அவதானித்தீர்களாயின். அரச ஆதரவான படங்களை நிராகரிப்பவராகவும், அரசு தடைசெய்த படங்களை ஆதரிப்பவராகவும் காணப்படுவதை வாசகர்கள் உணரலாம். இருந்தபோதும் ஜமுனா திரைப்படங்களை அறிமுகம் செய்யும் பாணி அலாதியானது. வரவேற்கப்படவேண்டிய விடயம். (நூலிலிருந்து மேற்கோள்கள் உரையாடலில் பேசப்படாதது)
ஜோய்: இங்கு சொல்லப்பட்ட விசயத்திலிருந்தும், நான் வாசித்த வகையிலும் சினிமாவைப் பற்றிய அறிமுகத்தை மட்டும் சொல்லப்பட்டிருந்தால் மிக நல்லாக இருந்திருக்கும் என்றுதான் நினைக்கின்றேன். அதைத்தாண்டி சினிமா பேசுகின்ற அரசியலை சொல்ல வராமல் தான் கொண்ட அரசியலை மட்டுமே பேசுவதாக இருக்கு.
அரவிந் அப்பாத்துரை: ஜமுனா இராஜேந்திரன் அறிமுகம் செய்து வைப்பதில் மிக ரலண்ட் ஆனவர். பெரிய பெரிய தத்துவ ஞானிகளையும் அறிமுகம் செய்து வைப்பார் அது தமிழுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். அது தவிர்த்து அவரது விமர்சனப்பார்வை என்று போனால் வந்து கொஞ்சம்.. நீங்க சொன்ன மாதிரி சிக்கல்தான். அவர் வந்து ஒரு மார்க்சிய கோட்பாட்டில….
சோபாசக்தி: யாரு ஜமுனா இராஜேந்திரனோ!! மார்க்சிசோ!! ஒரு மார்க்சிய கோட்பாட்டாளன் என்றால் அவர் எப்படியுஙகோ விடுதலைப்
புலிகளை ஆதரிப்பார்.