12/25/2012

| |

தமிழர்களை உசுப்பேற்றி அதில் குளிர் காய எவரும் முனையக் கூடாது: சந்திரகாந்தன்

'ஆயிரம் பாடசாலைகளைப் பற்றிய விளக்கம் பெற்றோருக்கு எட்ட வேண்டும். எல்லா வசதிகளையும் கொண்ட பாடசாலையாக கிராமங்களில் இது அமையவிருக்கின்றது. முன்னர் சிறந்த கல்வியைத் தேடி நகரப்புறங்களுக்குப் போக வேண்டிய சூழல் இருந்தது.இந்தத் திட்டங்களை உரிய முறையில் அமுல் படுத்துவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கினால் அதன் மூலம் மக்கள் பாடசாலைக் கல்வியிலே நம்பிக்கை வைப்பார்கள். அதன் பிரதிபலிப்பாக எல்லா சவால்களுக்கும் முகம் கொடுக்கக் கூடிய ஒரு சமுதாயம் உருவாகும். அடிப்படைக் கட்டுமானங்கள் இருந்து விட்டால் மாத்திரம் சீரான கல்வியைக் கொண்டு விட்டது மாதிரி இருந்து விடக் கூடாது.' என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் விஷேட ஆலோசகரும் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான சிவனேசதுரைதெரிவித்தார். 
 ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பில் ஆரம்பப் பாடசாலைக்கான அடிக்கல்லை  ஞாயிற்றுக்கிழமை பகல் நாட்டி வைத்த பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள் என்று எல்லோருடைய அர்ப்பணிப்பும் தேவை. இப்பொழுது கல்வி ஒரு மாயை போல மாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது. 21 ஆம் திகதி உலகம் அழிந்து விடும் என்றார்கள். இதனைச் சிலர் நம்பி அஞ்சிப்பயந்தும் இருந்தார்கள்.
ஆனால், அதே தினத்தன்று பிள்ளைகள் சாவகாசமாக பிரத்தியேக வகுப்புக்களுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். உலக சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய தன்னம்பிக்கையை பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு மேலதிகமான சுமையைக் கொடுக்காத வகையில் கல்வியிலே உயர்ச்சி வரவேண்டும்.
ஜனாதிபதியின் நோக்கத்திற்கமைய தொடர்ந்தும் இந்தப் பகுதியிலே எல்லாவகையான அபிவிருத்திப்பணிகளுக்கு நாம் உதவுவோம்.
அரசியல் ரீதியாக எங்களுடைய பகுதிகளில் ஒரு பாரிய பிரச்சினை இருந்து வருகின்றது. தான் மூன்று மில்லியன் ரூபாய் பணத்தை நிவாரண விநியோகத்திற்காக கச்சேரிக்குப் பெற்றுக் கொடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பி பொன் செல்வராசா சொல்லியிருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் காணி விசயங்களிலே அக்கறை காட்டுவதில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார். நாங்கள் கடந்த காலங்களிலும் எதிரிடையாகப் பேசிப் பேசித்தான் எல்லாவற்றையும் இழந்திருக்கின்றோம்.
எங்களுக்கும் மண் பற்று சமூகப் பற்று என்று தெளிவான சிந்தனைகள் உண்டு. ஆனால் எங்கள் மீது குறை கண்டு பிடிக்கும் எண்ணம் மாத்திரம்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உண்டு. தமிழ் சமூகம் இந்தளவு பின்னடைந்து இழப்புக்களைச் சந்தித்தமைக்கு வளர்ச்சியடையாத அரசியல் போராட்டங்களே காரணம். பயங்கரவாதம் காரணமாக நாம் அதிகமதிகம் இழந்து விட்டோம்.
இந்த நாட்டின் தேசிய வருமானத்திலே நாங்களும் எங்களுக்கு உரித்தான போதிய நிதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறான பெருந்தொகை நிதியை அரசிடமிருந்துதான் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனைக் கொண்டு அபிவிருத்திகளையும் முதலீடுகளையும் செய்கின்ற போதுதான் எமது மக்களின் சமூக பொருளாதார கல்வி கலாசார வாழ்வியல் அம்சங்கள் மேம்பாடடையும்.
இதையெல்லாம் செய்யாமல் வெறுமனே ஒரு தொலைபேசி அழைப்பில் பதிலளிப்பதால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை முடிந்ததென்று அர்த்தமாகாது. நான் படையினருக்குக் காணிகளைக் கொடுத்தேனாம் என்று இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறித்திரிகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே சிங்கள மக்கள் வாழ்கிறார்கள் அவர்களுக்கும் சகல உரிமைகளும் உண்டு என்பது இங்குள்ள படித்த சமூகத்திற்குத் தெரியும். மங்கள கம என்பது எங்களது மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்ளடங்கும் சிங்கள மக்கள் வாழ்கின்ற ஒரு கிராமம்.
அது உன்னிச்சைக் குளத்திற்குப் பின்னாலே வருகின்ற ஒரு பகுதி. அந்த மக்களை நாங்கள் விரட்ட முடியாது. ஆனால் தெஹியத்த கண்டிப் பக்கமிருந்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அத்துமீறும் மக்களை வெளியேற்றுவதற்காக நாங்கள் குரல் கொடுத்திருந்தோம்.
இந்தப் புவியியல் அறிவு தெரியாமல் எங்களை விமர்சிக்கும் அறியாமையை நாங்கள் கண்டு கொள்ளத் தேவை இல்லை. மக்களாகிய நீங்கள் ஒன்றை உறுதியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்னமும் போராட்டம் வீர வரலாறு என்று கூறி தமிழ் உணர்வைக் கொண்டு அப்பாவித் தமிழ் மக்களை உசுப்பேற்றி அதில் குளிர் காய எவரும் முனையக் கூடாது.
நமக்குக் கிடைக்கும் வாக்குகளுக்கூடாக மக்கள் நன்மையடையும் வழிவகைகளை நாம் காட்ட வேண்டும். தமிழ் மக்கள் அரசியல் அறிவில் தெளிவு பெற்றால் மாத்திரம்தான் தமிழ் சமூகம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இப்பொழுதிருக்கின்ற சந்தோசத்தை இந்த பாடசாலையிலே கல்வி கற்கப் போகின்ற இளஞ் சிறார்களுக்கும் தக்க வைத்து அதை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதனால் தொடர்ந்தும் ஆக்க பூர்வமான அறிவுபூர்வமான விடயங்களை முன்னெடுப்பதுதான் பொருத்தமானது' என்றார்.