12/25/2012

| |

விளாடிமிர் புடின் இந்தியா விஜயம்: ஆயுத ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோர் இராணுவ மற்றும் ஆயுத பரிமாற்றங்கள், ஒத்துழைப்புகள் குறித்த சில முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகிப்போரில் ரஷ்யாவானது மிக முக்கியமான இடத்தில் உள்ளது. இதில் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வியாபாரம் இவ்விரு நாடுகளுக்குமிடையில் இருந்து வந்துள்ள நிலையில் இந்த வியாபாரம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின் இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தகத்தை 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த எண்ணியுள்ளதாக கூறியுள்ளார்.
எனினும், மருத்துவக் கல்லூரி மாணவி ஒருத்தி ஓடும் பஸ்ஸில் வைத்து பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தலை நகர் டெல்லியில் நடத்தப்படும் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக இந்திய பிரதமர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. எனினும் திட்டமிட்டபடி இருதலைவர்களது சந்திப்பும் நிகழும் என பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவில் இருந்து வெளியாகும். 'இந்து' செய்தித்தாள் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் 2000 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தந்திரோபாய பங்குதாரர் பிரகடனம் இரு நாடுகளுக்கு மிடையில் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என புடின் குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு உயர்ந்த நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, இந்தியாவின் ஆயுத தளபாட கொள்வன வில் 70% ரஷ்யாவிடம் இருந்து வரும் நிலையில் இந்தியா அண்மையில் ஆயுத கொள்வனவு தொடர்பில் அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளது.
இதனால் ரஷ்யாவின் ஆயுத வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்திய விஜயம் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது